You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கோழி இறைச்சியை சமையலறையில் கழுவுவது ஏன் ஆபத்தானது?
சமைப்பதற்கு முன்பு கோழி இறைச்சியை உங்கள் வீட்டு சமையலறையில் கழுவுவது ஆபத்தானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
உலகின் பல பகுதிகளில், கோழி இறைச்சியை கழுவுவது நீண்ட காலமாக பின்பற்றப்படும் ஒரு பழக்கம். இது சுத்தம் மற்றும் பராமரிப்புடன் தொடர்புடையதாக உள்ளது.
பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் அதிகாரப்பூர்வ உணவுப் பாதுகாப்பு ஆலோசனைகளில் சமைக்காத கோழி இறைச்சியை கழுவ வேண்டாம் என்பதும் அடங்கும். ஏனெனில் அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைப் பரப்புகிறது.
கோழி இறைச்சியை சமையலறையில் கழுவுவது ஏன் ஆபத்தானது?
பச்சைக் கோழியில் கேம்பிலோபேக்டர் (campylobacter) மற்றும் சால்மோனெல்லா (salmonella) பாக்டீரியாக்கள் உள்ளன.
இதுபற்றி பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் உணவு நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் முனைவர் கிமோன்-ஆண்ட்ரியாஸ் கராட்சாஸ் (Kimon-Andreas Karatzas) விளக்குகிறார். அவர் "சமையலறையில் கோழியைக் கழுவும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண் தெளிகள் உருவாகின்றன. இவை நோயை உண்டாக்கக்கூடும்" என்கிறார்.
இதை எளிதாக விளக்க, கராட்சாஸ் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். அதில் ஒரு பச்சைக் கோழியின் மீது ஒரு வேதிப்பொருளைப் பயன்படுத்தினார், இது பாக்டீரியாக்களை புற ஊதா ஒளியின் மூலம் பார்க்க உதவியது. பின் அந்தக் கோழியை 10 வினாடிகளுக்கும் குறைவாகக் குழாய் நீரில் கழுவினார். கோழியின் மீது விழுந்த நீர், Sink-ஐ சுற்றித் தெறித்தது.
வெறும் கண்களால் பார்க்கையில், அவை சாதாரண நீர்த்துளிகள் போலவே தெரிந்தன. ஆனால் புற ஊதா ஒளி, cross contamination எனப்படும் 'குறுக்கு-மாசுபாட்டை வெளிப்படுத்தியது.
பாக்டீரியாக்கள் அடங்கிய அந்தத் துளிகள் சமையல் மேடை, அவர் அணிந்திருந்த கோட், கேமரா, அருகில் இருந்த, பச்சையாக சாப்பிடக்கூடிய காய்கறிகள் மீதும் தெரித்தன.
நீங்கள் கோழியை சமைத்துச் சாப்பிட்டாலும், அதன் துளிகள் நீங்கள் சாப்பிடும் வேறு உணவுகள் மீது படிந்தாலு கூட உடல்நலக்குறைவு ஏற்படலாம் என்பதே இதன் பொருள் ஆகும்.
கேம்பிலோபாக்டர் ஆபத்தானதா?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வயிற்றுப்போக்கு நோய்களுக்கான உலகளாவிய 4 முக்கிய காரணங்களில் கேம்பிலோபேக்டரும் ஒன்றாகும்.
இது இரைப்பை குடல் அழற்சிக்கு மிகவும் பொதுவான பாக்டீரியா காரணமாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சிறு குழந்தைகளிடம் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.
சால்மோனெல்லாவை விட இது அதிக ஆபத்தானது. ஏனெனில், தடுப்பூசிகள் மூலம் கோழிகளிடம் சால்மோனெல்லாவின் அளவை குறைத்துவிடலாம். ஆனால் கேம்பிலோபேக்டருக்கு எந்த தடுப்பூசியும் கிடையாது.
ஒரு சொட்டு நீரில் சுமார் 10 டிரில்லியன் கேம்பிலோபாக்டர் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது இந்த பூமியில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு அதிகம். அதுவே தொற்றை உண்டாக்க மிகச் சிறிய அளவிலான கேம்பிலோபேக்டர் பாக்டீரியாக்களே போதுமானவை.
தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?
பாதிப்பு ஏற்பட்ட இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வழக்கமாக தோன்றும். ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.
சில நேரங்களில் இந்த பாதிப்புகள் இரிடபுள் பவல் சிண்ட்ரோம் (irritable bowel syndrome), மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் 'கய்லன்-பார் சிண்ட்ரோம்' (Guillain-Barré syndrome) எனப்படும் ஒரு வகை பக்கவாதம் போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கலாம்.
ஆனால், மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும், கோழி இறைச்சி தயாரிக்கும் முறைக்கும் தொடர்பு இருப்பதாக கருதுவதில்லை.
கோழியை கழுவலாமா?
2024-ஆம் ஆண்டு 'ஃபுட் கன்ட்ரோல்' அறிவியல் இதழில் வெளியான ஆய்வின்படி, தென்கிழக்கு ஆசியாவின் 8 நாடுகளில் 96% பேர் கோழி இறைச்சியை கழுவுவதாக கூறினர்.
"ஒரு பாத்திரத்தில் வைத்துக் கழுவுவது பாதுகாப்பானதாக இருக்கலாம். ஆனால் அதிலும் ஆபத்து இருக்கிறது. எலுமிச்சை மற்றும் வினிகர் கொண்டு கழுவுவது பாக்டீரியாக்களின் அளவை பெரிதாக குறைக்காது" என்கிறார் கராட்சாஸ்.
மேலும் பேசிய அவர் "பாக்டீரியாவை அழிக்கும் ஒரே வழி அதை நன்றாக சமைப்பது தான். பெரும்பாலும் கோழி இறைச்சிகள், விற்பனை நிலையத்தில் ஏற்கனவே கழுவப்பட்டிருக்கும். அதனால் மீண்டும் அதை கழுவுவதற்கு உண்மையான காரணம் ஏதுமில்லை" என்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு