திருமாவளவன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததும் அடுத்த சில நாட்களில் பின்வாங்கியதும் ஏன்?
பட மூலாதாரம், THIRUMA OFFICIAL FACEBOOK page
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அடுத்த சில தினங்களிலேயே பின்வாங்கியுள்ளார்.
திருமாவளவனின் இந்த முடிவு திமுகவின் கடும் அழுத்தத்தாலேயே எடுக்கப்பட்டது என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.
திருமாவளவனின் முடிவுகளுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறது திமுக.
திருமாவளவனின் இத்தகைய முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாகவும் அவரது "தடுமாற்றத்தை" வெளிப்படுத்துவதாகவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதுதொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களை புறந்தள்ளியுள்ள விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, 'திருமாவளவன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தது, பின்னர் அதனை கைவிட்டது ஆகிய இரு முடிவுகளுமே சுதந்திரமாக எடுக்கப்பட்டதுதான்' என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், விசிக சார்பில் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 4 பேரில் மூன்று பேருக்கு (ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு) மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சிந்தனை செல்வனுக்கு மட்டுமே மீண்டும் சீட் கிடைத்தது.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
அப்போது இதுதொடர்பாக காணொளி வெளியிட்ட திருமாவளவன், "பல வருத்தங்கள் நமக்கு இருந்தாலும்கூட, அதாவது கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற முடியவில்லை. குறிப்பாக அரூர் தொகுதியைக் கேட்டுப்பெற முடியவில்லை. இன்னும் பல வருத்தங்கள், வலிகள் நமக்கு உண்டு. ஆனால், இதுதான் தேர்தல் அரசியல். இந்தத் தேர்தல் அரசியலை நாம் எதிர்கொண்டாக வேண்டும். இன்னும் நாம் ஒரு மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதிசெய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கிறோம்." என தெரிவித்தார்.
தான் போட்டியிடுவது குறித்து பேசிய திருமாவளவன், "தமிழக அரசியலில் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோவிலில் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன்" என்றார்.
இதையடுத்து, 'திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம்', 'தொங்கு சட்டமன்றம் அமையலாம்' அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆகிய சில காரணிகளை மனதில் வைத்தே திருமாவளவன் இத்தகைய முடிவை எடுத்ததாக தமிழக அரசியல் அரங்கில் பேசப்பட்டது.
இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாக திருமாவளவன் ஏப்ரல் 4-ஆம் தேதி அறிவித்தார்.
பட மூலாதாரம், Aloor Sha Navas/Facebook
திருமாவளவன் கூறியது என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியாக இருந்தாலும் சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். சட்டப்பேரவையில் விளிம்புநிலை மக்களுக்கான அரசியலை பேச வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளாகவே எண்ணி வந்திருக்கிறேன். 2001-ல் (அப்போதைய) மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இரண்டரை ஆண்டுகளில் என் பதவியை ராஜினாமா செய்தேன். மற்றொரு தேர்தலில் தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்காக தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறேன். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை என்பதை இவை காட்டுகின்றன." என்றார்.
ஆனாலும் தமிழ்நாட்டில் வலதுசாரியின் கைகள் ஓங்கிவருவதாக கூறிய அவர், "அவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர். முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை சங் பரிவாரங்கள் மேற்கொண்டன. என்னை அந்த கூட்டணியில் இருந்து நயவஞ்சகமாக பிரிக்க முயற்சி செய்தனர். தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது என்றால் அதற்கு விசிகவும் குறிப்பாக திருமாவளவனும் காரணம் என்பதை பெருமிதத்துடன் சொல்வேன். எந்த ஆசை வார்த்தைக்கும் இணங்காமல் உறுதியாக நின்று, கூட்டணிக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்." என்றார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை இந்த தேர்தலில் கோருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது கூட, அதனை திட்டவட்டமாக மறுத்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
"கூட்டணி பலவீனப்படக் கூடாது என்பதால் அப்படி கூறினேன். ஆனால், ஏதேதோ ஊகங்களை யார் யாரோ கட்டமைத்திருக்கின்றனர். திருமாவளவன் கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்கிறார், துணை முதலமைச்சராக ஆசைப்படுகிறார், தொங்கு சட்டமன்றம அமையப் போகிறது என்று தான் ஊகிப்பதாகவும் கூறுகின்றனர். ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள மூன்று பேருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது அவர்கள் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள் என்பதனால்தான் என்று மிக தவறாக பரப்புகின்றனர்." என கூறினார் திருமாவளவன்.
காங்கிரஸ்காரரை வேட்பாளராக அறிவித்தது ஏன்?
அத்துடன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்ற திருமாவளவனின் அறிவிப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகளுக்காக போராடிய இளையபெருமாள் சுதந்திர இந்தியாவில் 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்தவர். அவருடைய இளைய மகன் ஜோதிமணி தற்போது காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தது ஏன் என்ற கேள்விக்கும் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
"எங்களுக்கு முன்பே அந்த மண்ணில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இளையபெருமாள். தேசிய அளவிலான தலைவர் அவர். அப்படிப்பட்ட தலைவர் பிறந்த மண் காட்டுமன்னார்கோவில். திருமாவளவன் மீது அந்த மக்கள் காட்டும் பேரன்புக்கு இதுவும் ஒரு காரணம். இளையபெருமாளின் குடும்பத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த நந்தகுமார் காலமாகிவிட்டார். அவருடைய துணைவியார் ரூபி எஸ்தர் வேறொரு சமூகம் என்பதால் அவரால் தனி தொகுதியில் நிற்க முடியாது. அதனால் அவரை தேர்வு செய்ய முடியவில்லை. அக்குடும்பத்தில் எஞ்சியிருப்பவர் ஜோதிமணி. அவருக்கு ஒரு வாய்ப்பு தருவோம் என்பதன் அடிப்படையில் அவரை நிறுத்தியிருக்கிறோம். அவரின் குடும்பத்தை கௌரவிப்பதற்காக அறிவித்திருக்கிறேன்" என்றார்.
ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர் என்றும் , காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்புமனு அளித்ததாகவும் தெரிவித்தார்.
தொல் திருமாவளவன் தன்னை வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய ஜோதிமணி, அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவரும், விசிக தலைவரும் ஒன்றாக சேர்ந்து என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.
திருமாளவன் முடிவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
திருமாவளவன் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.
குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "திமுக அழுத்தத்தின் காரணமாகவே திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை" என்று விமர்சித்தார்.
தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பில், "உதயநிதிக்காக மட்டுமே மாநில அரசியலுக்கு திரும்ப கூடாது என திருமாவளவனுக்கு சொன்னவர் முதலமைச்சர் ஸ்டாலின். சபரீசன் உள்ளிட்ட மொத்த குடும்பமும் பேசி திருமாவளவனை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளனர்." என்று குற்றம்சாட்டினார்.
திமுக அழுத்தம் தான் இதற்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் விமர்சித்தார்.
விமர்சனங்களுக்கு பதிலளித்த திருமாவளவன், "அதீதமான, ஆதாரமில்லாத கற்பனை. என் கட்சியில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள மூவர் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என பலரும் கூறினர். இதில், திருமாவளவன் நெருக்கடிகளுக்கு அடிபணியமாட்டார் என்ற தொனியும் இருக்கிறது. இப்போது, நான் போட்டியிடாமல் இருப்பதற்கு திமுகவின் அழுத்தம் காரணம் என்கின்றனர். இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன." என்றார்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயராணி, "கூட்டணிக்குள் இருப்பதால் திமுகவுக்கு சாதகமான முடிவுகளை திருமாவளவன் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை. தனக்கு தேவையான விஷயங்களுக்கு கூட சமரசம் செய்துகொள்கிறாரோ என வெளியில் இருந்து பார்க்கும்போது தோன்றுகிறது." என்றார்.
"இப்போது விசிகவுக்கு கடும் நெருக்கடியான சூழல்தான். தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலையில் திருமாவளவன் இருக்கிறார். வலுவான தலைவராக அறியப்படும், விளிம்புநிலை மக்களுக்கான தலைவராக அறியப்படும் ஒருவரை அவர் என்ன நினைக்கிறாரோ, அதை செய்ய விடாமல் திமுக ஆக்குகிறது. சமரசமான மனநிலையில் தான் விசிக இருக்கிறது. விசிகவுக்கு திமுகவின் கூட்டணியில் பொதுவான நோக்கங்கள் என்பது, சமூகநீதி, மாநில உரிமை, வலதுசாரி அரசியல் எதிர்ப்பு ஆகியவை. ஆனால், தனிப்பட்ட நோக்கம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுத் தருவது, அரசியல் அதிகாரத்தை போராடி பெறுவது. திமுகவுடனான சமரசத்தில் இவற்றை முற்றிலுமாக ஓரமாக தள்ளிவிட்டு, வலதுசாரி அரசியலை மட்டும் ஒரே நோக்கமாக கையிலெடுத்தால் திமுகவும் விசிகவும் ஒரே கட்சியாகிவிடும்." என்கிறார் ஜெயராணி.
திமுக கூறியது என்ன?
திமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.பியுமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
"விசிகவுக்கு 8 தொகுதிகள் கொடுப்பது வரைதான் திமுகவின் முடிவு. அதில் யார் நிற்கிறார்கள் என்பது திமுகவின் முடிவு அல்ல. நாங்கள் அழுத்தம் கொடுத்து திருமாவளவன் நிற்கவில்லையென்றால் அதனால் திமுகவுக்கு என்ன லாபம்? தங்களுடைய வேட்பாளர்கள் குறித்து முடிவெடுப்பதில் அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது." என்றார்.
உதயநிதி அரசியலுக்காக இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், "திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்பவில்லையென்றால் அவர் டெல்லியிலேயே தான் இருப்பாரா? நாங்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டாம் என கூறிவிடுவோமா? உதயநிதியை நாங்கள் கொண்டு வருவதற்கும் திருமாவளவனுக்கும் என்ன சம்பந்தம்?" என்றார்.
'திமுக எதிர்ப்பாளர்களுக்கு திருமாவளவன் தீனி போட்டுவிட்டார்'
திருமாவளவன் குறுகிய காலத்தில் எடுத்த இந்த மாறுபட்ட முடிவுகளை தவிர்த்திருக்கலாம் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதில் என்ன தடுமாற்றம், குழப்பம் இருந்ததோ, இப்போது அவர் விலகியபோதும் அவை இருக்கின்றன. தேர்தலை நோக்கி போகும் போது இந்த விஷயங்கள் நல்லதல்ல. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பதில் அவருக்கு வருத்தம் இருக்கலாம். கட்சிக்குள் இருப்பவர்கள் அழுத்தம் கொடுத்ததால் காட்டுமன்னார்கோவிலில் தானே போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கலாம். இப்போது போட்டியிடவில்லை என்கிறார். ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன." என்கிறார் ப்ரியன்.
தன்னுடைய இந்த மாறுபட்ட முடிவுகளால் திமுக எதிர்ப்பாளர்களுக்கு திருமாவளவன் "தீனி போட்டுவிட்டதாக" கூறுகிறார் ப்ரியன்.
விசிக எம்.எல்.ஏ. பதில்
திருமாவளவன் போட்டியிடுவதில் இருந்து விலகியது தொடர்பாக எழும் விமர்சனங்கள் குறித்து விசிக எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கான ஒரே வழியாக எதிர்தரப்பினர் கையாள்வது திருமாவளவனுக்கு இடையூறு தருவதுதான். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. விசிக இந்த கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெறுகிறது." என்றார்.
"வேட்பாளர் தேர்வில் திமுகவின் நெருக்கத்தால் மூன்று எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என கூறியவர்கள், இப்போது அதற்கு நேர்மாறாக விமர்சிக்கின்றனர். அப்போது துணிச்சலாக முடிவெடுத்தவர், இப்போது ஏன் துணிச்சல் இல்லாமல் முடிவெடுக்க போகிறார்? இரு முடிவுகளுமே சுதந்திரமானதுதான்." என்கிறார் எஸ்.எஸ். பாலாஜி.
தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து திருமாவளவன் சமூக ஊடகங்களில் பேசுவதும் அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்தார். "சமூக ஊடகங்கள், இன்ஃப்ளூயென்சர்களின் காலகட்டத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக விளக்கம் கூறுவதற்கான தேவை இருக்கிறது" என்றார் எஸ்.எஸ். பாலாஜி.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை