You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மதம் மாறுவதை 60 நாள் முன்பே தெரிவிப்பது கட்டாயம்' - மகாராஷ்டிர மத சுதந்திர மசோதாவால் என்ன சர்ச்சை
- எழுதியவர், தீபாலி ஜக்தாப்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
மாநில அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 'மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் 2026' மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விவாதத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இந்த மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தச் சட்டத்துக்காக, மதமாற்றம் தொடர்பான சட்ட சிக்கல்களை ஆய்வு செய்ய காவல்துறை தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது.
மாநிலத்தில் உள்ள பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பிறகு, இக்குழு மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டத்தைப் பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதா தற்போது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள பிரிவுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இதுவரை, ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.
மத சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு சட்டவிரோதமாக மாறுவதைத் தடுப்பதற்கும், அது தொடர்பான அல்லது அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்கு வழிவகை செய்வதற்குமான சட்டம் இதுவென்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) எம்.எல்.ஏ ஜிதேந்திர அவ்ஹாத் ஊடகங்களிடம் பேசுகையில், "கட்டாயப்படுத்துதல் இருந்தால், அதை நிச்சயமாகத் தடுத்து நிறுத்துங்கள். ஆனால், அரசாங்கம் இதை ஏதேனும் ஒரு கொள்கை அல்லது சித்தாந்தத்தின் மூலம் செய்கிறது என்றால், அது தவறானது. இந்தியாவில் பன்முகத்தன்மை நிலைத்திருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு சுதந்திரம் இருப்பதுதான்" என்றார்.
மேலும் , "பொது பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் தலைப்பு தவறாக இருந்தது. அது குறிப்பிட்ட நக்ஸலிசத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மசோதா இப்போதுதான் வந்துள்ளது. இது குறித்து விவாதம் நடக்கும். அந்த நேரத்தில் நாங்கள் பேசுவோம்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
மசோதாவில் என்ன கூறப்பட்டுள்ளது?
சட்டவிரோத மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், 'எந்தவொரு நபரும் தனிப்பட்ட முறையிலோ அல்லது வேறு ஏதேனும் நபர் அல்லது அமைப்புடன் கூட்டு சேர்ந்தோ, எந்தவொரு நபரையும் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றக்கூடாது.
ஒருவரிடம் தொடர்ந்து பேசி அவரை மதம் மாற்றுவது, வற்புறுத்தல், மோசடி, கட்டாயப்படுத்துதல், தவறான சித்தரிப்பு, மிரட்டல், தேவையற்ற செல்வாக்கு அல்லது ஏதேனும் மோசடியான வழிகள், சட்டப்பூர்வத் திருமணம் அல்லது திருமணத்தைப் போன்ற ஒரு உறவில் ஈடுபடுதல் அல்லது திருமண வாக்குறுதி அளித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதமாற்றம் செய்யக்கூடாது.
மேலும் ஒருவரை ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதோ, அதற்கு உதவுவதோ, தூண்டுவதோ அல்லது சதி செய்வதோ கூடாது.'
இதனை மீறி செய்யப்படும் எந்தவொரு மதமாற்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், விதிகளை மீறி செய்யப்படும் அத்தகைய மதமாற்றம் செல்லாததாகக் கருதப்படும்.
சட்டவிரோத மதமாற்றத்திற்காக மட்டுமே நடத்தப்படும் எந்தவொரு திருமணமும், திருமணத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரில் யாரேனும் ஒருவரால் மற்றொருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படும் மனுவின் அடிப்படையில், நீதிமன்றத்தால் செல்லாதது என அறிவிக்கப்படும்.
சட்டவிரோத மதமாற்றத்தின் விளைவாக பிறக்கும் ஒரு திருமணம் அல்லது திருமண உறவின் மூலம் பிறக்கும் குழந்தை, அத்தகைய திருமணம் அல்லது திருமண உறவுக்கு முன்னதாக தாய் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்.
அக்குழந்தைக்கு தனது தாய் மற்றும் தந்தையின் சொத்துக்களை, அவர்களுக்குப் பொருந்தக்கூடிய நடைமுறையில் உள்ள வாரிசுரிமைச் சட்டங்களின்படி வாரிசாகப் பெறுவதற்கு உரிமை கிடைக்கும்.
மேலும், சட்ட விதிகளின்படி பராமரிப்புச் செலவுகளைப் பெறவும் அக்குழந்தைக்கு உரிமை உண்டு.
நீதிமன்றம் வேறுவிதமாகத் தீர்மானிக்கும் வரை, அக்குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பொறுப்பு தாயிடமே இருக்கும்.
மசோதாவின் படி சட்டப்பூர்வ மாற்றத்திற்கான செயல்முறை என்ன?
ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற விரும்பும் எந்தவொரு நபரும், மற்றும் அத்தகைய மதமாற்றச் சடங்கை நடத்த விரும்பும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும், தாங்கள் முன்மொழியும் மதமாற்றத்திற்கு 60 நாட்களுக்கு முன்னதாகவே அது குறித்துச் சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும்.
அத்தகைய அறிவிப்பைப் பெற்றவுடன், தகுதிவாய்ந்த அதிகாரி, முன்மொழியப்பட்ட மதமாற்றத்திற்கு எதிரான ஆட்சேபனைகளை அழைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும்.
அந்த அறிவிப்பு வெளியான முப்பது நாட்களுக்குள், அந்த அதிகாரியின் அலுவலக அறிவிப்புப் பலகையிலும், அந்த நபர் அல்லது நபர்கள் வசிக்கும் கிராம பஞ்சாயத்து அல்லது உள்ளூர் அதிகார அமைப்பின் அலுவலகத்திலும் அது ஒட்டப்பட வேண்டும்.
ஏதேனும் ஆட்சேபனை பெறப்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ, முன்மொழியப்பட்ட மதமாற்றத்தின் நோக்கம், குறிக்கோள் அல்லது காரணம் குறித்துத் தகுதிவாய்ந்த அதிகாரி காவல்துறை மூலம் விசாரணை நடத்தலாம்.
விசாரணைக்குப் பிறகு, அத்தகைய மதமாற்றம் இந்தச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகத் தகுதிவாய்ந்த அதிகாரிக்குத் தெரிய வந்தால், இந்தச் சட்டத்தின் விதிகளை மீறியதற்காகக் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடுவார்.
உறுதிமொழியைப் பின்பற்றுவது கட்டாயம்
மதமாற்றம் செய்துகொண்ட நபர் மற்றும் அந்த மதமாற்றத்தை ஏற்பாடு செய்த நபர் அல்லது அமைப்பு, அந்த மதமாற்றம் நடைபெற்ற தேதியிலிருந்து இருபத்தியோரு நாட்களுக்குள், பரிந்துரைக்கப்பட்ட முறையில் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த அறிவிப்பில், மதமாற்றம் செய்துகொண்டவரின் பெயர், வயது, நிரந்தர முகவரி, தற்போதைய வசிப்பிடம், தாயின் பெயர், தந்தையின் பெயர், கணவர் அல்லது மனைவியின் பெயர், அவர் முதலில் சார்ந்திருந்த மதம் மற்றும் தற்போது மாறியுள்ள மதம், மதமாற்றம் நடந்த தேதி மற்றும் இடம், மதமாற்றத்திற்காகப் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தன்மை போன்ற விபரங்கள் இடம்பெற வேண்டும்.
அத்தகைய நபர் அல்லது நிறுவனம் சமர்ப்பித்த அந்த அறிவிப்பு குறித்த தகவலைத் தகுதிவாய்ந்த அதிகாரி பதிவு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் அல்லது அமைப்பு மதமாற்றம் குறித்த இந்த அறிவிப்பைச் சமர்ப்பிக்கத் தவறினால், அந்த மதமாற்றம் செல்லாததாகக் கருதப்படும்.
குற்றமும் தண்டனையும்
ஒவ்வொரு குற்றமும் கைது செய்யக்கூடியதாகவும், பிணையில் வெளிவர முடியாததாகவும் இருக்கும்.
மதமாற்றம் செய்யப்பட்ட நபர், அவரது பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரி அல்லது ரத்தம், திருமணம் அல்லது தத்தெடுப்பு மூலம் அந்த நபருடன் தொடர்புடைய வேறு எவரேனும் இத்தகைய சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாம்.
சம்பந்தப்பட்ட நபரின் புகாரைப் பதிவு செய்வது காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கட்டாயப் பொறுப்பாகும்.
இந்தச் சட்டத்தின் விதிகளை மீறி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது அல்லது செய்யப்படுகிறது என்று காவல் அதிகாரி உறுதியாக நம்பினால், அவர் தனது சொந்த அதிகாரத்தின் கீழ் அந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்.
இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மைனர், மனநலம் குன்றியவர், பெண் அல்லது பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கூட்டு மதமாற்றம் செய்யும் பட்சத்தில், யாரவது விதிகளை மீறினால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
குற்றத்தைத் திரும்பச் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் அல்லது அமைப்பிற்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஏதேனும் அமைப்பு அல்லது நிறுவனம் இந்தச் சட்டத்தின் விதிகளை மீறினால், எந்தவொரு சட்டத்தின் கீழும் அந்த அமைப்பு அல்லது நிறுவனம் பெற்றுள்ள பதிவு ரத்து செய்யப்படும்.
சம்பந்தப்பட்ட அமைப்பை நிர்வகிக்கும் நபர் அல்லது நபர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அத்தகைய நிறுவனம் அல்லது அமைப்பிற்கு அரசாங்கம் எந்தவிதமான நிதி உதவியோ அல்லது மானியமோ வழங்காது.
யார் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள்?
குற்றமாக கருதப்படும் செயலைச் செய்யும் நபர்
குற்றம் சார்ந்த செயலைச் செய்த ஒவ்வொரு நபரும், ஒரு குற்றத்தைச் செய்ய உதவுவதற்காக அல்லது மற்றொருவருக்கு உதவுவதற்காக எந்தச் செயலைச் செய்கிறாரோ அல்லது செய்ய வேண்டியதைச் செய்யாமல் தவிர்க்கிறாரோ, அத்தகைய ஒவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள்.
மற்றொருவர் குற்றத்தைச் செய்ய உதவும் நபர்
குற்றத்தைச் செய்ய அறிவுரை கூறுபவர், வற்புறுத்துபவர் அல்லது தூண்டும் எவரும் இதற்குப் பொறுப்பாவார்கள்.
சட்டவிரோத மதமாற்றத்தை ஆவணப்படுத்தும் நபரும் இதில் அடங்குவார்.
இந்தச் சட்டத்தின் விதிகளை மீறி மதமாற்றம் செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, மதம் மாறிய நபர் மற்றும் அந்த மதமாற்றத்திற்கு உதவிய அல்லது துணை நின்றவர்களையே சாரும்.
சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய எந்தவொரு குற்றமும், காவல் உதவி ஆய்வாளர் நிலைக்கு குறையாத அதிகாரியால் புலனாய்வு செய்யப்பட வேண்டும்.
இந்தச் சட்டத்தின் கீழான அனைத்துக் குற்றங்களும் அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும்.
இதற்கிடையில், மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிப்புச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பாதிக்கப்பட்ட அத்தகைய நபர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டபடி மறுவாழ்வு உதவிகளை அரசாங்கம் வழங்கும்.
அரசாங்கத்தின் பங்கு என்ன?
மத சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
அரசியலமைப்பின் 25-வது பிரிவு மதத்தைப் பரப்புவதற்கான உரிமையை வழங்கினாலும், அது யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் உரிமையை உள்ளடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.
மதமாற்றங்களை ஒழுங்குமுறைப்படுத்த மகாராஷ்டிராவில் தனிச் சட்டம் எதுவும் இல்லை.
இருப்பினும், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் கட்டாய அல்லது சட்டவிரோத மதமாற்றங்களைத் தடுக்க மத சுதந்திரம் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன.
இதன் காரணமாக, இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மகாராஷ்டிரா அரசு நியமித்திருந்தது.
அந்தக் குழு பிற மாநிலங்களின் சட்டங்களை ஆய்வு செய்து, மகாராஷ்டிராவிலும் 'மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டத்தை' இயற்றப் பரிந்துரைத்துள்ளது.
இந்த மசோதா குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதற்குப் பதிலளித்த அரசியலமைப்பு ஆய்வாளரும் வழக்கறிஞருமான அசிம் சரோட் கூறுகையில், "இந்தச் சட்டம் அரசியலமைப்பின் 25-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தில் தலையிடுகிறது. மதமாற்றம் செய்ய விரும்புபவர்கள் 60 நாட்களுக்கு முன்னதாக பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதி சட்டப்பூர்வமானது அல்ல, அது நிலைக்காது.
மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தின் மூலம், மதமாற்றம் செய்ய விரும்பும் குடிமக்களைக் கண்காணிக்கும் உரிமையை அரசாங்கம் தனக்கென உருவாக்க முயற்சித்துள்ளது. இது மதமாற்றம் செய்ய விரும்பும் நபரின் தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மதமாற்றத்திற்கான 'ஈர்ப்பு' , 'கட்டாயம்' , 'தவறான செல்வாக்கு' , 'ஏமாற்று வழிகள்' போன்ற தெளிவற்ற விளக்கங்கள், மதவெறியர்கள் மற்றும் அரசியல்-மத தீவிரவாதிகள் இதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
சமூகத்தில் மதப் பிரிவினையை உருவாக்க அரசாங்கம் ஒரு சட்டக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று சொல்லலாம்.
யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று அரசியலமைப்பு வழங்கிய விருப்ப சுதந்திரத்தை இந்தச் சட்டம் மீறுகிறது.
மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவரே தான் எந்தச் சட்டவிரோதச் செயலையும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறும் இந்தச் சட்டம் விசித்திரமானது," என்றார்.
இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சோதனையில் நிலைத்து நிற்குமா என்பது குறித்து வழக்கறிஞர் சரோட் கூறுகையில், "தண்டனையின் தன்மை நடைமுறைக்கு மாறாக உள்ளது. வெவ்வேறு மதத்தினரை திருமணம் செய்துகொள்பவர்களைத் தவிர மற்றவர்களும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிப்பதும், தகுதிவாய்ந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு 'நீதிபதிகளின்' அதிகாரங்களை வழங்குவதும் நியாயமற்றது மற்றும் ஆட்சேபனைக்குரியது.
இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சோதனையில் வெற்றி பெறுவது கடினம். அரசியல் கட்சிகள் சமூக அமைதியின்மை மற்றும் வன்முறையை ஏற்படுத்த இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு, இது ஒரு உரிமத்தை வழங்குவது வருத்தமளிக்கிறது," என்றார்.
முஸ்லிம் சத்யஷோதக் மண்டலத்தின் தலைவர் ஷம்சுதீன் தம்போலி பிபிசி மராத்தியிடம் கூறுகையில், "இது இந்து வாக்கு வங்கியை மனதில் வைத்து செய்யப்படுகிறது. தற்போதுள்ள சட்டத்தின்படி கூட, தூண்டப்பட்டோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் அதற்கு எதிராகச் சட்டம் உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய சட்டத்தை இயற்றிய மாநிலங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ அமைப்புகளும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருந்தபோதிலும், மகாராஷ்டிரா அரசு இந்த மசோதாவைக் கொண்டு வருகிறது. பாஜக தலைவர்கள் 'லவ் ஜிகாத்தை' ஒரு காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அப்படி ஒன்று இருக்கிறதா?
அதன் வரையறை என்ன?
இந்த மசோதா இந்துத்துவா அரசியலின் ஒரு பகுதி" என்றார்.
"அரசியலமைப்பில் உள்ள மத சுதந்திரம், சம உரிமை மற்றும் சம நீதி, கருத்து சுதந்திரம் அல்லது துணைவரைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவை மீறப்படுகின்றன. நாங்கள் எந்த ஒரு மதமாற்றத்திற்கும் எதிரானவர்கள்.
ஆனால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட விதம் இந்துத்துவா அரசியலால் தான். இது இஸ்லாமிய சமூகத்திற்கு ஒரு பிரச்னையாகும்.
ஏனெனில் ஒரு உறவினரோ அல்லது யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கப்பட்ட நபர் தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியிருக்கும். சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் மதமாற்றம் தேவையில்லை. மதமாற்றம் இல்லாமலேயே திருமணங்களைச் செய்ய முடியும். ஆனால் மோசடி நடந்ததாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
வல்லபாய் படேலும் மகாத்மா காந்தியும் வெவ்வேறு மதத் திருமணங்களை ஆதரித்தனர். ஆனால் நாம் அதற்கு எதிர் திசையில் செல்கிறோம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு