You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா ஸ்டோரி 2 பார்த்த பிறகு இவர்கள் எடுத்த உறுதிமொழியால் ஏன் விவாதம்?
- எழுதியவர், அல்பேஷ் கார்க்கரே
- பதவி, பிபிசி மராத்தி
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மகாராஷ்டிராவின் நலசோபராவில் உள்ள ஒரு திரையரங்கில் சகல் இந்து சமாஜ் மற்றும் இந்து ஜாக்ரன் மஞ்ச் ஆகியவற்றின் சார்பில், மார்ச் 5-ஆம் தேதி 'தி கேரளா ஸ்டோரி-2' திரைப்படக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தத் திரைப்படக் காட்சிக்குப் பிறகு, 'இந்துக்கள் அல்லாத மற்றவர்களுடன் எந்தவிதமான வணிகத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும், மாற்று மதத்தினருடன் நட்பு கொள்ள மாட்டோம்' என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
"காய்கறிகள் வாங்க வேண்டுமானால் இந்துக்களிடமே வாங்குங்கள், தலைமுடி வெட்ட வேண்டுமானால் கூட இந்துக்களிடமே வெட்டிக்கொள்ளுங்கள்," என அங்கு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய நிர்வாகிகள், ஒரு குறிப்பிட்ட சமூகம் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது எனக் கூறினர்.
''மத மாற்றம் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராக, மாற்று மதத்தினருடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டோம்,'' என அங்கிருந்த பார்வையாளர்கள் உறுதி ஏற்றனர்.
இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டி வருகிறது.
திரைப்படத்திற்கு வந்த பெண்கள் கூறியது என்ன?
படம் பார்க்க வந்த பெண்களின் கருத்துக்கள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் அவர்கள், "வீட்டில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நமது மதச் சடங்குகளின்படி நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிற மதத்தினருடன் அவர்கள் நட்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது. நமது மதத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்." எனக் கூறுகின்றனர்.
சில நிர்வாகிகள் பேசுகையில், "இந்துப் பெயர்களைப் போலியாக வைத்துக் கொண்டும், நெற்றியில் திலகமிட்டும், இந்துக்களைப் போல நடித்து நட்பு கொள்கின்றனர். பின்னர் பெண்களைத் தங்கள் வலையில் வீழ்த்துகின்றனர். எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடம் நட்பு கொள்ள வேண்டாம், அது காதல் மற்றும் திருமண விவகாரங்களுக்கு வழிவகுக்கிறது." என்று தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்வினை என்ன?
இந்தச் சம்பவம் இரண்டு சமூகங்களுக்கிடையே பகையை உருவாக்குகிறது என்றும், நாட்டின் அரசியலமைப்பை மதிக்காத செயல் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து மௌலானா ஆசாத் விசார் மஞ்ச் தலைவரும், முன்னாள் எம்.பியுமான ஹுசைன் தல்வாய், "நாட்டில் இந்து-முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்துவது தவறு. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த அரசே இத்தகைய சம்பவங்களை ஊக்குவிக்கிறது. இது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது. வெறுப்பைப் பரப்புவது கடுமையான குற்றமாகும், காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முசாபர் ஹுசைன் பிபிசி மராத்தியிடம், "ஒரு சமூகத்திற்கு எதிராக இப்படி உறுதிமொழி எடுப்பது தவறானது. இவர்களுக்கு நாட்டின் சட்டத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இதன் மூலம் தாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மதிக்கவில்லை என்பதை மறைமுகமாகக் காட்டியுள்ளனர்." என்றார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சையத் நாசிர் உசேன், "பாஜக ஆட்சியில் இத்தகைய பிரசாரப் படங்கள் ஊக்குவிக்கப்படுவதால், முஸ்லிம்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர். ஒரு முழு சமூகத்தையும் களங்கப்படுத்த சினிமாவை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும்போது, அது திட்டமிட்ட பாகுபாடாக மாறுகிறது. எந்தவொரு சமூகத்தையும் பொருளாதார ரீதியாகவோ அல்லது சமூக ரீதியாகவோ புறக்கணிப்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது." என்றார்.
ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையின் விளக்கம்
இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரும் இந்து ஜாக்ரன் மஞ்ச் ஒருங்கிணைப்பாளருமான ராகேஷ் ஜோஷி பிபிசி மராத்தியிடம், "இந்தியாவில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் மத மாற்றங்களின் யதார்த்தத்தைக் காண்பிக்கவும், இந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே நாங்கள் இந்தப் படத்திற்கு ஏற்பாடு செய்தோம். இதில் தேர்தல் நோக்கம் அல்லது வெறுப்பு என எதற்கும் இடமில்லை. மத மாற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுவரை எங்கள் மீது யாரும் புகார் அளிக்கவில்லை." என்றார்.
இது குறித்து நலசோபரா அசோல் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுஜித் குமார் பவார் பிபிசி மராத்தியிடம், "இது தொடர்பாக எங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை, எனவே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரிடமாவது கருத்து இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு