லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? - லத்தீன் அமெரிக்கர்கள் குறி வைக்கப்படுகிறார்களா?

    • எழுதியவர், பிராண்டன் ட்ரெனான் & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளைத் தொடர்ந்து வெடித்த வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நகரத்திற்கு 2,000 தேசிய காவல் படை துருப்புகளை (National Guard troops) அனுப்பினார். இது ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து பெரும் எதிர்ப்பைத் தூண்டியது. பின்னர் திங்களன்று (ஜூன் 9) அவர் மேலும் 2,000 துருப்புகளையும் 700 கடற்படை வீரர்களையும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார்.

லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் இருந்து, பெருமளவிலான ஆவணமற்ற குடியேறிகள் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு, மக்கள் ஒன்றுகூடி போராடத் தொடங்கினர்.

ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் தொடங்கிய போதிலும், சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வார இறுதியில் போராட்டக்காரர்களால் ஒரு முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. பின்னர் திங்கள்கிழமை பிற்பகுதியில் பதற்றம் சற்று தணியத் தொடங்கியது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மக்கள் ஏன் போராடுகிறார்கள்?

வெள்ளிக்கிழமை (ஜூன் 6), குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐசிஇ- ICE) அதிகாரிகள், லத்தீன் அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் நகரப் பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டனர். அதன் பிறகு, போராட்டங்கள் தொடங்கின.

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இத்தகைய சோதனைகள் அதிகரித்துள்ளன.

பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ், "சமீபத்திய நடவடிக்கைகள் வெஸ்ட்லேக் மாவட்டத்திலும், லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தெற்கே உள்ள பாரமவுன்டிலும் நடந்ததாகத் தெரிவித்தது. அங்குள்ள மக்கள் தொகையில் 82%க்கும் அதிகமானோர் ஹிஸ்பானிக் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) இனத்தவர்கள்" எனத் தெரிவித்தது.

பாரமவுன்டில் உள்ள ஒரு ஹோம் டிப்போ கடையில் ஐசிஇ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் வந்தன. அந்தத் தகவல் பொய்யானது என்று அதிகாரிகள் பிபிசியிடம் கூறினர்.

வெள்ளிக்கிழமை ஒரு பணியிடத்தில் நடந்த சோதனையில், ஆவணமின்றி வாழும் 44 குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக ஐசிஇ (குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள்) அதிகாரிகள், சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர். அதே நாளில் கிரேட்டர் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் போராட்டங்கள் எங்கே நடந்தன?

போராட்டங்கள் பெரும்பாலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மையத்தில் மட்டுமே நடந்தன. மோதல்கள் ஏற்பட்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் மக்கள் கூடுவது 'சட்டவிரோதமானது' என காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) அன்று வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. குதிரை ரோந்துப் படையினருக்கு எதிராக போராட்டக்காரர்கள் தீ மூட்டும் சாதனங்களைப் பயன்படுத்தியதாக போலீசார் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஃபிளாஷ்-பேங் கையெறி குண்டுகள் (கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும் குண்டுகள்) மற்றும் பெப்பர் ஸ்ப்ரேவை பயன்படுத்தினர். இந்த அமைதியின்மை காரணமாக அமெரிக்க நெடுஞ்சாலை 101 தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவங்கள் நடந்ததாகவும் செய்திகள் வந்தன.
  • நகரின் மையத்தில் இருந்த ஃபெடரல் கட்டடத்தில் ஐசிஇ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக செய்தி பரவியது. அதைத் தொடர்ந்து, அப்பகுதி ஒரு பரபரப்பான இடமாக மாறியது. சனிக்கிழமை அன்று '1,000க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள்' ஃபெடரல் கட்டடத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கியதாக ஐசிஇ குற்றம் சாட்டியது.
  • லாஸ் ஏஞ்சலஸ் நகர மையத்தில் இருந்து சுமார் 20 மைல்கள் (32 கி.மீ) தெற்கே உள்ள பாராமவுன்டின் ஒரு ஹோம் டிப்போ (கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை) மற்றொரு முக்கிய போராட்டக் களமாக மாறியுள்ளது. சனிக்கிழமையன்று கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் ஃபிளாஷ்-பேங் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை ஆயுதமேந்திய தேசிய காவல்படை துருப்புகள், அருகிலுள்ள ஒரு வணிகப் பூங்காவை பாதுகாத்தனர்.
  • லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறை (LAPD) சனிக்கிழமை அன்று 29 பேரைக் கைது செய்ததாகக் கூறியது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, வெவ்வேறு இடங்களில் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர் என்று அங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.
  • திங்கள்கிழமையும் போராட்டங்கள் தொடர்ந்தன, மக்களைக் கலைக்க போலீசார் ஃபிளாஷ்-பேங் கையெறி குண்டுகளை வீசினர். வார இறுதியுடன் ஒப்பிடும்போது வன்முறை சம்பவங்கள் மற்றும் தெருக்களில் மக்கள் கூட்டம் குறைந்ததால், அன்றைய தினம் பதற்றம் சற்று தணிந்தது.

வார இறுதியில் எல்.ஏ பிரைட் (Pride) அணிவகுப்புக்காக மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலஸின் சில பகுதிகள் மூடப்பட்டு இருந்தாலும், மற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை வழக்கம் போலத் தொடர்கிறது.

தேசிய காவல்படை என்றால் என்ன? டிரம்ப் அதை ஏன் பயன்படுத்தினார்?

சனிக்கிழமை, டிரம்ப் லாஸ் ஏஞ்சலஸ் பகுதிக்கு 2,000 தேசிய காவல்படை துருப்புகளை அனுப்பினார். இது மாகாண அரசியல்வாதிகளுடனான ஒரு அரசியல் மோதலுக்கு வழிவகுத்தது.

திங்கள்கிழமை மாலை, அவர் மேலும் 2,000 தேசிய காவல்படை துருப்புகளை அனுப்ப உத்தரவிட்டார். இந்த முயற்சிகளுக்கு உதவ பென்டகன் ராணுவத் தலைமையகமும் 700 கடற்படையினரை அழைத்தது.

தேசிய காவல்படை, மாகாணங்கள் மற்றும் ஃபெடரல் அரசின் நலன்களுக்குச் சேவையாற்றும் ஓர் அமைப்பாகச் செயல்படுகிறது. பொதுவாக, ஒரு மாகாணத்தின் ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் அந்தப் படை செயல்படுகிறது.

லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ப்பாட்டங்கள் 'அமெரிக்க அரசின் அதிகாரத்திற்கு எதிரான ஒரு வகையான கிளர்ச்சி' என்று வாதிட்ட டிரம்ப், அரிதாகவே செயல்படுத்தப்படும் ஒரு ஃபெடரல் சட்டத்தை மேற்கோள் காட்டி, 'ஆளுநரின் வேண்டுகோள்' எனும் தேவையைத் தவிர்த்தார்.

கடந்த 1965ஆம் ஆண்டுக்குப் பிறகு மாகாண ஆளுநரின் வேண்டுகோள் இல்லாமல் தேசிய காவல்படை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையை கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோர் கண்டித்துள்ளனர். உள்ளூர் காவல்துறையினரால் நிலைமையைக் கையாள முடியும் என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறினர்.

இது, 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடிய' ஒரு 'சட்டவிரோத' செயல் என டிரம்ப் மீது குற்றம் சாட்டிய கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசம், பின்னர் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார்.

திங்கள் கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கலிபோர்னியா ஆளுநரின் விருப்பத்திற்கு எதிராக தேசிய காவல்படையைப் பயன்படுத்துவதன் மூலம், மாகாணங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிராக டிரம்ப் செயல்படுகிறார் என்று கலிபோர்னியா மாகாண அரசு வாதிட்டது.

அரசியலமைப்பில் ஃபெடரல் அரசுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத எந்தவோர் அதிகாரமும் மாநிலங்களுக்குச் சொந்தமாகிறது என்று 10வது திருத்தம் கூறுகிறது.

கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போன்டாவின் கூற்றுப்படி, "இந்த தேசிய காவல்படை பயன்பாடு, அமெரிக்க ஃபெடரல் அரசின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட ஓர் ஆக்ரோஷமான நடவடிக்கை. களத்தில் உள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி, இதை நியாயப்படுத்த முடியவில்லை."

போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு ஜூன் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சிபிஎஸ் நியூஸ்/YouGov கருத்துக் கணிப்பில், 54% அமெரிக்கர்கள் டிரம்பின் நாடு கடத்தல் கொள்கையை ஆதரிப்பதாகவும், 50% பேர் அவர் குடியேற்றத்தைக் கையாளும் முறையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேநேரம், அவரது பொருளாதாரக் கொள்கைகளை 42% பேர் ஆதரித்தனர் மற்றும் பணவீக்கத்திற்கு எதிரான அவரது உத்தியை 39% பேர் ஆதரித்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட மற்ற முகமைகள் எவை?

ஐசிஇ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) பணியாளர்கள் உள்ளிட்ட ஃபெடரல் ஏஜென்ட்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது, அவர்களைப் பாதுகாப்பதே தேசிய காவல்படையின் பணியாகும்.

இந்தத் துருப்புகள் சொந்தமாக குடியேற்றச் சோதனைகளை நடத்தவோ அல்லது வழக்கமான காவல் பணியை மேற்கொள்ளவோ ​​மாட்டார்கள். இது லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறையின் பணியாகவே உள்ளது.

கிளர்ச்சிச் சட்டம் (Insurrection Act) போன்ற சில சூழ்நிலைகளைத் தவிர்த்து, பொதுவாக உள்நாட்டு அல்லது பொதுமக்கள் தொடர்பான சட்ட அமலாக்கத்திற்காக ஃபெடரல் துருப்புகளைப் பயன்படுத்துவதை சட்டம் தடை செய்கிறது.

உதாரணமாக, 2020 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' (Black lives matter) ஆர்ப்பாட்டங்களின்போது கிளர்ச்சிச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக டிரம்ப் மிரட்டிய போதிலும், அவர் இங்கே அதைப் பயன்படுத்தவில்லை.

தேசிய காவல்படையைப் பயன்படுத்துவதற்கான டிரம்பின் முடிவை அவரது ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

கூடுதலாக, அருகிலுள்ள கேம்ப் பென்டில்டனில் பணியில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவர்களும் களத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

ஐசிஇ யாரை நாடு கடத்துகிறது?

சமீபத்திய சோதனைகள், அமெரிக்க வரலாற்றில் 'மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கையை' செயல்படுத்த வேண்டும் என்ற அதிபரின் நோக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் அமெரிக்காவுக்கு வெளியே பிறந்தவர்கள். எனவே இந்த நகரம் அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இலக்காக இருந்து வருகிறது.

மே மாத தொடக்கத்தில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஒரு வார கால சோதனையின்போது 239 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைக் கைது செய்ததாக ஐசிஇ அறிவித்தது. ஆனால், டிரம்ப் எதிர்பார்த்ததைவிட குறைவான மக்களே கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர்.

எனவே அதற்கு அடுத்த மாதம், ஐசிஇ அதிகாரிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது 3,000 பேரைக் கைது செய்ய வேண்டும் என்ற இலக்கை வெள்ளை மாளிகை நிர்ணயித்தது.

சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்படப் பல இடங்களில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எல் சால்வடாரில் உள்ள ஒரு பெரிய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரில் குறைந்தபட்சம் ஒருவராவது சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர் என்பதைக் கூற முடியும். டிரம்பின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு