You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "நோ கிங்ஸ்" - டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக நடந்த போராட்டம்
அமெரிக்காவின் பல பகுதிகளில் No Kings rallies என்ற பெயரில் டிரம்ப் அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. டிரம்ப் அரசுக்கு எதிராக நோ கிங்ஸ் என்ற பெயரில் போராட்டங்கள் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.
இரான் மீதான போர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மாகாணங்களில் குவிக்கப்படுவது என டிரம்ப் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்தும் இந்தப் போராட்டங்கள் நடந்ததாக போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் டிரம்புக்கு எதிரான வெறும் உணர்ச்சி பொங்கல் நடவடிக்கையே என வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
நியூயார்க், வாஷிங்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
முன்பு நடந்த No Kings போராட்டங்களைப் போலவே இந்த முறையும் டிரம்பின் உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.
கலைந்து செல்லுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததால் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல் துறை தெரிவித்துள்ளது. அதே போல டல்லாஸிலும் கைது நடவடிக்கை இருந்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
No Kings போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தெருக்களை மறித்து, பேரணியைக் கலைத்தபோது சிறு கைகலப்புகள் வெடித்ததைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை இருந்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
கடந்த அக்டோபரில் நடந்த நோ கிங்ஸ் போராட்டத்தின் போது நாடு தழுவிய அளவில் கிட்டத்தட்ட எழுபது லட்சம் மக்கள் திரண்டனர்.
மீண்டும் அதிபரானதில் இருந்தே டிரம்ப் தனது அதிகாரத்தின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். இதனால் அவர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்நாட்டில் எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என கூறும் டிரம்ப், நெருக்கடியில் உள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தனது நடவடிக்கைகள் அவசியம் என்கிறார்.
ஆனால், அவரது அரசின் சில நடவடிக்கைகள் அரசமைப்புக்கு விரோதமானவை என்றும் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு