You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தனது ஆயுதங்களை இரான் எவ்வளவு தூரம் நம்பியிருக்க முடியும்?
பிபிசி அரபு சேவை கணக்கீட்டின்படி, கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான 12 நாள் போரின் போது இருந்ததை விட, தற்போது நடந்து வரும் போரில் இரான் வளைகுடா பிராந்தியத்தை நோக்கி அதிக ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான முந்தைய போருடன் ஒப்பிடும்போது இந்த முறை என்ன வித்தியாசம் இரானிடம் தென்படுகிறது? தனது ஆயுதங்களை இரான் எவ்வளவு தூரம் நம்பியிருக்க முடியும்?
இரானின் பாதுகாப்புத் திறன்களில் பாலிஸ்டிக், குரூஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. டிரோன்களும் இரான் வசம் உள்ளன. ஆனால் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களில் தனது உத்தியை இரான் மாற்றி உள்ளதாக தெரிகிறது.
இரான் வசம் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உள்ளன. Foundation for Defense of Democracies கூற்றுப்படி, இரானின் குறுகிய தூர ஏவுகணைகள் 300 முதல் 1,000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியவை. வளைகுடா நாடுகள் உட்பட பல அண்டை நாடுகள் இந்த வரம்புக்குள் உள்ளன.
நடுத்தர தூர ஏவுகணைகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை செல்லக்கூடியவை மற்றும் இஸ்ரேலை அடையக்கூடியவை.
இரானின் மிக முக்கியமான ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தான். Foundation for Defense of Democracies கூற்றுப்படி, இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை சேதத்தை ஏற்படுத்துவதற்கான மிக சக்திவாய்ந்த ஆயுதமாகவும், தனது விமானப்படைக்கு மாற்றாகவும் கருதுகிறது.
தடைகள் காரணமாக இரான் ஆயுத சந்தைகளை அணுக முடியவில்லை என்பதால் அதன் விமானப்படை வலிமையாக இல்லை.
சரி, இரானின் உத்தி எப்படி மாறி இருக்கிறது என பார்ப்போம்.
இரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி ஏவுகணைகளை ஏவி வருகிறது. முந்தைய போருடன் ஒப்பிடும் போது இது முரணானது. முன்னதாக, இரான் வளைகுடாவில் உள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தை மட்டுமே தாக்கியது.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம், போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 4 வரை இரான் இஸ்ரேல் மீது 128 ஏவுகணைகளை ஏவியதாக மதிப்பிட்டுள்ளது.
மறுபுறம் வளைகுடா நாடுகள் மீதும் அதிக ஏவுகணைகளை இரான் ஏவி உள்ளது. வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்கள் என இரான் குறிப்பிடும் இலக்குகள் மீதான தாக்குதல்களை இரான் அதிகப்படுத்தி உள்ளது. ஆனால், பொதுமக்கள் இடங்களும் குறிவைக்கப்பட்டிருப்பதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன.
வளைகுடா நாடுகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இரானை தாக்க அவர்கள் மண் பயன்படுத்தப்படாவிட்டால், இரானும் அவர்களைத் தாக்காது என உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகங்களின் தரவுகளின் அடிப்படையில், நான்கு நாட்களில் இரான் வளைகுடா நாடுகள் மீது 551 ஏவுகணைகளை ஏவியதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2025-ல் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேல் மீது ஏவியதைவிட அதிகமாகும். அப்போது சுமார் 500 ஏவுகணைகளை இரான் ஏவியது. வளைகுடா நாடுகள் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளன. ஆனால், இரானுக்கு எதிராக இந்த நாடுகள் இதுவரை எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கைகள், ராஜீய அழுத்தங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
ஆனால், இரானின் உத்தி இப்படி மாற காரணம் என்ன?
அமெரிக்க கொள்கை ஆராய்ச்சி மையமான American Enterprise Institute-ன் Critical Threats Project-ஐ சேர்ந்த நிக்கோலஸ் கார்லின் கூற்றுப்படி, வளைகுடா நாடுகளை குறிவைக்கும் முடிவு, முந்தைய மோதல்களில் பயன்படுத்த முடியாத ஆயுதங்களை பயன்படுத்த இரானுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான் இஸ்ரேலை அடையக்கூடிய ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது. தற்போது அதனால் குறுகிய தூர ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும். அதாவது கடந்த ஆண்டு பயனற்றதாக இருந்த அனைத்து தளங்களும் இப்போது இரானுக்கு பயனுள்ளதாக உள்ளன" என்கிறார் அவர்.
மறுபுறம் இரானின் டிரோன் பயன்பாடும் அதிகமாக உள்ளது.
பிபிசி பகுப்பாய்வின்படி, வளைகுடா மீதான இரானின் தாக்குதல்களில் ஏவுகணைகளை விட ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 4 ஆம் தேதி பிற்பகலுக்குள், வளைகுடா நாடுகள் மீது 1,493 ட்ரோன்கள் மற்றும் 551 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த எண்ணிக்கை 12 நாள் போரின் போது இஸ்ரேல் மீது இரான் ஏவிய 1,100 ட்ரோன்களை விட அதிகமாக உள்ளது.
கார்லின் கூற்றுப்படி, வளைகுடா நாடுகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பின்வாங்குமாறு அழுத்தம் கொடுக்க வைப்பதே இரானின் உத்தியாக இருக்கலாம்.
அதே நேரம், மோதலின் முதல் நாளோடு ஒப்பிடும் போது இரானின் டிரோன் தாக்குதல்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஒருவேளை, ஆயுத உற்பத்தியை தொடர்ந்து நிலையாக வைத்திருப்பது கடினமாகி வருவதால் கைவசம் உள்ள இருப்பை பாதுகாக்க இரான் முயற்சிக்கலாம்.
இரானின் கையிருப்பு ஒரு கட்டத்தில் ஆபத்தான அளவிற்குக் குறையத் தொடங்கும். ஆனால் அது எப்போது நடக்கும் என்று சொல்வது கடினம் என்கிறார் கார்ல்.
அவரது கருத்துப்படி, இரான் அதன் தற்போதைய உத்தியைத் தொடரும், அதாவது, பிராந்தியத்தில் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும்.
தங்கள் ஏவுகணைகள் பலவற்றை பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்கும் என்பது இரானுக்கு தெரியும். ஆனால் அவர்கள் தங்கள் எதிரிகளின் இடைமறிப்பு ஏவுகணை இருப்புக்களை குறைக்க விரும்புகிறார்கள் என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு