'2வது போட்டியிலே இப்படியா?' - சிஎஸ்கே தோல்விக்கான 4 காரணங்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 3 அன்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 209 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை 18.4 ஓவர்களிலேயே எட்டியது பஞ்சாப் கிங்ஸ்.
இந்த சீசனில் விளையாடிய 2 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்கிறது. மேலும், சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்தபோது சிஎஸ்கே நன்றாக செயல்பட்டது போன்று தெரிந்தாலும், அந்த இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி பெரிய சவால் ஏதுமின்றி சேஸ் செய்தது. 8 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி.
இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோற்றதற்குக் காரணமாக இருந்த 4 விஷயங்கள் என்ன?
பவர்பிளே பந்துவீச்சு
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யா சந்தித்தது வெறும் 11 பந்துகள்தான். அந்த 11 பந்துகளிலேயே ஆட்டத்தை மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினார் அவர். மேட் ஹென்றி, கலீல் அஹமது இருவரின் பந்துவீச்சையும் விளாசிய அவர் அந்த 11 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்.
ஒருபக்கம் அவர் அதிரடி காட்டுகிறார் என்றால், அதை சமாளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சும் இருக்கவில்லை. சிறப்பாக புல் ஷாட் அடிக்கும் பிரியான்ஷ் ஆர்யாவுக்கு எதிராக நிறைய ஷார்ட் பால்கள் வீசினார்கள். கலீல் சில நல்ல பந்துகள் வீசினாலும், ஓரிரு பந்துகளை பிரியான்ஷ் அடிப்பதற்கு ஏற்ப வீசினார். மறுபக்கம் ஹென்றியோ முழு ஓவரையும் அப்படித்தான் வீசினார்.
பிரியான்ஷ் அவுட் ஆனபோது 4.2 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 61 ரன்கள். அதாவது 26 பந்துகளில் 61 ரன்கள். எகானமி - 14.08!
பட மூலாதாரம், Getty Images
அந்த அளவுக்கு சரியான திட்டமிடல் இல்லாமல் ஒரேமாதிரியாக இருந்தது சூப்பர் கிங்ஸின் பவர்பிளே பந்துவீச்சு. கலீல், ஹென்றி இருவரும் பிரியான்ஷ் அடிப்பதுபோல் பந்துவீசுகிறார்கள் என்றால், அதற்கு இடையே பிரப்சிம்ரனுக்கு ஏற்ற வகையில் ஃபுல் லென்த் பந்துகளாக வீசினார் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ். அப்படி அவர் வீச, ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் பிரப்சிம்ரன்.
இரண்டு ஓப்பனர்களும் சிறப்பாக ஆடியதால் பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் பவர்பிளேவில் எடுத்த ஸ்கோர் 57/1. முதல் கட்டத்திலேயே பஞ்சாப்பை விட 11 ரன்கள் கூடுதலாகப் பெற்றது சிஎஸ்கே.
சூப்பர் கிங்ஸுக்கு பவர்பிளேவில் போட ஓரளவு சரியான பௌலர்கள் இருக்கிறார்கள் என்றும், டெத் பௌலிங் தான் பிரச்னை என்றும் பேசப்பட்டது. ஆனால், பவர்பிளேவிலேயே இப்படிப் பந்துவீசி பின்தங்குகிறார்கள். ஆட்டமோ டெத் ஓவர்களை அடைவதற்கு முன்னதாகவே ஒருதலைப்பட்சமாக மாறிவிடுகிறது.
ஸ்பின்னர்களின் செயல்பாடு
பட மூலாதாரம், Getty Images
ஆயுஷ் மாத்ரே தன் அதிரடியை ஆரம்பித்ததும் சென்னை சூப்பர் கிங்ஸின் ரன்ரேட் மெல்ல உயரத் தொடங்கியது. நான்காவது ஓவரிலிருந்து மெல்ல உயரத் தொடங்கிய ரன்ரேட் ஏழாவது ஓவரில் முதல் முறையாக பத்தைத் தொட்டது. ஆனால், அடுத்த ஓவரே அதை சற்றுக் குறைத்தார் சஹல். அப்போது மட்டுமல்ல, இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர், ஒவ்வொரு முறையும் ரன்ரேட்டைக் குறைத்தார். சிஎஸ்கே பேட்டர்களின் நம்பிக்கையிலும் சிறு விரிசலை ஏற்படுத்தினார்.
3 ஓவர்கள் பந்துவீசிய அவர் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் 6 பௌலர்கள் பந்துவீசிய இந்தப் போட்டியில் ஒன்பதுக்கும் குறைவான ரன்ரேட்டில் பந்துவீசிய பௌலர் இவர் மட்டுமே. இவர் பந்துவீச்சில் பஞ்சாப் ஃபீல்டர்கள் ஆயுஷ் மாத்ரேவின் இரண்டு கேட்சுகளைத் தவறவிட்டனர். இல்லையேல் அவர் கூடுதலாக விக்கெட் வீழ்த்தியிருக்கக்கூடும்.
அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூர் அஹமது, ராகுல் சஹர் என 2 ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது. ராகுல் சஹரை இம்பேக்ட் வீரராக களமிறக்கினார். சஹல் போல் இவர்கள் தாக்கம் ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.
இரு சிஎஸ்கே ஸ்பின்னர்களும் சேர்ந்து 8 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்தனர். விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்த முடியவில்லை. போக, அவர்களால் எந்த வகையிலும் பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்களுக்கு சவால் கொடுக்க முடியவில்லை.
போட்டிக்குப் பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணிக்குத் தேவைப்படும் ரன்ரேட் கிட்டத்தட்ட 11 வரை சென்றது. அப்போது இரண்டு நல்ல ஓவர்கள் வீசியிருந்தால் அது 12-13 வரை சென்றிருக்கும். ஆனால், எங்களுக்கு அது கிடைக்கவில்லை" என்று கூறினார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு சஹல் செய்ததை சூப்பர் கிங்ஸுக்காக சஹர் மற்றும் நூர் இருவரால் செய்ய முடியவில்லை.
யுஸ்வேந்திர சஹல் இந்த ஆடுகளத்தை நன்கு கணித்து வேகத்தை வேறுபடுத்தினார். சில பந்துகளை சுமார் 70-75 kmph வேகத்திலும் கூட வீசினார். அப்படி மெதுவாக வீசப்பட்ட பந்துகள் சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்கு சவாலாக அமைந்தன. ஆனால், சென்னை ஸ்பின்னர்களோ அப்படி எதுவும் செய்யாமல் தங்களின் வழக்கமான வேகத்திலேயே பந்துவீசினார்கள். அது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.
அணித்தேர்வும் பயன்பாடும்
பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெளிநாட்டு வீரர்களைத் தான் பயன்படுத்தியது - மேட் ஹென்றி, நூர் அஹமது.
கடந்த போட்டியில் 43 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோர் எட்ட உதவிய ஜேமி ஓவர்டனை அவர்கள் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை. அதற்குப் பதிலாக பிரஷாந்த் வீர் இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்றார்.
பிரஷாந்த் வீரின் பந்துவீச்சை பயன்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்குமோ என்று கருதப்பட்ட நிலையில், அவருக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஆட்டம் கையை விட்டுப் போன பிறகும் கூட பிரஷாந்த் வீருக்கு கெய்க்வாட் பந்தைக் கொடுக்கவில்லை. அப்படி அவரை பேட்டராகத்தான் பயன்படுத்தப்போகிறார்கள் என்றால், அதற்கு ஓவர்டனையே பயன்படுத்தியிருக்கலாம் என்று வல்லுநர்கள் பலரும் கருதுகிறார்கள்.
இந்தப் போட்டியில் 7 பந்துகளை சந்தித்த பிரஷாந்த் வீர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்காக கடைசி கட்டத்தில் நன்றாக அதிரடி காட்டக்கூடிய ஓவர்டனை களமிறக்காதது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்தப் போட்டிக்குப் பிறகு கிரிக்பஸ் நிகழ்ச்சியொன்றில் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூட, ஜேமி ஓவர்டன் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
உடல்மொழி
பட மூலாதாரம், Getty Images
போட்டி முடிந்த பிறகு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், "சிஎஸ்கே அணியின் பேட்டிங், பௌலிங் ஆகியவற்றைவிட அவர்களின் உடல்மொழி தான் எனக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஆட்டத்தின் 12வது ஓவரிலேயே அவர்களின் உடல்மொழி தொய்வடைந்துவிட்டது. அதுதான் எனக்கு பெரிய கவலையாக இருக்கிறது" என்று கூறினார்.
சீசனின் இரண்டாவது போட்டியிலேயே அணியின் உடல்மொழி விமர்சிக்கப்படுகிறது என்றால் அது சற்றே ஆபத்தானதுதான்.
தொடர்ந்து தடுமாற்றமான செயல்பாடுகள் வந்துகொண்டே இருப்பதால் அது வீரர்களின் நம்பிக்கையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதை சூப்பர் கிங்ஸ் சரியாகக் கையாள்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ருதுராஜ் நடுவே தங்களால் நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை என்கிறார். ஆனால், ஆட்டத்தின் பாதியிலேயே சோர்ந்துவிடும் உடல்மொழியை வீரர்கள் வெளிக்காட்டும்போது எதிரணி எப்படி நெருக்கடிக்குள்ளாகும்? இது சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு மோதுகிறது. இந்தப் போட்டி பெங்களூருவில் நடக்கிறது.
- இது, பிபிசிக்கா கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை