You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபரூக் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியை நீட்டிய நபர் - நடந்தது என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா மீது புதன்கிழமை மாலை நடைபெற்ற திருமண நிகழ்வில் தாக்குதல் முயற்சி நடந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை முதலமைச்சர் சுரிந்தர் சௌத்ரியும் அப்போது அவருடன் இருந்தார். இருவரும் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பினர்.
அந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவருகிறது. அந்த வீடியோவை ஃபரூக் அப்துல்லாவின் மகனும் தற்போதைய முதலமைச்சருமான ஒமர் அப்துல்லாவும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், துப்பாக்கி வைத்துள்ள ஒருவர் ஃபரூக் அப்துல்லாவை நோக்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து, ஃபரூக் அப்துல்லாவின் பாதுகாவலர்களும் அங்கிருந்தவர்களும் அந்நபரை கட்டுப்படுத்தியதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
பிடிஐ செய்தி முகமை ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையை மேற்கோளிட்டு, "ஃபரூக் அப்துல்லாவை கொல்வதற்கான முயற்சி காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள ஒமர் அப்துல்லா, "இந்த தாக்குதல் முயற்சியில் என் தந்தை மயிரிழையில் உயிர்பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
காவல்துறை கூறியது என்ன?
ஒமர் அப்துல்லா சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "கடவுள் கருணையுள்ளவர். என் தந்தை நூலிழையில் தப்பித்தார். இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் தற்போதைக்கு தெளிவாக தெரியவில்லை, ஆனால், தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் மிக நெருக்கமாக வந்து சுட்டதாக தெரியவந்துள்ளது," என தெரிவித்துள்ளார்.
மேலும், "அருகிலிருந்து பாதுகாப்பு குழுவின் எச்சரிக்கை உணர்வால், துப்பாக்கி திருப்பப்பட்டு, கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது. தற்போது, பதில்களை விட அதிக கேள்விகளே உள்ளன. இசட் பிளஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சருக்கு நெருக்கமாக ஆயுதம் வைத்துள்ள ஒருவர் எப்படி வந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது," என பதிவிட்டுள்ளார்.
காவல்துறை கூறுகையில், ஃபரூக் அப்துல்லா ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் பகுதியில் உள்ள திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய காவல்தூறையினர், இந்த சம்பவம் நடந்தபோது அவர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் என்றும் அவருடைய பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் தாக்குதலை முறியடித்து அந்நபரை நிகழ்விடத்திலேயே பிடித்ததாகவும் தெரிவித்தனர்.
அந்நபர் ஜம்முவை சேந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
தான் ஃபரூக் அப்துல்லா உடன் இருந்ததாக கூறியுள்ளார் சுரிந்தர் சௌத்ரி. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இப்படியொரு அலட்சியம் எப்படி ஏற்பட்டது என காவல்துறையிடம் கேளுங்கள். உள்ளூர் காவல்துறை அல்லது பாதுகாவலர்களோ அங்கு இல்லை." என்றார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ ஐஜாஸ் அஹ்மத் ஜான் கூறுகையில், "திருமண நிகழ்வில் கலந்துகொள்ள அவர் சென்றார். நாங்கள் எல்லோரும் அவருடன் இருந்தோம். நிகழ்ச்சியை விட்டு நாங்கள் வெளியேறியபோது, பின்னால் துப்பாக்கியுடன் வேகமாக வந்த ஒருவர், ஃபரூக் அப்துல்லாவின் முதுகை நோக்கி சுட்டார். ஆனால் அவருடைய குறி தப்பிவிட்டது." என்றார்.
"அவருடன் இருந்த பாதுகாவலர்கள் அந்நபரை பிடித்து கீழே தள்ளினர். மிகவும் சிரமப்பட்டு, அவருடைய கையில் இருந்த துப்பாக்கியை பறித்தனர். அதன்பின் நாங்கள் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றோம்." என கூறிய ஐஜாஸ் அஹ்மத் ஜான், "திருமண நிகழ்வில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தது துரதிருஷ்டவசமானது, ஆனால் நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளோம். ஃபரூக் அப்துல்லா நலமுடன் உள்ளார். அவர் தன்னுடைய அறைக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார், விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் குறித்து காவல்துறைதான் தகவல் தெரிவிக்க முடியும். அவர் குறித்து தற்போதைக்கு வேறு எதுவும் தெரியவரவில்லை." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு