You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 555 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 60 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 495 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர்.
அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர், பார்வையாளர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீரர்களுக்கு மற்றும் காளைகளுக்கு பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த பரிசு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டது.
17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் பைக் பரிசாக பரிசாக அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் 11 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி. பாலா என்பவரின் காளை முதலிடம் பெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மாடு இரண்டாம் இடம் பெற்றது. இவருக்கு மோட்டார் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் காளை மூன்றாவது பரிசினை வென்றது. அவருக்கு எலக்ட்ரிக் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
63 பேர் காயம்
அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், காவலர்கள் 4 பேர், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர்
இதில் பலத்த காயமடைந்த 22 வயது இளைஞர் உட்பட 21 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
'அதிக காளைகளை அடக்கினால் அரசு வேலை'
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார்.
அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
"ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜல்லிக்கட்டைப் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.
"மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர்" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு