காணொளி: 'இனியும் நல்லவனாக இருக்க மாட்டேன்' - இரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
இரான் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் இரு தரப்பும் ஒப்பந்தத்தை எட்ட வெகுதொலைவில் இருப்பதாக இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறி உள்ளார். அமெரிக்கா முன்வைக்கும் ஒப்பந்தத்தை இரான் ஏற்காவிட்டால் ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்துவிடும். இனிமேல் நல்லவனாக இருக்க மாட்டேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் மீண்டும் ஹோர்மூஸை மூடி உள்ளதால் அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது. என்ன நடக்கிறது? இரான் விவகாரத்தின் சமீபத்திய தகவல்களை பார்க்கலாம்.
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் வரை அனைத்து வர்த்தக கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் முழுமையாக திறக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்தார். இந்த முடிவை டிரம்ப் வரவேற்றார். எனினும், இரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடரும் என டிரம்ப் கூறினார்.
இதையடுத்து, ஹோர்மூஸை இரான் மீண்டும் மூடியது. இதனால் அங்கு கப்பல்கள் திரும்பிச் செல்வதை கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் இணையதளமானமெரைன்டிராஃபிக்கில் காண முடிகிறது.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை இரான் படைகள் ஹோர்மூஸ் வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் முகமை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஓர் எண்ணெய்க் கப்பல் இரான் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரிட்டனின் கடல் வர்த்தக நடவடிக்கைகள் (Maritime Trade Operations) கூறி இருந்தது.
இரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா நீக்கும் வரை ஹோர்மூஸ் மூடப்பட்டிருக்கும் என இரான் கூறுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், "ஹோர்மூஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு நடத்த இரான் முடிவு செய்தது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறல். நாங்கள் மிக நியாயமான மற்றும் ஏற்புடைய ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்கிறோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதை ஏற்காவிட்டால், இரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்துவிடும். இனியும் நல்லவனாக இருக்க மாட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், அமெரிக்க பிரதிநிதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு செல்வதாகவும், நாளை (இன்று) மாலை பேச்சுவார்த்தைகளுக்காக அவர்கள் அங்கு இருப்பார்கள் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இரான் போர் குறித்து பேசி இருந்த இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், ஒரு நாட்டின் உரிமையை மிரட்டல் மூலம் அமெரிக்கா மறுக்க முயல்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பை இரான் போருக்குள் இழுத்துள்ளதாக அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சனிக்கிழமை ஒரு நிகழ்வில் பேசிய கமலா ஹாரிஸ், "நெதன்யாகுவால் டிரம்ப் போருக்குள் இழுக்கப்பட்டார். அமெரிக்க மக்கள் விரும்பாத ஒரு போரில் நுழைந்துள்ளார், அமெரிக்கப் படை வீரர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறார்" என கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு