கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த குழு வால்பாறையில் விபத்தில் சிக்கி பலி - என்ன நடந்தது?
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் பெருந்தல்மன்னா அருகிலுள்ள பாங் என்ற பகுதியில் ஓர் அரசுப் பள்ளி உள்ளது. எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சிலருடைய குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட மொத்தம் 13 பேர் பயணம் செய்துள்ளனர்.
வாகனத்தை முகம்மது ஃபாஹிஸ் என்பவர் இயக்கியுள்ளார். திருச்சூர் வழியாக சாலக்குடி அதிரப்பள்ளிக்குச் சென்ற இந்த குழுவினர், அதிரப்பள்ளியிலிருந்து மழுக்குப்பாறை வழியாக வால்பாறை வந்துள்ளனர். அங்கிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக ஊருக்குத் திரும்புவதற்குத் திட்டமிட்டு பயணம் செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Handout
வால்பாறை காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, மாலை 5 மணியிலிருந்து ஐந்தரை மணியளவில், வேன் 13வது கொண்டை ஊசி வளைவைக் கடக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அதனால் வாகனம் சாலையிலிருந்து விலகி 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு ஆண் மற்றும் 7 பெண்கள் உட்பட 8 பேர், அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். ஓட்டுநர், 17–18 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் ஆகிய 5 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
அவ்வழியே வந்தவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலமாக, காயம் அடைந்தவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் செல்லும் வழியில் இறந்துள்ளார். தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு சிறுமியும், 3 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட மூலாதாரம், Handout
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''இந்த வாகனத்தில் 8 பெண்கள் 5 ஆண்கள் என 13 பேர் பயணித்துள்ளனர். விபத்துக்குப் பின், தீயணைப்பு துறை வருவாய்ந்துறை, காவல்துறையால் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏழு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நலமுடன் உள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் , பாலக்காடு மாவட்ட ஆட்சியரோடு தொடர்பில் இருக்கிறோம் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.'' என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Handout
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த கேரள மாநில மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, ''வால்பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி அறிவிப்பு வெளியிடப்படும் . இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை முடித்து உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.'' என்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வால்பாறையில் மலையாளிகள் பயணம் செய்த வாகன விபத்தில் பயணிகள் உயிரிழந்தது மிகுந்த துயரமானது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அடங்கிய குழுவே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. அவர்களின் இழப்பு நாட்டிற்கே நிரப்ப முடியாததாகும். உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் நண்பர்களும் அனுபவிக்கும் துயரில் நான் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையானால் சிறந்த சிகிச்சை வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை