GT vs RR: திருப்பு முனையாக அமைந்த சாய் சுதர்சன் விக்கெட் - 26 பந்துகளில் தலைகீழாக மாறிய ஆட்டம்
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 211 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துகொண்டிருந்த குஜராத் டைட்டன்ஸ், 10.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்த 57 பந்துகளில் 104 ரன்கள் தேவை. கைவசம் இருந்தது 9 விக்கெட்டுகள். 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்ஷன் நல்ல ஃபார்மில் களத்தில் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆடுகளமும் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.
அடுத்த 26 பந்துகளில் நிலைமை அப்படியே மாறியது. 107/1 என்ற நிலையில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் 14.5 ஓவர்களில் 161/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த 26 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தாலும் 6 விக்கெட்டுகளை இழந்தது டைட்டன்ஸ். அது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பெரிதாக பாதித்தது.
என்னதான் ஆட்டம் கடைசி வரை சென்றிருந்தாலும் ரஷீத் கான், ககிஸோ ரபாடா போன்றவர்களால் ஆட்டத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை. அனுபவமிக்க ஃபினிஷர் ஒருவர் இல்லாதது, அவர்களின் வெற்றி வாய்ப்பை பாதித்தது.
ஆட்டத்தை மாற்றிய அந்த 11வது ஓவரை வீச வந்த பிஷ்னாய், 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் எடுத்துவந்தார்.
இதன் காரணமாக இந்த சீசனின் முதலிரு போட்டிகளையும் வென்று சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நெருக்கடிக்கு மத்தியில் ஜொலித்த சாய் சுதர்ஷன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் ஆகியோரின் அரைசதங்கள் மூலமாக 210 என்ற ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ். அதை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தார் சாய் சுதர்ஷன்.
இந்தப் போட்டிக்கு முன்பாக சாய் சுதர்ஷனின் பங்களிப்பு பற்றி பிபிசி தமிழுக்கு எழுதியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பாபா அபராஜித், "குஜராத் அணியின் மிடில் ஆர்டர் பலத்தை வைத்துப் பார்க்கும்போது அந்த அணியின் டாப் 3 பேட்டர்கள் மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் மூவருக்குமே தெரியும் அவர்கள் சற்று நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று. அவர்களுள் ஒருவராவது 16வது ஓவர் வரை ஆடியாக வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், MONEY SHARMA/AFP via Getty Images
பொதுவாகவே அபராஜித் குறிப்பிட்டதுபோல் டைட்டன்ஸின் டாப் 3 பேட்டர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த 2025 சீசனில் கில், சாய் சுதர்ஷன், பட்லர் ஆகியோர் இணைந்து டைட்டன்ஸ் அணியின் ரன்களில் 65 சதவிதத்துக்கும் மேல் எடுத்தனர். அவர்களின் மிடில் ஆர்டர் கடந்த முறை பெரிய பங்களிப்பைக் கொடுக்கவேயில்லை. இந்த சீசனிலும் கூட அதுவே தான் தொடர்ந்தது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியிலும் கூட அதுவே நடந்தது. டைட்டன்ஸ் மிடில் ஆர்டரால் கடைசி 6 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் எப்போதுமே தங்கள் டாப் ஆர்டரையே டைட்டன்ஸ் நம்பியிருக்கிறது.
ஆனால், வழக்கமான எதிர்பார்ப்பை விட இந்தப் போட்டியில் அதிகமான எதிர்பார்ப்பு சாய் சுதர்ஷன் மற்றும் ஜாஸ் பட்லர் மீது இருந்தது. ஏனெனில், டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. இதிலும், பட்லரின் சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு பார்க்கும்போது சாய் சுதர்ஷன் மீதான பொறுப்பு அதீதமாகவே இருந்தது.
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
இப்படியொரு நிலையில் தான் இந்தப் போட்டியில் களமிறங்கி அந்த எதிர்பார்ப்புகளையும் நெருக்கடிகளையும் சமாளித்து சோபித்தார் சாய் சுதர்ஷன். தன்னுடைய வழக்கமான பாணியில் நிதானமும் அதிரடியும் கலந்து ஆடிய அவர் 44 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 9 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்கள் அடித்தார்.
தன் மீதான எதிர்பார்ப்பையும் பொறுப்பையும் சுமந்து கொண்டு அணியை பாதி தூரம் கடத்திச்சென்றுவிட்டார் சாய் சுதர்ஷன். அனுபவமற்ற குமார் குஷாக்ரா ஒருபக்கம் இருந்தாலும், இவர் தனி ஆளாக ரன்ரேட்டை சீராக வைத்திருந்தார். ஆர்ச்சரின் வேகம், சந்தீப் ஷர்மாவின் ஸ்லோயர் பால்கள், ஜடேஜாவின் அனுபவ சுழல், பராக்கின் ஆஃப் ஸ்பின் அனைத்தையும் சிறப்பாகக் கையாண்டு டைட்டன்ஸ் அணியின் ரன்ரேட் 10க்கும் குறையாமல் பார்த்துக்கொண்டார்.
கூக்ளியால் ஆட்டத்தை மாற்றிய ரவி பிஷ்னாய்
அபராஜித் சொன்னதுபோல், இன்னும் 4-5 ஓவர்கள் சாய் சுதர்ஷன் ஆடியிருந்தால் போட்டி முழுமையாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பக்கம் மாறியிருக்கலாம். ஆனால், 11வது ஓவரில் அந்த எண்ணத்துக்கெல்லாம் முட்டுக்கட்டை போடப்பட்டது.
பராக்கின் ஆஃப் ஸ்பின்னை சிறப்பாகக் கையாண்ட சாய் சுதர்ஷன் பிஷ்னாயின் கூக்ளியில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஷார்ட் லென்த்தில் பிட்சான அந்தப் பந்தை அவர் தூக்கியடிக்க, அந்தப் பந்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் ஆனது. இந்த விக்கெட் டைட்டன்ஸின் சரிவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
அடுத்ததாக 13வது ஓவரை வீச வந்த பிஷ்னாய் அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிளென் ஃபிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர் இருவருமே பிஷ்னாயின் கூக்ளியைத் தூக்கியடித்து ஆட்டமிழந்தனர்.
இந்த விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே நாந்த்ரே பர்கர் பந்துவீச்சில் பட்லரும் வெளியேற ஒட்டுமொத்தமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் மீது மொத்த பொறுப்பும் விழுந்தது. ஆனால், அவர்களால் அதை சரியாகக் கையாள முடியவில்லை.
பிஷ்னாய் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிய ராகுல் தெவேதியா, அதற்கடுத்த பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இரண்டு பந்துகள் கழித்து ஷாரூக் கானும் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இப்படியாக கண்ணிமைக்கும் நேரத்தில் 161/7 என்ற நிலையை அடைந்தது குஜராத் டைட்டன்ஸ்.
பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images
மிடில் ஆர்டர் ஏற்படுத்திய நெருக்கடி
கடைசி 5 ஓவர்களில் டைட்டன்ஸ் வெற்றிக்கு தேவைப்பட்டது என்னவோ 50 ரன்கள் தான். இன்றைய காலகட்டத்தில் இது எளிதான இலக்காகவே கருதப்படுகிறது. ஆனால், பிரச்னை என்னவெனில் அந்த அணியின் கையில் விக்கெட்டுகள் அதிகம் இருக்கவில்லை. ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக்கூடிய ஒரு பேட்டரும் களத்தில் இல்லை.
ரஷீத் கான், ககிஸோ ரபாடா போன்றவர்கள் அவ்வப்போது அடிப்பவர்களாக இருந்தாலும், முக்கியமான தருணத்தில் போட்டியை முடித்துக் கொடுக்கும் அளவுக்கான பேட்டர்கள் இல்லை. அது கடைசி 2 ஓவர்களில் தெளிவாகத் தெரிந்தது.
16 முதல் 18 வரையிலான 3 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்த ரஷீத் - ரபாடா கூட்டணியால் கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் எடுக்க முடியவில்லை. ஏனெனில், நெருக்கடியான சூழலில் போட்டியை முடித்துக் கொடுக்கக்கூடிய அனுபவம் அவர்களிடத்தில் இல்லை. இதுதான் டைட்டன்ஸின் மிடில் ஆர்டர் ஏற்படுத்திய நெருக்கடி.
டைட்டன்ஸ் மிடில் ஆர்டரில் ஆடும் கிளென் ஃபிலிப்ஸ் இன்னும் ஐபிஎல் அரங்கில் சோபிக்கவில்லை. இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் (இதையும் சேர்த்து) மொத்தம் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் இன்னும் டி20 ஃபார்மட்டில் தன் பேட்டிங்கை நிரூபிக்கவில்லை. ஷாரூக் கான் கடந்த சில ஆண்டுகளாகவே ஃபார்மில் இல்லை. ராகுல் தெவேதியாவும் கடைசி கட்டத்தில் மட்டுமே ஆடுகிறார். இப்படி அனுபவமும் ஃபார்மும் இல்லாத அந்த மிடில் ஆர்டர் தாக்கமே ஏற்படுத்தவில்லை.
பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images
இந்தப் போட்டியிலும் டைட்டன்ஸின் 4-7 பொசிஷனில் ஆடும் பேட்டர்கள் நால்வரும் இணைந்தே 30 ரன்கள் தான் எடுத்தனர். அவர்கள் விக்கெட்டை தொடர்ச்சியாக இழந்ததால் தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.
போட்டிக்குப் பிறகு பேசிய டைட்டன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரஷீத் கான், "இதுபோன்ற ஆடுகளத்தில், ஒரு ஓவருக்கு 9-10 ரன்கள் எடுப்பது கடினமான காரியம் அல்ல. பவுண்டரிகள் வந்து கொண்டே இருந்தன. அந்த இடைப்பட்ட நேரத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம், அது எங்களை இறுதிவரை அதே வேகத்தைத் தொடர விடாமல் தடுத்துவிட்டது." என்று கூறினார்.
இப்படியொரு மிடில் ஆர்டர் இருப்பதால் தான் டைட்டன்ஸின் டாப்3 மீது பொறுப்பு அதிகமாகிறது. அதனால் தான் சாய் சுதர்ஷன் போன்ற ஒரு பேட்டரின் விக்கெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் தான் அவரது விக்கெட்டை பிஷ்னாய் வீழ்த்தியது ஆட்டத்தின் மிகப் பெரிய திருப்புமுணையாக அமைந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை