ஆண்களுக்கும் தோன்றும் கர்ப்ப கால அறிகுறிகள் பற்றி தெரியுமா?

கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாண்டி ஓங்
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கூவாட் சிண்ட்ரோம் என்பது கர்ப்பிணிகளின் இணையர்களில் ஏறக்குறைய பாதிப் பேருக்கு ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். இதன் காரணமாக, கர்ப்பம் தரித்த பெண் மட்டுமல்லாமல், அவரது துணையும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்குவார்கள்.

இந்தப் பிரச்னை இருப்போருக்கு, அறிகுறிகள் திடீரெனத் தோன்றக்கூடும். குமட்டல், அதீத சோர்வு, கைகளில் மரத்துப்போன உணர்வு, கைகள் மற்றும் மார்புப் பகுதியில் தோல் உணர்திறன் மிக்கதாக மாறுதல், வலி ஏற்படுதல் அல்லது பொதுவாகவே ஓர் அசௌகரியம் அல்லது இயல்புக்கு மாறான உணர்வு ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும்.

இவை பொதுவாக கர்ப்பத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய அறிகுறிகளாகும். ஆனால், இந்த நிலையைப் பொறுத்தவரை, உண்மையில் கர்ப்பமாக இல்லாத, தந்தையாகப் போகும் ஆணோ அல்லது கர்ப்பிணியின் இணையரோ இந்த அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். அப்படியான நிலையே கூவாட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.

ஒஹாயோவில் உள்ள க்ளீவ்லெண்ட் கிளினிக்கில் பணியாற்றும் கேத்தரீன் கபோனெரோ என்பவர், இதை மிகவும் எளிய முறையில் விளக்குகிறார். "இதை 'பரிவுசார் கர்ப்பம்' என்று அழைப்பதே இதை விவரிப்பதற்கான மிகச் சிறந்த வழி," என்கிறார் அவர்.

சுருக்கமாகக் கூறினால், "உயிரியல் ரீதியாகத் தான் கர்ப்பமாக இல்லையென்ற போதிலும், கர்ப்பிணி அல்லாத ஒரு துணைவர் கர்ப்பத்திற்கான அறிகுறிகளை அனுபவிப்பதே இந்த நிலையாகும்" என்று அவர் விளக்கினார்.

இந்நிலையானது, மக்கள் முன்பு கருதியதை விடவும் அதிக அளவில் பரவலாக இருக்கக்கூடும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இந்த இயல்புக்கு மாறான அறிகுறிகள் முக்கியமானவையாக இருக்கலாம் என்று சில அறிவியலாலர்கள் கருதுகின்றனர். கர்ப்பமானது தம்பதியரில் இருவரையுமே, அதாவது ஒருவருக்கு உடல்ரீதியாகவும், மற்றொருவருக்கு உணர்வுரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும்கூட, பாதிக்கிறதா என்பது குறித்து அவர்கள் இப்போது ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

பரவலான, மாறுபட்ட அறிகுறிகள்

கேத்தரீன் கபோனெரோவின் கூற்றுப்படி, கூவாட் சிண்ட்ரோம் என்பது கருவுற்றிருக்கும் பெண்ணுடன் வசிப்பவர்களும், அவரைப் பராமரிப்பதில் நெருக்கமாக ஈடுபடுவோருமான வருங்காலத் தந்தையர்கள் மட்டுமின்றி, தன்பாலின இணையர்களையும், அவ்வளவு ஏன் வருங்காலப் பாட்டிகளையும்கூட பாதிக்கக்கூடும்.

இதன் அறிகுறிகள் மிகவும் பரவலானவையாகவும் மாறுபட்டவையாகவும் இருக்கலாம். குமட்டல், அதீத சோர்வு, முதுகு வலி, பல் வலி, மனநிலை மாற்றங்கள், குறிப்பிட்ட உணவுகளின் மீதான தீவிர விருப்பம், உடல் எடை அதிகரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த அறிகுறிகள் பெரும்பாலும் ஓர் உண்மையான கர்ப்ப காலத்தைப் போலவே தொடங்கி, அதே பாணியில் படிப்படியாக வளர்கின்றன. இவை வழக்கமாக முதல் மற்றும் மூன்றாவது மூன்று மாத காலங்களில் (கர்ப்பத்தின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகளில்) மிகவும் தீவிரமாக வெளிப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் அந்த அறிகுறிகள் மறைந்துவிடுகின்றன.

கூவாட் சிண்ட்ரோம் பல விதங்களில் வெளிப்படக் கூடியதாகவும், அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லாததாலும், இது எவ்வளவு பரவலாகக் காணப்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். வெவ்வேறு ஆய்வுகள் மிகவும் மாறுபட்ட புள்ளிவிவரங்களைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கருவுற்றிருந்த தங்கள் துணையின் கர்ப்ப காலத்தில் தாங்களும் சில அறிகுறிகளை அனுபவித்ததாக 52% வரையிலான வருங்காலத் தந்தைகள் கூறியிருந்தனர். ஜோர்டான் (59%), தாய்லாந்து (61%) ஆகிய நாடுகளிலும் இதேபோன்ற புள்ளிவிவரங்களே கிடைத்தன.

போலந்து மற்றும் சீனாவில் நடத்தப்பட்ட பிற ஆய்வுகள் இன்னும் அதிகமான புள்ளிவிவரங்களைக் காட்டின. அங்கு கருவுற்றிருந்த ஒவ்வொரு 10 பேரில் சுமார் 7 வருங்கால தந்தையர்கள் இந்த அறிகுறிகளை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் உதாரணமாக சுவீடனில் சுமார் 20% மற்றும் ரஷ்யாவில் 35% என்ற அளவிலேயே இது பதிவாகியுள்ளது.

கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பல ஆய்வுகள் இது மிகவும் பரவலாகக் காணப்படுவதாகச் சுட்டிக் காட்டினாலும், கூவாட் சிண்ட்ரோம் இன்னும் அதிகாரபூர்வமாக ஒரு மருத்துவப் பிரச்னையாக அங்கீகரிக்கப்படவில்லை. அக்ரான் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற உளவியல் துறை பேராசிரியர் ரொனால்ட் லெவன்ட் விளக்குவது போல, 'நோய்களின் சர்வதேச வகைப்பாடு' மற்றும் 'உளவியல் கோளாறுகளுக்கான நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேடு' போன்ற முக்கிய மருத்துவ வகைப்பாட்டு அமைப்புகளில் இது உள்ளடக்கப்படவில்லை. மிகச் சில மருத்துவ பாடநூல்களே இதைப் பற்றிப் பேசுகின்றன.

கபோனெரோ இதுகுறித்து மேலும் விவரித்தபோது, "மருத்துவக் கல்லூரியில் பயிலும்போது இதைப் பற்றி நான் ஒரேயொரு வாக்கியம் மட்டுமே படித்ததாக நினைக்கிறேன். மருத்துவர்களாகிய எங்களுக்கான மருத்துவக் குறிப்புதவி நூல்களில்கூட, இதைப் பற்றிய விரிவான தகவல்கள் அதிகம் இல்லை," என்றார்.

இன்றைய காலகட்டத்திலும்கூட, விஞ்ஞானிகளால் இந்த நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. உளவியலாளரும், 'ஆண்களுக்கான சிறப்பு மையத்தின்' இயக்குநருமான டேனியல் சிங்லி இது தொடர்பாகப் பேசியபோது, "இந்தப் பிரச்னையின் செயல்முறை அல்லது இயங்குவிதி இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப் படவில்லை" என்றார்.

இது உணர்வுப்பூர்வமான காரணங்களுடன், அதாவது ஒரு நபர் தனது உணர்வுகளை எவ்வாறு கையாள்கிறார் என்பது போன்ற விஷயங்களுடன், தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது இது மூளை மற்றும் உடல் செயல்படும் விதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதற்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இருப்பினும், லெவன்ட் விளக்குவது போல, 'கூவாட் சிண்ட்ரோம்' என்பது "பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவு" என்பதைப் பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, உயிரியல் மற்றும் உளவியல் காரணிகளின் ஒருங்கிணைப்பாலேயே இது நிகழக்கூடும் என்று கருதப்படுகிறது.

கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வரலாற்றில் கூவாட் சிண்ட்ரோம்

'கூவாட் சிண்ட்ரோம்' என்ற சொல், 'அடைகாத்தல்' அல்லது 'குஞ்சு பொரித்தல்' எனப் பொருள்படும் பிரெஞ்சு வினைச் சொல்லான 'கூவர்' என்பதில் இருந்து வந்தது. ஆங்கில மானுடவியலாளரான எட்வர்ட் பர்னெட் டைலர், 1865இல் முதன்முதலில் இந்தச் சொல்லைப் பிரபலப்படுத்தினார். பாஸ்க் கிராமப்புறங்களில் பயணித்தபோது, ஏழை கிராமப்புற ஆண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் படுக்கையில் படுத்திருக்கும் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்ட பிறகு அவர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில், இந்தச் சொல் எதிர்மறையாகவோ அல்லது கேலி செய்யும் விதமாகவோ பயன்படுத்தப்பட்டது. தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ரிச்சர்ட் போவிஸ், இது ஆண்களைக் கேலி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று விளக்குகிறார். "ஆண்கள் பெண்களைப் போல நடந்து கொள்வது என்பதே இதன் பரந்த கருத்தாக இருந்தது" என்கிறார் அவர்.

இருப்பினும், இந்த வகையான நடத்தை உண்மையில் மிகவும் பழமையானது. இதற்கான பதிவுகள் கி.மு.50 வரையிலும்கூட காணப்படுகின்றன. கார்சிகோ, சைப்ரஸ், ஐபீரியா போன்ற பகுதிகளில், தந்தையாகப் போகும் ஆண்கள் படுக்கையில் படுத்துக் கொண்டு, பிரசவ வலியில் இருப்பது போல நடிப்பார்கள். சிலர் பிரசவத்தின்போது செய்யும் செயல்களைப் பின்பற்றுவார்கள் அல்லது தங்கள் துணையின் ஆடைகளை அணிவார்கள். பின்னர், மானுடவியலாளர்கள் மேற்கிந்திய தீவுகள், தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியப் பகுதிகள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற நடைமுறைகளைக் கண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://bbcnews.me/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

இந்த நடைமுறைகள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருந்தன. சில சமூகங்களில், இந்தச் சடங்குகள் தந்தை குழந்தையைத் தனது சொந்தக் குழந்தையாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாக இருந்ததாக டைலர் 1889இல் எழுதினார்.

"சில பழங்குடியினரிடையே, ஒரு தந்தை ஒரு குழந்தையைத் தனது குழந்தையாக அங்கீகரிக்கும் சட்டபூர்வமான வடிவம் கூவாட் ஆகும்" என்று அவர் குறிப்பிட்டார். மற்ற சந்தர்ப்பங்களில், இந்தச் செயல்கள் தீய ஆவிகளை தாயிடம் இருந்து விலக்கி, தந்தையை நோக்கித் திசைதிருப்பி, கர்ப்பிணியையும் குழந்தையையும் பாதுகாக்க உதவும் என்று மக்கள் நம்பினர்.

அந்த நாட்களில், விக்டோரியன் காலத்தைச் சேர்ந்த, பெரும்பாலும் செல்வந்தர்களாகவும் படித்தவர்களாகவும் இருந்த பல அறிஞர்கள், நித நடைமுறைகளை "அயல்நாட்டு பகுதிகளில்" உள்ள மக்களால் செய்யப்படும் விசித்திரமான பழக்கவழக்கங்களாகக் கருதியதாக போவிஸ் விளக்குகிறார். தந்தைகள் தங்கள் துணையையும் பிறக்காத குழந்தையையும் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்தச் சடங்குகளைச் செய்கிறார்கள் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் பின்னர் 20ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இருந்து பிற்பகுதி வரை, ஆய்வாளர்கள் தங்கள் சொந்த மேற்கத்திய சமூகங்களை ஆராயத் தொடங்கியபோது, கூவாட் பற்றிய புரிதல் மாறியது. இதுவொரு சடங்காகக் கருதப்படாமல், ஓர் உளவியல் நிலையாகப் பார்க்கப்படத் தொடங்கியது. அதாவது, உடல் மற்றும் மனரீதியான காரணங்களால், இணையர்கள் கர்ப்பம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் ஒரு நிலை என்று அறியத் தொடங்கினர்.

சில புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் இதை விளக்க முயன்றனர். சிக்மண்ட் ஃபிராய்டும் மானுடவியலாளர் மேரி டக்ளஸும் வெவ்வேறு உளவியல் கோட்பாடுகளை முன்மொழிந்தனர். அவற்றில் ஒன்று, ஆண்கள் தங்கள் துணையின் கவனத்தைத் தவிர்த்து, பிறரின் கவனத்தைப் பெறுவதற்காக கர்ப்பகால அறிகுறிகளை வேண்டுமென்றே வெளிப்படுத்தக் கூடும் என்ற ஒரு கருத்தும் நிலவியதாக போவிஸ் விளக்குகிறார்.

அதேபோல, இந்த அறிகுறிகள் ஆழ்மனதில் ஏற்படும் பொறாமை உணர்வுகளில் இருந்து வருவதாக மற்றொரு கருத்தும் சொல்லப்பட்டது. இதில் தந்தை பிறக்காத குழந்தையைத் தனது துணையின் கவனத்திற்கான ஒரு போட்டியாளராகக் கருதுவதாகக் கருதப்பட்டது.

கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வலுவான உளவியல் அம்சம்

இன்று, பெரும்பாலான நிபுணர்கள் கூவாட் சிண்ட்ரோமுக்கு ஒரு வலுவான உளவியல் அம்சம் இருப்பதாக நம்புகிறார்கள். குழந்தையை உடல்ரீதியாக அவர்கள் சுமக்காவிட்டாலும், பெற்றோராகப் போகும் தருணத்தில் கர்ப்பிணியின் இணையரும் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிக்கு ஆளாவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

லாப நோக்கமற்ற அமைப்பான 'லவ், டாட்' நிறுவனத்தின் நிறுவனர் கெவின் க்ரூன்பெர்க் இதைத் தெளிவாக விளக்குகிறார். "ஒரு குழந்தையைப் பெறுவது என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். அது சில நேரங்களில் மிகவும் மன அழுத்தமாகவும், சமாளிக்க முடியாததாகவும் உணரப்படலாம். எனவே நிகழும் இந்தப் பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வழியாக கூவாட் இருக்கும்."

குழந்தை பிறந்த பிறகு, பெற்றோர் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்குப் போதுமான தூக்கம் கிடைக்காமல் போகலாம், புதிதாகப் பிறந்த குழந்தையைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். தம்பதியருக்கு இடையிலான உடல் ரீதியான நெருக்கம் மற்றும் குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்தல் போன்ற பிற மாற்றங்களும் இதில் உள்ளன என்று டேனியல் சிங்லி விளக்குகிறார்.

இந்தக் காலகட்டத்தில் உளவியல் பிரச்னைகள் பொதுவானவை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. புதிதாகத் தந்தை ஆனவர்களில் சுமார் பத்தில் ஒருவருக்கு, குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த பிறகோ மனச்சோர்வு ஏற்படுகிறது. 18% வரையிலான ஆண்கள் இந்தக் காலகட்டத்தில் தாங்கள் மிகவும் பதற்றமாக உணர்வதாகக் கூறுகின்றனர். சுமார் 7% பேர் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறின் (PTSD) அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு தாய்க்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருந்தால், அவரது துணைவருக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்தது இரண்டு மடங்கு அதிகம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த உணர்ச்சி மாற்றங்களில் சில, சிக்மண்ட் ஃபிராய்டு பரிந்துரைத்த கருத்துகளைப் போலவே இருக்கலாம். "புதிதாகப் பிறந்த குழந்தையின் மீது பொறாமைப்படுவது, தாங்கள் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வருந்துவது, தங்கள் துணைவரைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருப்பது போன்ற தங்கள் அனுபவத்தின் கூறுகளைப் பற்றிப் பேச வரும் பல தந்தையர்களை நான் பார்க்கிறேன்," என்று கூறுகிறார் சிங்லி.

கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆழ்ந்த உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடு

கர்ப்பிணியிடம் ஆழ்ந்த உணர்ச்சிப்பூர்வமான புரிதலை வெளிப்படுத்தும் ஓர் இயற்கையான, ஆழ்மன வழியாக துணைவர்கள் தாங்களே உணராமல்கூட கூவாட் சிண்ட்ரோமின் அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் நம்புகிறார்கள்.

இது "கர்ப்பிணித் துணைவருடன் ஏற்படும் ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு மற்றும் தன்னை அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை" பிரதிபலிப்பதாக ரொனால்ட் லெவன்ட் விளக்குகிறார்.

இந்தப் பிணைப்பு உணர்வு அறிகுறிகளில் மட்டுமல்ல, செயல்களிலும் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு கர்ப்பிணிக்கு திடீரென இறைச்சியின் காட்சியோ அல்லது வாசனையோ பிடிக்கவில்லை என்றால், அவரது இணையரும் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த முடிவு செய்யக்கூடும். கர்ப்பிணி தனது உடலியக்கத்தை குறைத்துக்கொண்டு, அதிக நேரம் ஓய்வெடுத்தால், இணையரும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டு, அவருக்குத் துணையாக அமரக்கூடும்.

இதை கூவாட்டின் பழைய கலாசார நடைமுறைகளுடன் ஒப்பிடுகிறார் ரிச்சர்ட் போவிஸ். "கர்ப்பிணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, கர்ப்ப காலத்திலோ அல்லது பிரசவத்திற்குப் பிரகோ ஒருவர் செய்யும் செயல்தான் கூவாட் என்பது எனது வரையறை," என்று அவர் கூறுகிறார்.

மேலும் அவர், "நாம் இதை ஒரு நோயாகக் கருதுகிறோம். ஆனால் இதில் எந்தத் தவறும் இல்லை. இது மனிதனின் பரிவுணர்வு மட்டுமே," என்ற முக்கியமான கருத்தையும் அவர் தெரிவித்தார்.

"இறுதியில் ஒருவரையொருவர் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள், அவ்வாறு செய்யும்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கூவாட் சிண்ட்ரோமுக்கு உணர்ச்சிப்பூர்வமான காரணங்கள் மட்டுமின்றி, உயிரியல் காரணமும் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதாவது, ஹார்மோன்கள் போன்ற உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் இதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம், பின்னர் அவை ஒரு நபர் எப்படி உணர்கிறார், நடந்து கொள்கிறார் என்பதைப் பாதிக்கலாம்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபின் எடெல்ஸ்டீன் இதை விரிவாக ஆய்வு செய்தார். கர்ப்ப காலத்தில், முதல் முறையாகக் கருவுற்றிருக்கும் தம்பதியரிடம் (தன்பாலின தம்பதிகள் உள்பட) ஹார்மோன் அளவுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அவர் ஆராய்ந்தார்.

அவரது ஆய்வில், கர்ப்பிணிகளிடம் கார்டிசோல், புரோஜெஸ்டிரோன், ஈஸ்ட்ராடியோல், டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் பெருமளவில் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் ஆண்களிடம், டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ராடியோல் ஆகியவற்றில் தெளிவான குறைவு காணப்பட்டது. இது ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எடெல்ஸ்டீன் கூறுகிறார்.

"டெஸ்டோஸ்டிரோன் குறைவது, ஆண்களை புதிய துணையைத் தேடுவதற்கோ அல்லது ஆக்ரோஷமாக இருப்பதற்கோ பதிலாக, குழந்தையைப் பராமரிப்பதிலும் குடும்பத்தில் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்தத் தூண்டும் என்று கோட்பாட்டு ரீதியாகக் கூறப்படுகிறது. குறைந்த அளவிலான ஈஸ்ட்ராடியோல், குழந்தையைப் பராமரிப்பதை எளிதாக்கக்கூடும்," என்று அவர் விளக்குகிறார்.

இந்த ஆய்வில், குழந்தை பிறந்த பிறகு தந்தையரும் கண்காணிக்கப்பட்டனர். மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு பரிசோதித்த போது, கர்ப்ப காலத்தில் இந்த ஹார்மோன்களில் அதிக சரிவைக் கண்ட தந்தையர்கள், அதிக வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தையைச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டனர். அவர்களது துணைவர்களும் இதை உறுதிப்படுத்தினர். "ஹார்மோன் மாற்றங்கள் முதலில் ஏற்படுவதாகத் தெரிகிறது. இது பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பில் அதிக முதலீட்டைக் கணிக்கிறது," என்று எடெல்ஸ்டீன் கூறுகிறார்.

பிரச்னைகளைப் பேசுவோம்
படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்

இந்த ஹார்மோன் மாற்றங்கள் கூவாட் சிண்ட்ரோமின் சில அறிகுறிகளையும் விளக்கக்கூடும். உதாரணமாக, குறைந்த டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ராடியோல் அளவுகள் ஆண்களின் எடை அதிகரிப்புடன் தொடர்புடையவை. குறைந்த ஈஸ்ட்ராடியோல் மனச்சோர்வுடனும் தொடர்புடையது. இருப்பினும், இந்த ஹார்மோன் மாற்றங்களுக்கு முதலில் என்ன காரணம் என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை.

பெற்றோரான பிறகு மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. 2024ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், தாய்மார்களைப் போலவே, குழந்தை பிறந்த பிறகு தந்தையர்களின் மூளையில் உள்ள சாம்பல் நிறப் பொருளின் அளவு குறைவதாகக் கண்டறியப்பட்டது.

இந்தச் செயல்முறை, குழந்தையைப் புரிந்துகொள்வது, பிணைப்பை ஏற்படுத்துவது, பராமரிப்பு தொடர்பான பகுதிகளில் மூளையை மிகவும் திறமையானதாக மாற்ற உதவுகிறது. மூளையில் பெரிய மாற்றங்களைக் காட்டிய தந்தையர்கள், தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டதுடன், அவர்களுடன் உணர்வுபூர்வமாக அதிகப் பிணைப்பையும் உணர்ந்தனர்.

இந்தக் காரணிகளின் விளைவாக, கூவாட் என்பது கர்ப்பிணியான துணையின் அறிகுறிகளை அப்படியே நகலெடுப்பது மட்டுமல்ல என்று டேனியல் சிங்லி கூறுகிறார். "பெற்றோராகும் அனுபவத்தை அணுகும் விதத்தில் இது மிகவும் பழமையானதொரு கண்ணோட்டம்" என்று குறிப்பிடுகிறார் அவர்.

கர்ப்பிணியின் துணையும் ஒரு பெற்றோராக மாறவிருப்பதால், அவர்களும் உளவியல், சமூக, நரம்பியல், ஹார்மோன் சார்ந்த மற்றும் உறவுமுறை சார்ந்த எனப் பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.

இருப்பினும், பல ஆண்களுக்கு சமூக எதிர்பார்ப்புகளின் காரணமாக, இத்தகைய உணர்வுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக அமையலாம். சில ஆண்கள், "நான் ஓர் ஆண்மகன், எனக்கு மனச்சோர்வு ஏற்படக் கூடாது. அது பலவீனத்தின் அடையாளம். நான் ஒரு தந்தை, எனவே நான் எப்போதும் உறுதியுடனும், என் குடும்பத்திற்குப் பொறுப்புடன் வாழ்வாதாரம் அளிப்பவனாகவும் இருக்க வேண்டும்," என்று சிந்திப்பதாக சிங்லி விவரிக்கிறார்.

இந்த மனப்பான்மை மாற வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார். அதற்கு மாறாக, "எனக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம், தசை இறுக்கம் ஏற்படலாம், செரிமானம் சார்ந்த வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். என் மீது ஏதோவொரு பெரும் சுமை அழுத்துவது போன்ற உணர்வு எனக்கு ஏற்படலாம்" என்று ஆண்கள் வெளிப்படையாகக் கூறுவதற்குத் தயக்கம் காட்டக்கூடாது என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு