'ஒரு எறும்பு ரூ.21 ஆயிரம்': விமானங்களில் கடத்தும் கடத்தல்காரர்கள் என்ன செய்கின்றனர்?

பட மூலாதாரம், Dino Martins

படக்குறிப்பு, ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்புகள் - இங்கே கென்யாவில் காணப்படுபவை - உலகம் முழுவதும் உள்ள சேகரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமானவை."
    • எழுதியவர், வைக்ளிஃப் முயியா
    • பதவி, நைரோபி
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கென்யாவில் இப்போது எறும்புகள் பறந்து கொண்டிருக்கின்றன.

கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு அமைதியான விவசாய நகரமான கில்கில், தற்போது செழித்து வரும் ஒரு சட்டவிரோத வர்த்தகத்தின் மையமாக உருவெடுத்துள்ளது. இந்த மழைக்காலத்தில், கில்கில் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான எறும்புக் புற்றுகளில் இருந்து எறும்புக் கூட்டங்கள் வெளியேறுவதைக் காண முடிகிறது.

இந்த இனச்சேர்க்கை சடங்கின் போது, சிறகுகளை உடைய ஆண் எறும்புகள் கூட்டை விட்டு வெளியேறி, ராணி எறும்புகளுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. வளர்ந்து வரும் உலகளாவிய கறுப்புச் சந்தையின் மையத்தில் இருக்கும் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்வதற்காக, ராணி எறும்புகளைத் துரத்திப் பிடிக்க இதுவே சரியான நேரமாகும். எறும்புகள் சுறுசுறுப்பாக ஒரு காலனியை உருவாக்குவதைக் கவனிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வெளிப்படையான அடைப்புகளில் அவற்றை வைத்து வளர்க்கும் செல்லப்பிராணி மோகத்தை இந்தச் சந்தை பயன்படுத்திக் கொள்கிறது.

சர்வதேச எறும்பு சேகரிப்பாளர்களால் மிகவும் மதிக்கப்படுவது 'ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்பு' (Giant African harvester ant) ராணிகள் தான். இவை பெரியவை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆன்லைனில் இயங்கும் கருப்புச் சந்தையில் ஒரு ராணி எறும்பு 220 டாலர் (சுமார் 21 ஆயிரம் ரூபாய்) வரை விலை போகிறது.

கருவுற்ற ஒரு ராணி எறும்பால் ஒரு முழு காலனியையே உருவாக்க முடியும் மற்றும் அது பல தசாப்தங்களுக்கு வாழக்கூடியது. ஸ்கேனர்கள் பொதுவாக கரிமப் பொருட்களைக் கண்டறியாது என்பதால், இவற்றை அஞ்சல் வழியாக எளிதாக அனுப்பிவிட முடிகிறது.

"முதலில் இது சட்டவிரோதமானது என்று எனக்குத் தெரியாது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் ஒரு காலத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் உள்ளூர் சேகரிப்பு குழுக்களையும் இணைக்கும் ஒரு தரகராகச் செயல்பட்டவர்.

'மெஸ்ஸர் செபலோட்ஸ்' (Messor cephalotes) என்றும் அழைக்கப்படும் இந்த எறும்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. இவற்றின் தனித்துவமான விதை சேகரிக்கும் பழக்கத்திற்காக இவை எறும்பு சேகரிப்பாளர்களிடையே பிரபலமாக உள்ளன.

"இங்கு எளிதாகக் காணப்படும் பெரிய சிவப்பு ராணி எறும்புகளுக்கு ஒரு வெளிநாட்டவர் நல்ல பணம் கொடுப்பதாக எனது நண்பர் சொன்னார்," என்று அந்த முன்னாள் தரகர் கூறினார்.

"வெயில் படரத் தொடங்குவதற்கு முன்பே, அதிகாலையில் திறந்தவெளிகளுக்கு அருகிலுள்ள மேடுகளை நீங்கள் தேட வேண்டும். வெளிநாட்டவர்கள் ஒருபோதும் வயல்களுக்கு நேரில் வரமாட்டார்கள் - அவர்கள் நகரத்தில் ஒரு விடுதியிலோ அல்லது காரிலோ காத்திருப்பார்கள், நாங்கள் அவர்கள் கொடுத்த சிறிய குழாய்கள் அல்லது ஊசிகளில் (Syringes) எறும்புகளை அடைத்து அவர்களிடம் கொண்டு செல்வோம்."

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எறும்புகள் பெரும்பாலும் இதுபோன்ற புற்றுகளில் காணப்படலாம்.

கென்யாவில் இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் அளவு கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. கில்கிலைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 5,000 ராணி எறும்புகள், சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான நைவாஷா நகரில் உள்ள ஒரு விடுதியில் உயிருடன் கண்டெடுக்கப்பட்டன.

கென்யா வனவிலங்கு சேவையின் (KWS) படி, பெல்ஜியம், வியட்நாம் மற்றும் கென்யாவைச் சேர்ந்த சந்தேக நபர்கள், ஒவ்வோர் எறும்பும் இரண்டு மாதங்கள் உயிர் வாழும் வகையில் ஈரமான பருத்தி பஞ்சு கொண்டு சோதனைக்குழாய்கள் மற்றும் ஊசிகளில் அவற்றை அடைத்து வைத்திருந்தனர். அவற்றை ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

இந்த எறும்பு வர்த்தகம் விஞ்ஞானிகளையும் அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடு பொதுவாக யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் சம்பந்தப்பட்ட வனவிலங்கு குற்றங்களுக்கே பழகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளரான 'ஆண்ட்ஸ் ஆர் அஸ்'(Ants R Us), இந்த ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்பை "பலரின் கனவு இனம்" என்று விவரிக்கிறது - இருப்பினும் தற்போது ராணிகள் கையிருப்பில் இல்லை. சில்லறை விற்பனையாளர்கள் அவற்றைப் பெறுவது மிகவும் கடினம் என்று அந்தத் தளம் விளக்குகிறது.

"ஒரு பூச்சியியல் வல்லுநராக நானே இந்த வர்த்தகத்தின் அளவைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன்," என்று சுமார் 600 வகை எறும்புகள் உள்ள கென்யாவைச் சேர்ந்த உயிரியலாளர் டினோ மார்ட்டின்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இருப்பினும், கிழக்கு ஆப்பிரிக்காவின் அறுவடை எறும்புகள் மீதான ஆர்வத்தை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. 25 மிமீ (0.98 அங்குலம்) வரை வளரக்கூடிய மற்றும் வாழ்நாள் முழுவதும் முட்டையிடும் ஒரு "கூட்டை தோற்றுவிக்கும் ராணி" மூலம் இந்தக் காலனிகள் உருவாக்கப்படுகின்றன.

"அவை எறும்புகளில் மிகவும் புதிரான இனங்களில் ஒன்று - அவை பெரிய காலனிகளை உருவாக்குகின்றன, சுவாரஸ்யமான நடத்தைகளில் ஈடுபடுகின்றன மற்றும் அவற்றை வளர்ப்பது எளிது. அவை ஆக்ரோஷமானவை அல்ல."

பறக்கும் காலத்தின் போது, ராணிகள் பல ஆண் எறும்புகளுடன் இணைகின்றன என்று அவர் கூறுகிறார்.

"அதன் பிறகு ஆண்களின் வேலை முடிந்தது... பெரும்பாலானவை வேட்டையாடிகளால் உண்ணப்படுகின்றன அல்லது இறக்கின்றன," என்று கூறும் அவர், பின்னர் ராணி எறும்பு ஒரு சிறிய துளையைத் தோண்டி முட்டையிட்டு தனது சாம்ராஜ்யத்தைத் தொடங்க ஓடுகிறது என்று விளக்குகிறார்.

அதன் வேலைக்கார எறும்புகள் மற்றும் கூட்டை காக்கும் போர் வீர எறும்புகள் அனைத்தும் பெண் எறும்புகள் ஆகும். அவை இறுதியில் பல நூறு ஆயிரங்கள் அளாவு பெருகும்.

"கூடுகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒருவேளை 70 ஆண்டுகள் வரை கூட வாழலாம். நைரோபிக்கு அருகில் குறைந்தது 40 ஆண்டுகள் பழமையான கூடுகளை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்," என்கிறார் மார்ட்டின்ஸ்.

இதன் பொருள் ராணிகளும் அவ்வளவு காலம் வாழ்கின்றன - ஏனென்றால் அவள் இறந்தவுடன், காலனி அழிந்துவிடும், தப்பிப்பிழைக்கும் வேலைக்கார எறும்புகள் வேறு கூட்டைத் தேடும்.

தங்கள் பயிர்களை அழிக்கும் அல்லது வீடுகளுக்குள் நுழையும் எறும்புகளைச் சமாளிக்கும் கென்யர்களுக்கு இது நன்றாகத் தெரியும் - ஒரு காலனியை அகற்ற, எறும்புப் புற்றின் சுரங்கங்கள் அல்லது அறைகளுக்குள் ஆழமாக மறைந்திருக்கும் ராணியைக் கண்டுபிடிக்க ஒருவர் அனுப்பப்படுகிறார்.

எறும்பு மேட்டை மெதுவாகக் கிளறி, அவை தப்பிக்க முயலும்போதும் அவற்றைச் சேகரிக்கலாம் என்று முன்னாள் தரகர் கூறினார்.

"கைது நடவடிக்கை பற்றி செய்திகளில் பார்த்தபோதுதான் நான் எதில் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதை உணர்ந்தேன் - உடனே நான் வெளியேறினேன்," என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் 'உயிரியல் வளத் திருட்டு' குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு அபராதம் செலுத்த அல்லது 12 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது - அவர்கள் 7,700 டாலர் அபராதத்தைச் செலுத்தத் தேர்ந்தெடுத்தனர் மற்றும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறினர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கடந்த ஆண்டு கும்பலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு சீன நபர், நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் 2,000 ராணி எறும்புகளுடன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், KWS

படக்குறிப்பு, இந்த மாத தொடக்கத்தில், நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் சீனாவுக்குச் செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளில், உயிருள்ள எறும்புகளின் பெரிய அளவிலான கடத்தல் தொகுதி ஒன்று கண்டறியப்பட்டது.

சீனாவில் எறும்பு வர்த்தகம் குறித்த 2023 அறிக்கையை வெளியிட்ட ஆராய்ச்சியாளர் ஜெங்யாங் வாங்கிற்கு இது ஒரு கவலையளிக்கும் விஷயமாகும் மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை இது கடுமையான பாதிக்கலாம்.

"ஆரம்பத்தில், பலர் எறும்புகளை வளர்ப்பதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்," என்று சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் வாங் பிபிசியிடம் தெரிவித்தார்.

"செல்லப்பிராணி எறும்புகள் பெரும்பாலும் 'ஃபார்மிக்ரியம்' (Formicarium) எனப்படும் வெளிப்படையான பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கப்படுகின்றன, இதனால் அவற்றை வளர்ப்பவர்கள் எறும்புகள் வேலை செய்வதையும், சுரங்கங்கள் தோண்டுவதையும், உணவு சேகரிப்பதையும், ராணியைப் பாதுகாப்பதையும் கவனிக்க முடியும். இது மிகவும் வசீகரமானது மற்றும் பூச்சிகளைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க ஒரு சிறந்த வழியாகும்."

"ஆனால் பின்னர் நாங்கள் உணர்ந்தோம், ஆக்கிரமிப்பு இனங்களை (Invasive species) வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது அல்லவா?"

சீனாவில் ஆறு மாதங்களில் 58,000-க்கும் மேற்பட்ட காலனிகளின் ஆன்லைன் விற்பனையைக் கண்காணித்த ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகம் செய்யப்பட்ட இனங்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை சீனாவைச் சேர்ந்தவை அல்ல என்பதைக் கண்டறிந்தனர் - அவற்றை இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என்ற போதிலும் இது நடக்கிறது.

"ஆக்கிரமிப்பு எறும்புகளின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்தால், சில எறும்புகள் தப்பிச் சென்று காடுகளில் நிலைபெறுவது காலத்தின் கட்டாயம்," என்று வாங் கூறினார்.

சீனாவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் இனங்களில் ஒன்றான ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்பு குறித்து அவர் பணியாற்றிய ஆய்வு விளக்குகிறது: "உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 'மெஸ்ஸர் செபலோட்ஸ்', உலகின் மிகப்பெரிய விதை அறுவடை செய்பவைகளில் ஒன்றாகும். இது தென்கிழக்கு சீனாவில் தானிய அடிப்படையிலான விவசாயத்தை சீர்குலைக்கும் ஆற்றல் கொண்டது."

சுற்றுச்சூழல் பாதிப்புகள் கென்யாவிலும் ஒரு கவலையாக உள்ளது.

"அறுவடை எறும்புகள் சுற்றுச்சூழல் அமைப்பின் மிகமுக்கியமான உயிரினங்களாகவும், அதே சமயம் அந்த அமைப்பின் பொறியாளர்களாகவும் விளங்குகின்றன. அவை புற்கள் மற்றும் பிற தாவரங்களின் விதைகளை அறுவடை செய்கின்றன, அவ்வாறு செய்வதன் மூலம் அந்த விதைகளைப் பரப்பவும் உதவுகின்றன," என்று கூறிய மார்ட்டின்ஸ், இந்தப் பூச்சிகள் "மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஆற்றல்மிக்க புல்வெளியை உருவாக்குகின்றன" என்றும் குறிப்பிட்டார்.

கென்யாவின் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முகோனி வாடாய் இந்த அச்சங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

"நிலையற்ற அறுவடை - குறிப்பாக ராணி எறும்புகளை அகற்றுவது - காலனி அழிவுக்கும், சுற்றுச்சூழல் சீர்குலைவுக்கும் வழிவகுக்கும்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க, ஒரு சிறப்பு அனுமதியுடன் கென்யாவில் சட்டப்பூர்வமாக எறும்புகளைச் சேகரிக்க முடியும் - இதற்கு வாங்குபவர் சம்பந்தப்பட்ட உள்ளூர் சமூகத்துடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

ஆனால், கென்யா வனவிலங்கு சேவையின் (KWS) படி, இதுவரை அத்தகைய அனுமதி எதுவும் கோரப்படவில்லை, அந்த ஆவணங்களில் எத்தனை எறும்புகள் சேகரிக்கப்படுகின்றன மற்றும் அவை எங்கு கொண்டு செல்லப்படுகின்றன போன்ற விவரங்களும் தேவைப்படுகின்றன."

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு 'ஃபார்மிகேரியம்' (Formicarium) சேகரிப்பாளர்கள் ஒரு எறும்பு காலனியின் செயல்பாடுகளைக் காண அனுமதிக்கிறது.

சில இயற்கை ஆர்வலர்கள் இப்போது அனைத்து எறும்பு இனங்களுக்கும் 'சைட்ஸ்' (Cites) எனப்படும் அழிந்து வரும் வனவிலங்கு இனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான உலகளாவிய உடன்படிக்கையின் கீழ் அதிகப்படியான வர்த்தகப் பாதுகாப்பை வழங்கக் கோருகின்றனர்.

"உண்மை என்னவென்றால், எந்த எறும்பு இனமும் தற்போது சைட்ஸ் (Cites) பட்டியலில் இடம் பெறவில்லை," என்று உலகளாவிய எறும்பு வர்த்தகம் குறித்த ஆராய்ச்சியாளர் செர்ஜியோ ஹென்ரிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இத்தகைய இடமாற்றங்களைக் கண்காணிக்கும் சர்வதேச உடன்படிக்கைகள் இல்லாமல், இந்த வர்த்தகத்தின் அளவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் உலகளாவிய சமூகத்திற்கும் பெருமளவு புலப்படாமலேயே உள்ளது," என்று அவர் கூறினார்.

ஆனால், கென்யா வனவிலங்கு சேவையைப் (KWS) பொறுத்தவரை, உண்மையான பிரச்னை மிகவும் உடனடியானது - அதாவது "குறைவாகப் புகாரளிக்கப்படும்" பூச்சிக் கடத்தலை எப்படிக் கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதுதான்; இதற்கு விமான நிலையங்கள் மற்றும் பிற எல்லைப் புள்ளிகளில் சிறந்த கண்காணிப்பு உபகரணங்களை வைத்திருப்பது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என அந்த முகமை பரிந்துரைக்கிறது.

மார்ட்டின்ஸும் இதனை ஒப்புக்கொள்கிறார்: "வர்த்தகம் செய்யப்படும் உண்மையான எறும்புகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்போது கண்டறியப்பட வாய்ப்புள்ளது, எனவே இப்போதைக்கு இதன் அளவை ஒரு யூகமாக மட்டுமே சொல்ல முடியும்."

பத்திரிகையாளர் சார்லஸ் ஒன்யாங்கோ-ஓபோ வாதிடுகையில், கென்யா ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய வருவாய் வாய்ப்பைப் புறக்கணிக்கிறது என்கிறார்.

"எறும்புகள் தங்கம் அல்லது வைரங்களைப் போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பொருட்கள் அல்ல. அவை வளர்க்கப்பட வேண்டிய மற்றும் பண்ணை முறையில் பெருக்கப்பட வேண்டிய உயிரியல் சொத்துகள், அவற்றின் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஆயிரம் வரை கூட அதிகரிக்க முடியும். இருப்பினும், நாம் அவற்றை திருடப்பட்ட கலைப்பொருட்களைப் போல நடத்துகிறோம்," என்று அவர் சமீபத்தில் கென்யாவின் 'டெய்லி நேஷன்' (Daily Nation) நாளிதழில் எழுதியிருந்தார்.

உண்மையில், எறும்பு வர்த்தகம் உட்பட வனவிலங்கு பொருளாதாரத்தை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை வழிகாட்டுதல்களை கென்யாவின் அமைச்சரவை கடந்த ஆண்டு அங்கீகரித்தது.

"இந்த வழிகாட்டுதல்கள் எறும்புகள் போன்ற காட்டுயிர்களின் நிலையான பயன்பாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்து, அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு, செல்வம் மற்றும் சமூக வாழ்வாதாரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன," என்று வாடாய் கூறினார்.

கவனமான கண்காணிப்பு நடைமுறைக்கு வரும்போது, எதிர்காலத்தில் கில்கிலைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த வயல்கள் மற்றும் பழத்தோட்டங்களின் விளைச்சலை அதிகரிப்பதோடு, லாபகரமான ராணி எறும்புகளை வளர்க்க சிறப்பு 'ஃபார்மிக்ரியா' பெட்டிகளையும் கொண்டிருக்கலாம்.

ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு சேகரிப்பாளர்களுக்கு எறும்புகளை ஏற்றுமதி செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

சிங்கப்பூரில் இருந்து கூடுதல் தகவல்களை ஓஸ்மண்ட் சியா வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு