You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'கட்சி வழங்கிய ஒரு கோடியை திருப்பி அளித்தவர்' - நல்லகண்ணு பற்றிய குறிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர். நல்லகண்ணு, சுதந்திரப் போராட்டத்தில் துவங்கி, தற்போதுவரை மக்களுக்கான போராட்டங்களிலேயே தனது நீண்ட வாழ்நாள் முழுவதையும் செலவழித்த அரிதான தலைவர்களில் ஒருவர்.
'ஆர்.என்.கே. தோழர்' அல்லது 'தோழர் ஆர்.என்.கே' என கட்சியினரால் மிகுந்த உள்ளன்புடன் அழைக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவின் மறைவு, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்தியாவின் விடுதலைக்கு முன்பாக பொது வாழ்வைத் துவங்கி, அதற்குப் பிறகான முக்கால் நூற்றாண்டில் மக்களுக்காகப் போராடிய, குரல் கொடுத்த ஒரு தலைமுறையின் கடைசித் தலைவர் அவர்.
சுதந்திரப் போராட்டத்தில் தன் அரசியல் வாழ்வைத் துவங்கிய அவர், பிறகு சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டம், சூழல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என வாழ்நாள் முழுவதையும் போராட்டங்களிலேயே கழித்தார். மக்களுக்காகப் போராடி, ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தாலும் அவர் ஒரு நாள்கூட, அதிகாரத்தில் இருந்ததில்லை.
1925ஆம் ஆண்டு, அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீ வைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் நல்லகண்ணு. நல்லகண்ணுவின் மூத்த சகோதரரான முத்துராமலிங்கம் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதால், நல்லகண்ணுவுக்கும் அரசியல் ஆர்வம் சிறுவயதிலேயே தொற்றிக் கொண்டது. இதனால், மெல்ல மெல்ல அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார் அவர்.
"நல்ல வசதியான நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு. அவரது தந்தை ஜூரியாக இருந்தவர். அவருடைய அண்ணன் கஸ்டம்ஸில் டெபுடி கலெக்டராக இருந்தார். இருந்தபோதும் வீட்டாரின் எதிர்ப்பை மீறி இடதுசாரிக் கட்சியில் முழு நேர ஊழியராக இணைந்தார் நல்லகண்ணு," என்கிறார் நீண்ட காலம் இடதுசாரி இயக்கத்தில் ஆர். நல்லகண்ணுவுடன் இணைந்து செயல்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன்.
1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்குத் தேர்தல்கள் நடந்தபோது, 12 வயதான நல்லகண்ணு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1940ல் நடந்த சத்யாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும் இருந்தார். ஆனால், விரைவிலேயே அவரது பார்வை மாறியது. தூத்துக்குடியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பாளர்களுடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார் நல்லகண்ணு. இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், அரசியல் ஆர்வம் தீவிரமடைய, படிப்பைக் கைவிட்டார் அவர்.
இந்த காலகட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட துன்பங்களைப் பார்த்த நல்லகண்ணு, அவர்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர் அரசியலுக்குச் செல்வதை நல்லகண்ணுவின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இருந்தபோதும் அவர் பின்வாங்கவில்லை. விரைவிலேயே நல்லகண்ணுவும் அவரது தோழர்களும் விவசாயத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்த ஆரம்பித்தனர்.
"சுதந்திரப் போராட்ட காலத்தில் பல அரசியல் தலைவர்களுக்கு ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது, ஆனால் ஆர். நல்லகண்ணுவைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவம், சாதியப் பிரச்சினைகள் ஆகிய மூன்று தளங்களிலும் போராட வேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ முறையை எதிர்த்ததோடு, அதில் நிலவிய சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடினார் நல்லகண்ணு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத்.
இந்தியா சுதந்திரமைடைந்த பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது நல்லகண்ணு உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். 1949ஆம் ஆண்டு ஒரு நாள் இரவில் காவல்துறை அவரைக் கைதுசெய்தது. அந்தத் தருணத்தில் அவருடைய வயது 23தான்.
அவர் மீதும் வேறு சில தலைவர்கள் மீதும் நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. பிற இடதுசாரிகளைப் பற்றிய தகவல்களைப் பெற கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் நல்லகண்ணு. "விசாரணைக் கைதியாக ஒன்றரை ஆண்டுகள் இருந்தார். இதற்குப் பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வெடி குண்டு வைத்திருந்ததற்காக மேலும் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த சிறை தண்டனையை அவர் தைரியமாக எதிர்கொண்டார். சிறை தண்டனை முடிந்து 1956ல் விடுதலையானார் நல்லகண்ணு" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன். ஒட்டுமொத்தமாக ஒன்பதாண்டுகள் சிறையில் இருந்தார் நல்லகண்ணு. சிறையிலிருந்து வெளிவந்து இரண்டாண்டுகள் கழித்து நல்லகண்ணு திருமணம் செய்துகொண்டார்.
இதற்குப் பிறகு, தொடர்ந்து விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டார் ஆர். நல்லகண்ணு. நல்லகண்ணுவின் போராட்டங்களில், சமீப காலத்தில் மிக முக்கியமான போராட்டமாக பார்க்கப்படுவது தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டம்தான். கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் மிகக் கடுமையாக வாதிட்டார் ஆர். நல்லகண்ணு. முடிவில் தாமிரபரணியில் ஐந்தாண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், போருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்கிறார் சி. மகேந்திரன். தவிர, எப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்குமான அமைப்புகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றார் நல்லகண்ணு. குறிப்பாக, பொடா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கான எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார். ஆனால், தேர்தல்களில் அவருக்கு வெற்றி கிடைத்ததில்லை. 1980ஆம் ஆண்டில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டபோதும் 1999ஆம் ஆண்டில் கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவரால் வெற்றிபெற இயலவில்லை.
தனது எண்பதாவது வயதில் கட்சி தனக்கு வழங்கிய ஒரு கோடி ரூபாயையும் காரையும் மீண்டும் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்திற்கே வழங்கினார் நல்லகண்ணு. அதேபோல, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை அவருக்கு வழங்கியது. அவர் அந்த விருதை ஏற்றுக்கொண்டாலும், அதனுடன் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயைத் திருப்பி அளித்ததுடன், தனது சொந்தப் பணத்திலிருந்து 5,000 ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
"ஆர். நல்லகண்ணு இல்லாத காலம் என்பது ஒரு தலைமுறையின் முடிவு. தங்களுக்கென எதையும் எடுத்துக் கொள்ளாத மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைமுறையை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரும் அவருடைய தோழர்களும் எவ்வித சுயநலமுமற்ற அரசியல் தியாகத்தையும் போராட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்" என்கிறார் பி. சாய்நாத்.
ஒருவகையில் பார்த்தால், இதுவே ஆர். நல்லகண்ணுவினுடைய வாழ்க்கையின் செய்தியாக இருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு