கேரள சட்டமன்ற தேர்தலில் "மும்முனைப்" போட்டி: வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

காலம் காலமாக இரு முனைப் போட்டியை மட்டுமே எதிர்கொண்டு வந்த கேரள மாநிலம், இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக வலுவான "மும்முனைப் போட்டியைச் சந்திக்கக் கூடும்" என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கேரளத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தத் தேர்தலில் தீவிரமாக களமாடி வருகிறது.

காங்கிரசை வீழ்த்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜகவும் ரகசிய கூட்டணி சேர்ந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் கேரளத்தில் பாஜக எப்போதெல்லாம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அது காங்கிரஸின் மறைமுக உடன்பாட்டுடனேயே நிகழ்ந்துள்ளதாகவும், காங்கிரஸ் கூறியுள்ள எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற இயலாதது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோதி அவ்வப்போது வந்து கேரளத்தில் பரப்புரை செய்துள்ள நிலையில், 30 தொகுதிகளில் மட்டுமே பாஜக தீவிர கவனம் செலுத்தியுள்ளது எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் குமார், மும்முனைப் போட்டி இருந்தாலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை என்கிறார்.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

பினராயி விஜயனுக்காக தளர்த்தப்பட்ட கட்சி விதிகள்

கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 அன்று நடக்கிறது. 140 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கேரளாவில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சுமார் 2.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பதவிகளில் ஒருவர் இரு முறைக்கு மேல் தொடரக்கூடாது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளைத் தளர்த்தி, பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் ஷைலஜா உள்ளிட்ட பலருக்கும் மூன்றாம் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பினராயி மூன்றாம் முறையாக முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கேரளத்தில் புதுயுக யாத்திரை மேற்கொண்டு பரப்புரை செய்தார். பிரியங்கா காந்தியும் பரப்புரை மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திரமோதி ஏற்கெனவே சமீபத்தில் பாலக்காட்டில் பரப்புரை மேற்கொண்டு, திருச்சூரில் சாலை பேரணியிலும் பங்கேற்ற நிலையில், திருவனந்தபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இதனால் கேரள சட்டப்பேரவைத் தேர்தல், மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

வழக்கமாக கேரள தேர்தல்களில் இரு முனைப் போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், முதல் முறையாக இந்தத் தேர்தலில்தான் "மும்முனைப் போட்டியாக" கருத முடியும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் குமார். ஆனால் இது 30 தொகுதிகளில் மட்டுமே என்று கூறும் அவர், முக்கியமான போட்டி என்பது வழக்கமான இரு கூட்டணிகளுக்கு இடையில்தான் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரதீப் குமார், ''கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கேரளத்தில் மெதுவாக வளர்ந்து வருகிறது. திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபி வென்றார். சமீபத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தில், பல சட்டப்பேரவை தொகுதிகளில் முதலிடத்தையும், சில தொகுதிகளில் இரண்டாமிடத்தையும் பாஜக பெற்றிருந்தது. அதனால் 30 தொகுதிகளில் பாஜக கூடுதல் கவனம் செலுத்துகிறது.'' என்றார்.

மும்முனைப் போட்டி நிலவினாலும் கேரள தேர்தல் வெற்றி தோல்வியை 5 காரணிகளே தீர்மானிக்கும் என்கிறார் கேரள பத்திரிகையாளர் பிரமோத் கோபு. ஆட்சி மீதான அதிருப்தி, பாஜகவின் வாக்கு வங்கி ஏற்படுத்தும் பாதிப்பு, மத்திய கிழக்கு போரால் வளைகுடா நாடுகளில் மலையாளிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள், சிறுபான்மையினரின் வாக்குகள், தேர்தல் வாக்குறுதிகள் என்று அவர் பட்டியலிடுகிறார்.

பிபிசியிடம் பேசிய பிரமோத், ''இடது ஜனநாயக முன்னணியின் முதல் 5 ஆண்டு ஆட்சி சிறப்பாக இருந்தது. கோவிட் பெருந்தொற்று, பெருவெள்ள பாதிப்புகளில் நன்றாகச் செயல்பட்டது. வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்தன. அதனால்தான் கேரளத்தில் முதல் முறையாக ஒரே கூட்டணி இரண்டாவது முறையாக வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. ஊழல் குற்றச்சாட்டு, கடன் சுமை அதிகரித்துவிட்டது. அரசின் மீது மக்கள் அதிருப்தி அதிகமாகியுள்ளது.'' என்றார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சிறப்புக்கட்டுரை வெளியிட்டுள்ள 'ஃபிரண்ட்லைன்' பத்திரிகை இதில் பல விஷயங்களை சுட்டிக்காட்டி, ''இடது ஜனநாயக முன்னணி முதல்வர் பினராயி விஜயனை மையப்படுத்துகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), உட்கட்சிப் பிளவுகளுக்கு மத்தியில் தனிப்பட்ட வேட்பாளர்களின் செல்வாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது." என அதில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் "பாஜக தனது இந்துத்துவா ஆதரவுத் தளத்தைத் தாண்டிப் போராடி வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆதிக்கத்தைக் காட்டுகின்றன. இடது ஜனநாயக முன்னணிக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை, புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளின் தாக்கம் உள்ளிட்ட சவால்களை அனைத்துக் கட்சிகளும் எதிர்கொள்கின்றன.'' என்று எழுதியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், கேரளத்தில் தொடர் பயணங்களை மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்தபின்பே, இந்த கட்டுரையை எழுதியதாக பல விஷயங்களையும் பிபிசியிடம் பகிர்ந்தார். சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மோதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

''ஆளும்கட்சி மீதான எதிர்ப்பு அலை என்பது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிகமாகத் தெரிகிறது. நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதைப் பிரதிபலித்தன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது காங்கிரஸ் பலம் பெறுவதாகத் தெரிகிறது. ஆனால் உட்கட்சிப் பூசல்கள் அக்கட்சியைப் பலவீனப்படுத்துகின்றன.'' என்றார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Radhakrishnan

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

போரும் புவிசார் அரசியலும் கேரள தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பு!

கேரளத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். வெளிநாடு வாழ் கேரள மக்களுக்காக, 'நோர்கா' (DEPARTMENT OF NON-RESIDENT KERALITES AFFAIRS) என்று தனியாக ஒரு துறை இயங்குகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் சுமார் 30 லட்சம் மலையாளிகளில் பெரும் பகுதியினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றுவதாகக் கூறும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், அங்கே இரான் நடத்தும் தாக்குதல் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையையும், பெரும் வேலை இழப்பையும் ஏற்படுத்துமென்ற அச்சத்தை கேரள மக்களிடம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

''கேரளம் 90 சதவிகிதத்தும் மேல் எழுத்தறிவு பெற்ற மாநிலம். அங்குள்ள மக்கள் புவிசார் அரசியலை நன்கு புரிந்து கொள்வார்கள். வெளிநாடுகளைச் சார்ந்துள்ள 30 லட்சம் பேர்களில் 10 லட்சம் பேர் வரை, இந்தத் தேர்தலில் வாக்களிக்கக் கூடும். அவர்கள் சார்ந்த குடும்பங்களின் வாக்குகளும் அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும். இது வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இல்லாவிட்டாலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது மத்திய கிழக்கில் நடக்கும் போர்ச்சூழல் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். குறிப்பாக பாஜகவை பின்னுக்கு இழுக்கும் முக்கியக் காரணியாக இது இருக்கும்.'' என்றார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Pradeep kumar

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் பிரதீப் குமார்

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கேரளத்தில் பாஜக மெதுவாக வளர்ந்துள்ளதாகக் கூறும் கேரளத்தின் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் குமார், இந்தத் தேர்தலில் பாஜக 30 தொகுதிகளை மட்டுமே குறி வைத்துள்ளதாகக் கூறுகிறார். அவற்றில் திருவனந்தபுரத்திலுள்ள 3 தொகுதிகள், பாலக்காடு, காசர்கோடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி என 3லிருந்து 6 தொகுதிகளில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்.

''மோதியின் தீவிர ஆதரவாளர்கள், உள்ளூர் பிரச்னைகளுக்காகப் போராடுபவர்கள் என கேரளத்தில் பாஜகவுக்கு 2 விதமான ஆதரவாளர்கள் உள்ளனர். கேரள மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகிக்கும் இந்து ஈழவ மக்களின் அமைப்பும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்த ஈழவ மக்கள் இப்போது பாஜகவை ஆதரிக்கின்றனர். பிடிஜேஎஸ் (பாரத் தர்மஜனசேனா) அமைப்பை வைத்து பாஜகவை ஆதரித்த அந்த மக்கள், இப்போது நேரடியாக பாஜகவிற்கு மாறி வருகின்றனர்.'' என்றார் பிரதீப்.

இந்தத் தேர்தலில் ஆளும் இடது முன்னணி மீதான எதிர்ப்பு அலையை விட, பினராயி விஜயனின் தலைமை தற்போது அதிக விமர்சனத்துக்குள்ளாவதாகச் சொல்கிறார் பிரதீப். கட்சியில் இரண்டாம் மட்டத் தலைவர்களை வளர விடாமல் செய்ததிலும், குறிப்பாக கோவிட் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்ட ஷைலஜா தேர்தலில் கண்ட தோல்விகளுக்குப் பின்னாலும் பினராயி விஜயன் இருப்பதாக பலரும் "சந்தேகிப்பதாக" பிரதீப் குமார் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், .''பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முகம். அதனால் அவர் தீவிரமாக விமர்சிக்கப்படுகிறார். கேரளத்தில் மும்முனைப் போட்டி என்பதே தவறு. திருச்சூரிலும், உள்ளாட்சி தேர்தலிலும் நடந்தது மீண்டும் நடக்காது. அங்கே காங்கிரஸ் உதவியால்தான் பாஜக வென்றது. இந்தத் தேர்தலில் எல்டிஎஃப், யுடிஎஃப் இரண்டுக்கும் இடையில்தான் நேரடி போட்டி நடக்கிறது. '' என்றார்.

கேரளத்தில் சமீபத்தில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, ''கேரளத்தில் சிபிஎம் பிஜேபியுடன் இணைந்து சிஜேபி ஆகிவிட்டது. என் மீது 36 வழக்குகள் உள்ளன. ஆனால் முக்கிய வழக்குகளில் கேரள முதல்வரையும், அவரின் குடும்பத்தினரையும் அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை. இரு தரப்புக்கும் கூட்டணி என்பது கேரள மக்களுக்குத் தெரியும்.'' என்று பேசியிருந்தார்.

இதை கடுமையாகக் கண்டித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ''எந்த அடிப்படையில் அவர் சிபிஎம் மீது பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்? அல்லது எங்கள் முதலமைச்சரை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோருகிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதே கேள்விகளை எழுப்பிய விஜயராகவன், ''கேரளத்தில் பாஜக எப்போது எங்கெங்கு வெல்கிறதோ அதன் பின்னணியில் காங்கிரஸ்தான் இருந்துள்ளது.'' என்றார். விஜயராகவனின் மனைவி பிந்து, கேரளத்தின் உயர்கல்வி மற்றும் சமூகநலத்துறை அமைச்சராகவுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சிறுபான்மையினர் வாக்குகள் எந்த கூட்டணிக்கு அதிகமாக கிடைக்கும்?

கேரளத்தில் தேர்தல் களத்தில் மோதும் 3 கூட்டணிகளில், இடது ஜனநாயக முன்னணி மட்டுமே முதல்வர் வேட்பாளராக பினராயி விஜயனை அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால் கேரள மக்களிடம் முதல்வர் வேட்பாளர் குறித்த ஆர்வம் எப்போதுமே பெரிதாக இருக்காது என்கிறார் பத்திரிகையாளர் பிரதீப் குமார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலக்காடு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகண்டன், ''காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பின்புதான் முதல்வர் யார் என்பதை தேசியத் தலைமை முடிவு செய்யும். சதீசன், ரமேஷ் சென்னிதலா உட்பட கேரள காங்கிரஸில் முதல்வர் வேட்பாளர் தகுதியுடன் பல தலைவர்கள் இருக்கின்றனர். எதிரணியில்தான் தனிநபர் ஆதிக்கம் உள்ளது.'' என்றார்.

ஆனால் பினராயி மீது அதிருப்தி இருப்பினும் அக்கட்சியின் கீழ் மட்டத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக இருந்து பணி செய்வது, அக்கட்சியின் மீதான நம்பிக்கையை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது என்கிறார் பத்திரிகையாளர் பிரதீப். "பினராயி விஜயனை விட்டால் தற்போதைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் யாருமில்லை" என்கிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்

கேரளத்தில் கணிசமாகவுள்ள சிறுபான்மையினர் வாக்குகள் எந்தக் கூட்டணிக்குப் போகும் என்பதும், இந்தத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்குமென்று கருதப்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உட்பட இஸ்லாமியக் கட்சிகள், அமைப்புகள் பெரும்பாலும் ஐக்கிய ஜனநாயக முன்னணியை ஆதரிப்பதாகச் சொல்கிறார் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் அமீர்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய அமீர், ''கேரளத்திலுள்ள இந்து ஈழவ மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து வந்த நிலை மாறி, சமீபகாலமாக பாஜகவை ஆதரிக்கத் துவங்கிவிட்டனர். அந்த வாக்கு வங்கியை மீட்க, சிபிஎம் தலைவர்கள் விடுத்த சில அறிக்கைகள், பேச்சுகள் கேரள முஸ்லீம் மக்களை பெரிதும் காயப்படுத்திவிட்டன. கேரளத்தின் முக்கிய முஸ்லீம் கட்சிகளும், அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதால் பெருமளவு முஸ்லீம் வாக்குகள் ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கே கிடைக்கும்.'' என்றார்.

கேரளத்தில் மக்கள்தொகையில் 18 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள கிறிஸ்தவர்களின் வாக்குகள், இந்தத் தேர்தலில் யாருக்குக் கிடைக்குமென்ற கேள்வியும் பெரிதாக எழுந்துள்ளது. சீரோ மலபார், லத்தீன் கத்தோலிக்கர்கள், சீரோ மலங்காரா, சிரியன் ஆர்த்தோடக்ஸ், சிரியன் மார்த்தோமா, சிஎஸ்ஐ, பெந்தகோஸ்தே என பலவித கிறிஸ்தவப் பிரிவுகளின் கீழ் இந்த மக்கள் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

''கேரள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையாகவுள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால் வணிகம் மற்றும் தொழில் சார்ந்த கிறிஸ்தவர்கள், பாஜகவை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கும் இஸ்லாமிய வணிகர்களுக்கும் இடையிலான தொழில் போட்டியில் அவர்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.'' என்றார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

இவை தவிர்த்து, 3 கூட்டணிகளின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளும் தேர்தலில் பேசுபொருளாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள "இந்திரா உத்தரவாதங்கள்" விவாதப் பொருளாகி இருந்தாலும் கடன் சுமையையும் மக்கள் யோசிப்பர் என்று கூறும் பத்திரிகையாளர் பிரதீப் குமார், மும்முனைப் போட்டி இருந்தாலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை என்றார் அவர். இதே கருத்தை பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Srikandan

படக்குறிப்பு, பாலக்காடு எம்பி ஸ்ரீகண்டன்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் சிபிஎம் 62 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 35.3 சதவீதமாக உயர்ந்த காங்கிரஸ் வாக்கு வங்கி, அங்குள்ள 20 தொகுதிகளில் 14 தொகுதிகளைப் பெற உதவியாக இருந்தது. ஆனால் 26 சதவீதம் வாக்குகளை வாங்கிய சிபிஎம், 16.8 சதவீத வாக்குகளை வாங்கிய பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே கிடைத்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

''இந்தத் தேர்தலின் ஹீரோ, காங்கிரஸ் கட்சியின் 'இந்திரா உத்தரவாதம்'தான். ராகுல் காந்தி, பிரியங்காவின் பரப்புரையும் கேரள மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மோதி எத்தனை முறை வந்தாலும் பலன் தராது.'' என்றார் பாலக்காடு எம்பி ஸ்ரீகண்டன்.

ஆனால் இந்திரா உத்தரவாதங்கள் என்று ராகுல் தந்துள்ள எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற இயலாது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன். பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, இந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியுமென்று பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர்.

''பாஜகவை பொறுத்தவரை இந்தத் தேர்தல் அடுத்தகட்ட நகர்வு மட்டும்தான். ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் கேரளத்தில் காங்கிரஸ் வேகமாக பலவீனமடைந்துவிடும். இடது முன்னணி தோற்றால் அதே நிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்படும். காலியாகும் கட்சியின் இடத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை பாஜக வேகமாக முன்னெடுக்கும்.'' என்றார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்

கேரள மக்களுக்கு 3 கூட்டணிகள் கொடுத்துள்ள முக்கிய வாக்குறுதிகள்!

கேரளத்தை 10 ஆண்டுகளாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி, தனது தேர்தல் அறிக்கையில் 60 திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை;

  • சமூக நலப் பென்ஷன் ₹3000 ஆக உயர்த்தப்படும்.
  • 5 லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கும்
  • 60 ஆயிரம் மாணவர்களுக்கு காம்பஸ் பிளேஸ்மென்ட் வாய்ப்பு.
  • திறன் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்
  • கே.எஸ்.ஆர்.டி.சி செயல்பாடு லாபகரமாக மாற்றப்படும்
  • மனித–காட்டுயிர் மோதலை குறைக்கும் நடவடிக்கைகள்
  • ஆஷா பணியாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே இந்திரா உத்தரவாதங்கள் (Indira Guarantees) என்ற பெயரில், 5 முக்கிய வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதையும் உறுதி செய்து ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தல் அறிக்கையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார். அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:

  • பெண்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் இலவச பயணம்.
  • கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 நிதியுதவி.
  • சமூக நலப் பென்ஷன் ₹3000 ஆக உயர்த்துதல்
  • அனைத்து குடும்பங்களுக்கும் ₹25 லட்சம் வரை இலவச உம்மன் சாண்டி சுகாதார காப்பீடு.
  • இளைஞர்கள் தொழில் தொடங்க வட்டி இல்லா ₹5 லட்சம் கடன்
  • மூத்த குடிமக்கள் நலனுக்கான தனித்துறை
  • மத நம்பிக்கைகளை பாதுகாக்க தனி சட்டம்.
  • ஆஷா பணியாளர்களின் தினக்கூலி குறைந்தது ₹700 ஆக உயர்த்தப்படும்.
  • புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மாதிரியில் கட்டணமில்லா மருத்துவமனைகள் நிறுவப்படும்.

பட மூலாதாரம், BJP

படக்குறிப்பு, தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் நிதின் நபீன் வெளியிட்டார்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் நிதின் நபீன் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய திட்டங்கள்:

  • ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள்
  • மாநிலத்திற்கு ஒரு AIIMS மருத்துவமனை அமைத்தல்
  • திருவனந்தபுரம்–கண்ணூர் அதிவேக ரயில் பாதை அமைத்தல்.
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் வழங்குதல்.
  • முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் "தமிழ்நாட்டுக்கு தண்ணீர் – கேரளத்திற்கு பாதுகாப்பு"
  • பிபிஎல் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.2,500 ரீசார்ஜ் செய்யப்படும். இதை மருந்தகங்களிலும் மளிகைக் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
  • சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க தேவஸ்வம் வாரியங்கள் மறுசீரமைக்கப்படும்.
  • சபரிமலை தங்கத் திருட்டு சம்பவத்தில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட சிபிஐ விசாரணை நடத்தப்படும்.
  • மாநில நகரங்களை தனித்துவமான பொருளாதார மையங்களாக உருவாக்கும் திட்டம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு