'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?
பட மூலாதாரம், HANDOUT
- எழுதியவர், ப.சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"குண்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் காக்கை, குருவி போல ஓடி ஒளிந்துகொள்கிறோம்" - இரானில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர் ரவி சொன்ன வார்த்தைகள் இவை.
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் மீன்பிடித் தொழிலுக்காக இரான் சென்ற தமிழக மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.
ஆனால் "அதற்குறிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்கிறது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்.
ஒரு மாதமாக சிக்கியுள்ள மீனவர்கள்
"போரைக் காட்டிலும் பசியின் கொடுமை எங்களைக் கொன்றுவிடும்" என்று மீனவர்கள் வெளியிட்ட வீடியோ அவர்கள் இருக்கும் ஆபத்தான சூழலை உணர்த்தியது.
ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் உள்ள இரானின் கிஷ் தீவு பகுதியில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த தாடியோஸ் பேசிய அந்தப் பதிவில் "கையிருப்பில் உள்ள உணவை வைத்து ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உண்ண முடிகிறது. அவை தீர்ந்துவிட்டால் பசியின் கொடுமையால் இறக்க நேரிடும்." என்றார்.
"போர்ச் சூழல் காரணமாக விமான சேவை தடைபட்டதால் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவேனும் எங்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாக கூறுகிறார் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மீனவரான ரவி.
அவர் வெளியிட்ட பதிவில், "பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் சொந்த நாடு திரும்ப பலரிடமும் பேசி வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை" என்று கூறியுள்ளார். அதோடு, "நாங்கள் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் அடிக்கடி வெடிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிப்போய் ஒளிந்துகொள்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில்
''போர் தொடங்கிய முதல் வாரத்தில் பேசும்போது எப்படியும் மீண்டு விடுவோம் என்ற தையரித்தில் இருந்தவர்களின் குரல்களில் அடுத்தடுத்த நாட்களில் நடுக்கத்தை உணரத் தொடங்கினோம்," என்றார் இரானின் சீராஸில் உள்ள மீனவர் ரூபனின் மனைவி மதி.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "8 அக்கா தங்கைகளோடு பிறந்த என் கணவர் 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்காக வெளிநாடு செல்லவில்லை, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைச் சமாளிக்கவே உறவுகளை விட்டு தொலைதூரத்தில் பணியாற்றி வருகிறார்" என குடும்பத்தின் நிலையை எடுத்துரைத்தார்.
மேலும் பேசிய அவர், "இங்கிருந்தபடியே கடன்களை அடைக்கலாம் என்றபோது, இறுதியாக ஒரு முறை சென்று வருகிறேன் என்றவர் திரும்பி வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்." என்றார்.
கிஷ் பகுதியில் உள்ள மற்றொரு மீனவர் ராஜேந்திரனின் மனைவி பிரவீனா பிபிசி தமிழிடம் பேசுகையில், "துறைமுகம் அருகில் இருப்பதால் குண்டு விழுவதை அடிக்கடி நேரில் பார்ப்பதாக என் கணவர் சொல்கிறார்" என்று அவர் கூறினார்.
"அரசுத் தரப்பில் பலரையும் சந்தித்து முறையிட்டுவிட்டோம், ஆனால் முறையான பதில்கள் ஏதும் இல்லை," என்றார்.
பட மூலாதாரம், HANDOUT
'உணவு, மருந்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்'
"மீனவர்களை மீட்கும்வரை அவர்களின் உணவு மற்றும் மருந்து தேவைகளை உறுதி செய்ய வேண்டும்," என்றார் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் ஃபாதர் சர்ச்சில் பாஸ்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், மீனவர்களை மீட்பது குறித்து மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரை நேரில் சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றார்.
இரானில் சிக்கியுள்ள மீனவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் அவர்களைப் பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"உடனடியாக அழைத்து வர இயலாவிட்டாலும் முதல் இரண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும்" அவர் கூறினார்.
"இந்தியா இரானுடன் நல்லுறவை மேம்படுத்தி வரும் நிலையில் அதைப் பயன்படுத்தி அங்குள்ள மக்களை விரைவாக அழைத்து வர வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
உணவின்றித் தவித்து வருவதாகவும், தங்களை மீட்கப் பல வழிகளில் முயன்றும் எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவிக்கும் புகார்கள் குறித்தும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்திடம் மின்னஞ்சல் மூலம் பிபிசி தமிழ் பதில் பெற முயன்றது. ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
இரானில் கிஷ், சீராஸ், அசலூயே உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், "மீனவர்களை மீட்க அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக" தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.
"இரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 3000 அழைப்புகள் வந்துள்ளன, அதில் பெரும்பாலான அழைப்புகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ளன," என்றார் அவர்.
குறிப்பாக "இரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்பு தொடர்பாக பல வேண்டுகோள்கள் வாட்ஸ்ஆப் வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவுவும் வந்துள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், HANDOUT
இது குறித்து மேலும் பேசிய வள்ளலார், "போர் தொடங்கிய நாள் முதல் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது." என்று கூறினார்.
போர் நடைபெற்று வருவதால் இந்த நேரத்தில் அவர்களை அழைத்து வருவது பாதுகாப்பானது இல்லை என தூதரக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகக் கூறிய அவர், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரையும் பத்திரமாக தாயகம் திருப்பி அனுப்புவதாக தூதரம் உறுதி அளித்தது எனக் குறிப்பிட்டார்.
'உணவின்றித் தவிப்பதாக' மீனவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்ட போது, "போர் நாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்துள்ளோம், சட்ட உதவிகள் தேவைபடுவோருக்கு அரசு சார்பில் சட்ட ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்." என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், "மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகள் செய்வதை உறுதி செய்வோம்." என்றும் தெரிவித்தார்.
மீனவர்கள் இரான் சென்றது எப்படி?
"தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு, குறைந்த அளவு ஊதியம் கிடைப்பதால் கூடுதல் ஊதியம் வேண்டி அவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல நேரிடுகிறது," என்றார் ஃபாதர் சர்ச்சில்.
"ஆரம்பக்காலத்தில் வளைகுடா நாடுகளில் மற்ற வேலைகளுக்கு செல்வோர் மூலமாக அங்கு மீனவர்களின் தேவையை அறிந்து தமிழ்நாட்டில் இருந்து மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள், இரானை பூர்வீகமாகக் கொண்ட படகு உரிமையாளர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை