காணொளி: இந்தியாவில் தொடங்கிய பிரமாண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு

காணொளி: இந்தியாவில் தொடங்கிய பிரமாண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு

உங்களுடைய வீடு ஓட்டு வீடா அல்லது மாடி வீடா?

உங்கள் வீட்டில் வைஃபை (wifi) வசதி இருக்கிறதா? அல்லது சாதாரண கைபேசிதான் வைத்துள்ளீர்களா?

திருமணம் ஆனவர்கள் உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தயாராக இருங்கள்... ஏனென்றால் இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.

உலகத்திலேயே மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

மொத்தம் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், 7,000-க்கும் மேற்பட்ட துணை மாவட்டங்கள், 9,700-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சுமார் 6,40,000 கிராமங்களில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கப் போகிறது.

இந்தப் பணியைப் பொதுவாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் போன்ற கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மேற்கொள்வார்கள்.

அப்படியானால், இந்த கணக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம் வீட்டுகளின் பட்டியல் மற்றும் வீட்டுவசதி தொடர்பான கணக்கெடுப்பு (House Listing and Housing Census) என்று அழைக்கப்படுகிறது.

இது மொத்த இந்தியாவையும் ஒவ்வொரு வீடாக வரைபடம் செய்வது போன்றது. ஒவ்வொரு கட்டிடமும் பட்டியலிடப்பட்டு ஒரு எண் வழங்கப்படும். இதில் வீட்டு வகை, அதன் நிலை, வீடு வாடகை வீடா அல்லது சொந்த வீடா போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படும்.

இந்தக் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும்.

அடுத்து இரண்டாம் கட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதில் மக்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும்: வயது, கல்வி, இடம்பெயர்வு, வேலை உள்ளிட்ட தகவல்கள். இது 2027 பிப்ரவரி மாதத்தில், அல்லது அதற்கு முன்பாகக் கூட நடைபெறும்.

மொத்தத்தில், நாட்டின் ஒவ்வொரு நபரையும் கணக்கிடும் இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும் பணியில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (United Nations Population Fund) தகவலின்படி, 2023-ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கடந்த இந்தியா, சீனாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது.

ஆனால், பிறப்பு விகிதம் குறைவதுடன், சராசரி வயது 28 ஆக இருப்பதால், இந்தியா உலகத்திலேயே இளமையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அதன் மக்கள் தொகையில் சுமார் 70% பேர் உழைக்கும் வயதுப் பிரிவில் (working-age group) உள்ளனர்.

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது கணக்கெடுப்பும் ஆன இதில் சாதி தொடர்பான தகவல்களும் சேர்க்கப்பட உள்ளதால், அரசியல், நலத்திட்டங்கள் மற்றும் கொள்கை வடிவமைப்புக்கு இது முக்கியமானதாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு