You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக் கோப்பை: சாம்பியன் அணிகளை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே - சூப்பர் 8 சுற்று எப்படி நடைபெறும்?
2026ம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று இன்று (பிப்ரவரி 20) முடிவுக்கு வருகிறது. சனிக்கிழமை முதல் சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. 'ப்ரீ சீடிங்' (Pre Seeding) மூலம் முடிவான இந்த சூப்பர் 8 சுற்றில், 4 குரூப்களிலும் முதலிடம் பெற்ற அணிகள் இடம்பெற்றிருப்பது நிறைய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சூப்பர் 8 சுற்றில் மோதும் 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
பிரிவு 1: இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் & தென்னாப்பிரிக்கா
பிரிவு 2: இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் & இலங்கை
இதில் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கும் நான்கு அணிகளுமே தங்கள் பிரிவில் முதலிடம் பெற்ற அணிகள். இந்தியா (ஏ பிரிவு), மேற்கிந்திய தீவுகள் (சி பிரிவு) மற்றும் தென்னாப்பிரிக்கா (டி பிரிவு) மூன்று அணிகளும் விளையாடிய 4 போட்டிகளையுமே வென்றிருந்தன. ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
எப்படி முடிவு செய்யப்பட்டது?
சூப்பர் 8 பிரிவில் இந்த இந்த அணிகள் தான் இடம்பெறும் என்று உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருந்த அணிகளுக்கு முன்கூட்டிய ஒரு தரநிலை (pre seeding) கொடுக்கப்பட்டது. அதன்படி இந்தியா (X1), பாகிஸ்தான் (Y3), ஆஸ்திரேலியா (X2), இலங்கை (Y4), இங்கிலாந்து (Y1), மேற்கிந்திய தீவுகள் (X3), நியூசிலாந்து (Y2), தென்னாப்பிரிக்கா (X4) அணிகளுக்கு தரநிலை கொடுக்கப்பட்டது.
இதில் X1, X2, X3, X4 தரநிலை பெற்ற அணிகள் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இடம்பெறும் என்றும், Y1, Y2, Y3, Y4 ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது பிரிவில் இடம்பெறும் என்றும் முன்பே முடிவுசெய்யப்பட்டது. குரூப் சுற்றில் அந்த அணிகள் முதலிடம் பிடிக்கிறதா, இரண்டாவது இடம் பிடிக்கிறதா என்பது இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறாது.
இதில் தரநிலை பெறாத அணி எதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால், எந்த அணிக்குப் பதிலாக அந்த அணி தகுதி பெற்றதோ அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும். அப்படித்தான் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஜிம்பாப்வே X2 இடத்தை எடுத்துக்கொண்டது. அதனால் அது சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இடம் பிடித்தது.
பல்வேறு இடங்களில் போட்டிகள் நடப்பதால், தங்கள் அணி எங்கு எப்போது விளையாடும் என்ற புரிதல் ரசிகர்களுக்கு ஏற்படுவதற்காக இந்த முறை கடைபிடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
விமர்சனங்களும் விவாதங்களும்
ஒரு போட்டியில் கூட தோற்காத 4 அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றிருப்பது இப்போது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் பலரும் இதுகுறித்துக் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். சோஹம் என்பவர் தன் X தள பதிவில், "தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்ததற்கான வெகுமதி என்ன கடினமான சூப்பர் 8 பிரிவா?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
பத்திரிகையாளர் டிம் விக்மோர், "டி20 உலகக் கோப்பையின் அமைப்பில் உள்ள விளையாட்டு நேர்மைக் குறைபாட்டை மீண்டும் ஒருமுறை இது வெளிச்சமிடுகிறது - நான்கு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற அணிகள் அனைத்தும் ஒரே சூப்பர் 8 பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன; மற்றொரு பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற 4 அணிகள் இருக்கின்றன. இவ்வாறு அணிகளை முன்கூட்டியே தரவரிசைப்படுத்தி (pre-seeding) அமைப்பது, பிற விளையாட்டுகளில் நடைபெறுவதில்லை" என்று தன் X பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹைபோகாஸ்ட் என்ற X தள கணக்கு, "தங்கள் குரூப்பில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே, சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகள் உள்பட குரூப் வெற்றியாளர்களை சந்திப்பது தான் அவர்களுக்கான வெகுமதியா" என்று கேள்வியெழுப்பியிருக்கிறது.
இதுபோல், மேலும் பலர் இந்த சூப்பர் 8 பிரிவுகள் பற்றி நிறைய விமர்சனங்களை எழுப்பியிருக்கிறார்கள்.
இந்த pre seeding முறை கடந்த உலகக் கோப்பையிலுமே நடந்தது. ஆனால் அப்போது குரூப் சுற்றில் முதலிடம் பெற்ற இரண்டு அணிகள் மற்றும் இரண்டாவது இடம் பெற்ற இரண்டு அணிகள் ஒரே சூப்பர் 8 பிரிவில் இடம்பெற்றிருந்ததால் பெரிதாக விமர்சனங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.
சூப்பர் 8 போட்டிகள்
சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவின் போட்டிகள் இந்தியாவிலும், இரண்டாவது பிரிவின் போட்டிகள் இலங்கையிலும் நடக்கின்றன. அந்த போட்டிகள் விவரம்:
1. நியூசிலாந்து vs பாகிஸ்தான் - பிப்ரவரி 21 இரவு 7 மணி - கொழும்பு
2. இலங்கை vs இங்கிலாந்து - பிப்ரவரி 22 மாலை 3 மணி - கண்டி
3. இந்தியா vs தென்னாப்பிரிக்கா - பிப்ரவரி 22 இரவு 7 மணி - ஆமதாபாத்
4. ஜிம்பாப்வே vs மேற்கிந்திய தீவுகள் - பிப்ரவரி 23 இரவு 7 மணி - மும்பை
5. இங்கிலாந்து vs பாகிஸ்தான் - பிப்ரவரி 24 இரவு 7 மணி - கண்டி
6. இலங்கை vs நியூசிலாந்து - பிப்ரவரி 25 இரவு 7 மணி - கொழும்பு
7. மேற்கிந்திய தீவுகள் vs தென்னாப்பிரிக்கா - பிப்ரவரி 26 மாலை 3 மணி - ஆமதாபாத்
8. இந்தியா vs ஜிம்பாப்வே - பிப்ரவரி 26 இரவு 7 மணி - சென்னை
9. இங்கிலாந்து vs நியூசிலாந்து - பிப்ரவரி 27 இரவு 7 மணி - கொழும்பு
10. இலங்கை vs பாகிஸ்தான் - பிப்ரவரி 28 இரவு 7 மணி - கண்டி
11. ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா - மார்ச் 1 மாலை 3 மணி - டெல்லி
12. இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் - மார்ச் 1 இரவு 7 மணி - கொல்கத்தா
இந்த இரு பிரிவுகளிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு