You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இரான் இஸ்லாமிய நாடுகளை தாக்குவது ஏன்?
இரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் தொடங்கிய மோதல் வளைகுடா முழுவதும் அதிர்வுகளை உருவாக்கி வருகிறது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என இரான் எச்சரித்திருந்த நிலையில் இஸ்ரேலை மட்டும் தாக்குவதற்குப் பதிலாக, இரானிய ஏவுகணைகள் தோஹா முதல் அபுதாபி மற்றும் துபை வரை, குவைத் நகரம் முதல் மனாமா மற்றும் ரியாத் வரையிலான நகரங்களை உலுக்கியுள்ளன.
ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட பிறகு அதன் சிதைவுகள் விழுந்ததில் அபுதாபியில் ஒருவர் கொல்லப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறியிருக்கிறது.
ஏவுகணைகளை தான் சுட்டு வீழ்த்தியதாக கத்தார் தெரிவிக்கிறது, மேலும் பல வளைகுடா நாடுகளில் தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இவை சீரற்ற தாக்குதல்கள் அல்ல. மொத்தத்தில், அமெரிக்காவிற்கு பஹ்ரைன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் குறைந்தது பத்தொன்பது இடங்களில் இராணுவ தளவாட வசதிகள் உள்ளன. அவற்றில் எட்டு இடங்கள் பல பிராந்திய ஆய்வாளர்களால் நிரந்தர தளங்களாகக் கருதப்படுகின்றன.
கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகில் அமைந்துள்ள அல் உதைத் தளம், மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படை தளமாகும். ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்களை கொண்டுள்ள இது அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது.
வளைகுடா, செங்கடல் மற்றும் அரபிக் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது.
அமெரிக்க தாக்குதல்கள் தொடர்ந்தால், எந்த நாட்டில் அமைந்திருந்தாலும் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க தளமும் தங்களது நியாயமான இலக்காகிவிடும் என டெஹ்ரான் பலமுறை எச்சரித்துள்ளது.
இரான் தாக்குதலை "ஆபத்தை தூண்டுதல்" என்று கூறும் ஐக்கிய அரபு அமீரகம், பதிலடி கொடுக்கும் உரிமையை தான் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு