போருக்கு நடுவே வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஸாடே மோஷிரி, துபை மற்றும் ஜோயெல் குயின்டோ
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சைரன்கள் ஒலிக்கும்போது நார்மா டாக்டகான் செய்யக்கூடியது பிரார்த்தனை செய்வது மட்டும்தான்.
மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான அவர், தனது கணவரும் மூன்று குழந்தைகளும் வசிக்கும் பிலிப்பைன்சில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளார்.
கத்தாரில் மாட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு, தன் குடும்பத்தினரிடம்—தன் வீட்டுக்கு திரும்புவதே ஒரே நம்பிக்கையாக உள்ளது.
"வானில் பறக்கும் ஏவுகணைகளின் படங்களையும் காணொளிகளையும் பார்க்கும்போதெல்லாம், எனக்குப் பயமும் பதற்றமும் ஏற்படுகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
"என் குடும்பத்தாருக்குத் துணையாக இருக்க, நான் உயிருடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்குத் துணையாக இருப்பது நான் மட்டுமே."
செல்வச்செழிப்பான வளைகுடா நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் காரணமாக இரானியத் தாக்குதல்களுக்கு இலக்காக மாறியதால், அங்கு வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பெருமளவில் வெளியேறினர். அதே நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் அந்த பகுதிகளைத் தவிர்த்தனர்.
ஆனால், எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாக மாறியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது மிகவும் கடினமாக அமைந்துள்ளது. வீட்டுப் பணிப்பெண்கள் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள் வரை, தங்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினரை வறுமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் நீண்ட காலமாக இப்பொருளாதாரங்களுக்குத் துணையாக இருந்து வருகின்றனர்.
தனது 23 வயது மகன் காவலர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெறுவதற்கும், 22 மற்றும் 24 வயதுடைய தனது இரு மகள்கள் வெளிநாடுகளில் அதிக ஊதியம் தரும் வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக உள்ள செவிலியர்களாக ஆவதற்கும் ஆகும் செலவை தானே ஏற்கலாம் என்று நார்மா டாக்டகான் நம்பியிருந்தார்.
அதனால்தான், கடந்த இரண்டு தசாப்தங்களில் கணிசமான காலத்தை அவர் கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதில் செலவிட்டார்.
அவரை இன்னும் அங்கே வைத்திருப்பது அவருடைய சம்பளம்தான். மத்திய கிழக்கில் உள்ள பிலிப்பைன்ஸ் வீட்டுப் பணியாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 500 டாலர்கள் (370 பவுண்ட்) சம்பாதிக்கிறார்கள்; இது, அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இதேபோன்ற வேலையில் சம்பாதிப்பதை விட தோராயமாக நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாகும்.
"உலகம் மீண்டும் அமைதியடைந்து, நிலைமை பழையபடி மாறும் என்று நம்புகிறேன். போர் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்," என்று கத்தாரில் உள்ள டாக்டகான் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், போர் அவரை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. அவர் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பி, தன் கணவருடன் சேர்ந்து ஒரு சிறு தொழிலைத் தொடங்கக்கூடும். அவருக்குக் கவலைப்படக் காரணம் இருக்கிறது.
இந்த மோதலில் முதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது மேரி ஆன் வியோலாஸ்கஸ், இஸ்ரேலில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்து வந்தார்.
டெல் அவிவில் உள்ள அவரது குடியிருப்பின் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதைத் தொடர்ந்து, அவர் தனது நோயாளியைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது காயமடைந்ததாக மணிலாவில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப்படி, இப்பிராந்தியம் 24 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது; இதன் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான உலகின் முதன்மையான இடமாக இது திகழ்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனீசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றனர். இத்தொழிலாளர்களில் பலர் குறைந்த ஊதியம் பெறும் அல்லது நிலையற்ற வேலைகளையே மேற்கொள்கின்றனர் என்றும், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைக்கின்றன என்றும் ஐஎல்ஓ தெரிவிக்கிறது.
அறிக்கைகளின்படி, இந்த மோதலின் விளைவாக இதுவரை குறைந்தது 12 தெற்காசியப் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
போரில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளில், அபுதாபியில் காவலாளியாக பணியாற்றிய நேபாள நாட்டை சேர்ந்த 29 வயதான திபாஸ் ஷ்ரேஸ்தாவும் அடங்குவார். மார்ச் 1-ஆம் தேதி இரானியத் தாக்குதல் ஒன்றில் அவர் உயிரிழந்தார்.
"அவரை மீண்டும் நேபாளத்திற்கே திரும்பி வருமாறு நான் சமாதானம் செய்ய முயன்றேன்; ஆனால், அபுதாபியில் தனக்கு வேலை பிடித்திருப்பதாகவும், அங்கு தான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்," என்று அவரது உறவினர் ரமேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குக் குடிபெயர்ந்த எங்கள் உறவினர்கள் பலர் இருப்பதால், அவர்கள் அனைவரைப் பற்றியும் நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்."
போர் தொடங்கியபோது, தனது குடும்பத்தினரிடம் தான் பாதுகாப்பாக இருப்பதாக ஷ்ரேஸ்தா உறுதியளித்தார். அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், செய்திகளைப் பார்ப்பது தன்னை "கவலையடையச் செய்வதாக" அவர் குறிப்பிட்டிருந்தார்; அதேவேளையில், "செய்திகள் சில சமயங்களில் மிகைப்படுத்தப்பட்ட அல்லது தவறான தகவல்களை முன்வைக்கின்றன" என்றும் அவர் கருதினார்.
2015-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்த தனது பெற்றோரின் வீட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக, ஷ்ரேஸ்தா பணம் சேமித்து வந்ததாக அவருடைய மாமா கூறினார்.
"அவன் அவர்களுக்கு ஒரே மகன்," என்று ரமேஷ் மேலும் கூறினார். "மிகவும் கனிவானவன், மிகவும் புத்திசாலி."
பட மூலாதாரம், BBC/Dibash Shrestha's family
துபையில், இடைமறித்துத் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்களால், வங்கதேசத்தைச் சேர்ந்த 55 வயதான தண்ணீர் தொட்டி விநியோகஸ்தரான அகமது அலி உயிரிழந்தார்.
அவரது மகன் அப்துல் ஹக் கூறுகையில், தான் தனது தந்தையுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்ததாகவும், ஆனால் போர் தொடங்குவதற்கு முன்பே வங்கதேசத்துக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார். மாதந்தோறும் 500 முதல் 600 டாலர்கள் வரை அவரது தந்தை தொடர்ந்து வீட்டுக்குப் பணம் அனுப்பி வந்தார் — தெற்காசியாவில் உள்ள அவருடைய ஏழ்மையான நாட்டில் இது ஒரு மிகப்பெரிய தொகையாகும்.
அகமது ரமலான் மாதத்தில் காலமானார்; மக்கள் தங்கள் நோன்பை முடித்துக்கொண்டிருந்த அந்த மாலை வேளையில்தான் அது நிகழ்ந்தது என்று அவருடைய மகனிடம் தெரிவிக்கப்பட்டது.
"துபையில் உள்ள மக்களை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது; அவர்கள் அன்புடன் வரவேற்பவர்கள் என்றும், அது வாழ்வதற்கு மிகச் சிறந்த இடம் என்றும் அவர் கூறினார்," என்று அப்துல் பிபிசியிடம் தெரிவித்தார்.
"போர் நடந்துகொண்டிருக்கிறது என்பதே அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் செய்திகளைப் படித்ததில்லை; அவரிடம் ஸ்மார்ட்போனும் இல்லை."
துபை மற்றும் அப்பிராந்தியம் குறித்த அப்துலின் பார்வை மாறியுள்ளது: "இப்போது அது பாதுகாப்பானது அல்ல; யாரும் தங்கள் தந்தையை இழக்க விரும்பமாட்டார்கள்."
ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள், புலம்பெயர் தொழிலாளர்களைத் தாயகம் அழைத்துவரத் தீவிரமாக முயன்று வருகின்றன.
ஆனால், ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தல், துபை, அபுதாபி மற்றும் கத்தாருக்கான பயணங்களையும் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் பயணங்களையும் பாதித்துள்ளது. எனவே, அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்ல நீண்ட வழித்தடங்களை நாட வேண்டியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தாயகங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான கடைசி விமானத்தில், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைனில் பணிபுரிந்துவந்த 234 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள், சௌதி அரேபியாவுக்குத் தரைவழியாக எட்டு மணிநேரம் வரை பயணம் செய்தனர். அங்கு, பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்களுடன் இணைவதற்காக மேலும் 109 பேர் காத்திருந்தனர்.
அரசாங்கத்தின் தகவலின்படி, மார்ச் 23 நிலவரப்படி, ஏறத்தாழ 2,000 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் அவர்களை சார்ந்தோரும் விமானம் மூலம் மணிலாவுக்குத் திருப்பியழைத்துச் செல்லப்பட்டனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டினரில் ஏறத்தாழ பாதிப் பேருக்கு மத்திய கிழக்கு நாடுகள் இருப்பிடமாகத் திகழ்கின்றன; அவர்கள் அனுப்பும் பணம் அந்நாட்டின் பொருளாதாரத்தில் 10 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது.
வங்கதேசத்துக்கும் வெளிநாட்டுப் பணவரவுகள் அதே அளவு இன்றியமையாதவை — அதன் 14 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கில் உள்ளனர்.
மோதல் தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ 500 வங்கதேச தொழிலாளர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்; பஹ்ரைனிலிருந்து புறப்படும் வகையில், தாயகம் திரும்புவதற்காகக் குறைந்தது இரண்டு கூடுதல் விமானங்களுக்கு வங்கதேச அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
சிலருக்கு அங்கிருந்து வெளியேறுவது ஒரு சிறப்பான தெரிவாக தெரியவில்லை.
2021-ஆம் ஆண்டிலிருந்து நீடித்து வரும் கொடுமையான உள்நாட்டுப் போரின் பிடியில் சிக்கியிருந்த தனது நாட்டை விட்டு வெளியேறியபோது, மியான்மரைச் சேர்ந்த சு சு, துபையில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டார்.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் 31 வயதான அவர், இரண்டு ஆண்டுகளாக துபையில் வசித்து வருகிறார்.
தற்போதைய வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல், அபாய ஒலி கேட்கும் நேரத்தைத் தவிர, கோவிட் ஊரடங்குகளை நினைவூட்டுவதாக அவர் கூறுகிறார். அப்போது அவர் தனது ஜன்னலிலிருந்து விலகி இருக்க வேண்டியிருக்கிறது.
"நான் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்காக ஒரு அவசரக்காலப் பையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்... இது மியான்மரிலிருந்து எனக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம் மட்டுமே."
இருப்பினும், "இங்குள்ள சூழல் மிகவும் அமைதியாக இருக்கிறது. இறுதியில், நாம் நலமாக இருப்போம் என்று நான் நம்புகிறேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை