You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பலம்' காட்டிய நெதர்லாந்து - இந்தியாவை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்ற இருவர் யார்?
டி20 உலகக் கோப்பையின் 36வது போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.
இந்தியாவுக்காக சிவம் துபே அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார், அதில் ஆறு சிக்ஸர்கள் அடங்கும். அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி மூன்று ஓவர்களில் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி இந்த வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணி ஆட்டம் எப்படி?
நெதர்லாந்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. குல்தீப் யாதவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பிடித்தார், அதே சமயம் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவின் தொடக்கம் மீண்டும் மோசமாக இருந்தது. இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டை ஆர்யன் தத் கைப்பற்றினார்.
இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா விளையாடும் மூன்றாவது போட்டி இதுவாகும். மூன்று போட்டிகளிலும் அவர் பூஜ்ஜிய ரன்களுக்கே ஆட்டமிழந்துள்ளார்.
இதன்பின்னர் திலக் வர்மாவுடன் இணைந்து இஷான் கிஷன் இரண்டாவது விக்கெட்டிற்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ஆனால் ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆர்யன் தத் அவரை போல்ட் செய்தார். இஷான் கிஷன் 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.
இரண்டு விக்கெட்டுகள் விரைவாக விழுந்ததால், பவர் பிளேயில் இந்தியா 51 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவர் பிளே முடிந்த பிறகும் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவுக்கு எதிராக நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
வேகமாக ரன் எடுக்கப் போராடிய திலக் வர்மா, 9-வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
ஆர்யன் தத் தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவர் நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் வேகத்தை மாற்றிய ஷிவம் துபே
13-வது ஓவரில் ஷிவம் துபே தனது ஆட்டத்தின் வேகத்தை மாற்றினார். இந்தியா இந்த ஓவரில் 19 ரன்கள் எடுத்தது, மேலும் இதே ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது.
ஆனால் மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெரிய ஷாட் அடிக்க முயன்று 14-வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும், ஷிவம் துபே ஒரு முனையில் உறுதியாக நின்று ரன்களை வேகமாக எடுக்கத் தொடங்கினார். ஐந்து சிக்ஸர்களின் உதவியுடன் ஷிவம் துபே வெறும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
ஹர்திக் பாண்ட்யாவும் ஷிவம் துபேவுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவருக்கும் இடையே ஐந்தாவது விக்கெட்டிற்கு 35 பந்துகளில் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது.
கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஷிவம் துபே ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார், அவரது இன்னிங்ஸில் ஆறு சிக்ஸர்கள் இருந்தன.
அதே சமயம் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சு
அடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து அணி மெதுவாகத் தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஆரம்ப ஓவர்களில் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க முயன்றனர்.
நான்கு ஓவர்கள் முடிவில், நெதர்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆறாவது ஓவரில், வருண் சக்ரவர்த்தி மேக்ஸ் ஓ'டவுடை வீழ்த்தினார். மேக்ஸ் ஓ'டவுட் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
நெதர்லாந்து அணி 7.3 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. விரைவாக ரன் எடுக்க வேண்டிய அழுத்தத்தில், எட்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் லிவெட் ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் எடுத்தார்.
10 ஓவர்களுக்குப் பிறகு, நெதர்லாந்து விரைவாக ரன் அடிக்க முயன்றது. ஆனால் 13வது ஓவரின் முதல் பந்திலேயே வருண் சக்ரவர்த்தி அக்கர்மனை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் வருண் சக்ரவர்த்தி ஆர்யன் தத்தையும் வீழ்த்தினார்.
இதன் பிறகு, 16வது ஓவரின் ஐந்தாவது பந்தில், பும்ரா எட்வர்ட்ஸை பெவிலியனுக்கு அனுப்பினார்.
கடைசி ஓவரில் ஷிவம் துபே மற்றொரு விக்கெட்டை வீழ்த்த நெதர்லாந்தை 20 ஓவர்களில் 176 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தியது.
இந்தியாவுக்கு எதிராக தனது பலத்தை காட்டி கடைசி ஓவர் வரை போராடி நெதர்லாந்து அணி தோற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு