You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீனின் விந்து முதல், பறவை எச்சம் வரை - விநோதமான சரும பராமரிப்பு முறைகள்
- எழுதியவர், டேவிட் காக்ஸ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சமூக ஊடகங்களில் பல வினோதமான அழகு சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன.
ஆனால், அறிவியல் ஆய்வுகள் அவற்றை அப்படியே உண்மை என்று ஏற்றுக்கொள்கின்றனவா?
தென் கொரியாவின் சியோலில் உள்ள 'யூ அண்ட் ஐ' கிளினிக்கில், சரும அமைப்பிற்காக அதிகம் கேட்கப்படும் சிகிச்சைகளில் ஒன்று, சால்மன் மீனின் விந்துவிலிருந்து எடுக்கப்பட்ட மிகச்சிறிய டிஎன்ஏ துண்டுகளை டெர்மிஸ் பகுதிக்குள் செலுத்துவதாகும்.
டெர்மிஸ் என்பது, ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் சுரப்பிகளைக் கொண்ட சருமத்தின் தடிமனான நடுத்தர அடுக்கு.
"இதன் நோக்கம் ஃபில்லர்களைப் போல சருமத்தின் அளவை அதிகரிப்பது அல்ல, மாறாக சருமத்தை மேம்படுத்துவது அல்லது உயிர்-தூண்டுதல் அளிப்பதாகும். இது ஆரோக்கியமான சருமச் சூழல் மற்றும் அது மீண்டு வருவதற்கு ஆதரவளிப்பதை உள்ளடக்கியது," என்கிறார் அந்த கிளினிக்கின் அழகியல் மருத்துவர் மற்றும் யோன்செய் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கியூ-ஹோ யி.
இந்த யோசனை வினோதமாகத் தோன்றலாம், ஆனால் இந்த கருத்து உண்மையில் மீளுருவாக்க மருத்துவம் மற்றும் காயத்தை குணப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து உருவானது என்று யி கூறுகிறார்.
போர்க்காயங்களால் முகத்தில் தழும்புகள் உள்ளவர்களுக்கு திசுக்களைச் சரிசெய்யும் ஆற்றல், மீன் டிஎன்ஏ துண்டுகளுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டபோது இது கவனத்தைப் பெற்றது.
அறிவியல் தரவுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன, ஆனால் சில ஆய்வுகள் சால்மன் விந்துவின் சுத்திகரிக்கப்பட்ட பாலிநியூக்ளியோடைடுகளைப் பயன்படுத்தும் இந்தச் சிகிச்சைகள், சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன.
"சருமத்தின் ஈரப்பதம், பொலிவு, அமைப்பு மற்றும் சுருக்கங்களை மேம்படுத்த இது உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன" என்று அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் தோல் மருத்துவ இணைப் பேராசிரியர் ஜோசுவா செய்க்னர் கூறுகிறார். இவர் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
"யார் முதலில் இதை ஒரு தோல் சிகிச்சையாக பயன்படுத்த முடிவு செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது."
தென் கொரியா தற்போது அழகியல் துறையில் ஒரு டிரெண்ட்செட்டராக, அதாவது 'கே-பியூட்டி' மோகமாக பார்க்கப்படுவதால், சால்மன் மற்றும் பிற மீன் விந்து ஊசிகளின் நன்மைகள் குறித்து சார்லி எக்ஸ்.சி.எக்ஸ் முதல் ஜெனிபர் அனிஸ்டன் வரையிலான பிரபலங்களின் ஆதரவோடு உலகம் முழுவதும் பரவியுள்ளது.
பறவை எச்சத்தால் செய்யப்பட்ட முகமூடிகள் மற்றும் ரத்தத்தை உறிஞ்சும் 'வாம்பயர் ஃபேஷியல்' போன்ற பிற வினோதமான சிகிச்சைகளுடன் சேர்த்து இதற்கான புகழும் அதிகரித்துள்ளது.
ஆனால், வழக்கத்திற்கு மாறான, பிரபலமாகி வரும் இந்த தோல் பராமரிப்பு முறைகள் உண்மையில் பலனளிக்கின்றனவா?
பண்டைய முறைகள்
வரலாற்றுப் புத்தகங்களை ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்தாலே, சருமப் பராமரிப்பு என்பது வினோதமான நடைமுறைகளைக் கொண்ட நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டது என்பது தெரியும். எகிப்திய ராணி கிளியோபாட்ரா புளித்த கழுதைப் பாலில் குளித்ததாகக் வதந்திகள் உள்ளன.
மியான்மரில், பெண்கள் பல நூற்றாண்டுகளாக 'தனகா' எனப்படும் மரப்பட்டையிலிருந்து அரைக்கப்பட்ட விழுதை, அலங்காரத்திற்காகவும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் முகத்தில் தடவி வருகின்றனர்.
முகப்பருக்களுக்கான ஒரு பிரபலமான ரோமானியச் சிகிச்சையில் ஒரு சிறிய முதலையின் குடலை அரைத்துப் பயன்படுத்தும் முறை பின்பற்றப்பட்டது.
இருப்பினும், நவீன சரும அறிவியல் இந்த பண்டைய அழகு சிகிச்சைகளில் சில காலத்தின் சோதனையைத் தாண்டி நிலைத்து நிற்பதாகக் கூறுகிறது.
மஞ்சள், டைகர் கிராஸ் மற்றும் கடற்பாசி போன்ற பொருட்கள் அவற்றின் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் விளைவுகளுக்காக இன்றைய நவீன தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
2022-ஆம் ஆண்டில், சலெர்னோவின் ட்ரோட்டா என்று அழைக்கப்பட்ட இடைக்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் மருத்துவ பயிற்சியாளரின் எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்த 12-ஆம் நூற்றாண்டு இத்தாலியின் பல்வேறு தோல் பராமரிப்பு நடைமுறைகளை ஒரு ஆய்வு ஆராய்ந்தது.
அவற்றில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஃபாவா பீன்ஸ் மற்றும் வினிகர் போன்ற பல பொருட்கள், இப்போது முகத்தை சுத்தம் செய்யவும், இறந்த செல்களை நீக்கவும் மற்றும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சை அளிக்கவும் பயனுள்ளதாகக் கருதப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
உதாரணமாக, டார்டாரிக் அமிலம் எனப்படும் டார்டார் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாறு, இப்போது நவீன தோல் பராமரிப்பில் ஒரு பொதுவான அங்கமாக உள்ளது.
கெய்ஷா முகப் பராமரிப்பு
இயற்கையில் காணப்படும் தாவரங்கள், மூலிகைகள் மற்றும் தாதுக்கள் மட்டும் இதில் இல்லை.
"கெய்ஷா ஃபேஷியல்" என்று அழைக்கப்படும் முறையில், நைட்டிங்கேல் பறவைகளின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சக்திவாய்ந்த புற ஊதா ஒளி மூலம் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
பின்னர், இறந்த செல்களை நீக்கும் மற்றும் பொலிவூட்டும் பிற வேதிப்பொருட்களுடன் கலக்கப்பட்டு, முகமூடி போலப் பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானிய புஷ் வார்ப்ளர் எனப்படும் ஒரு வகை நைட்டிங்கேல் பறவையின் எச்சம், துணிகளில் உள்ள சாயத்தை நீக்கப் பயன்படும் என்ற பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஜப்பானிய கண்டுபிடிப்பிலிருந்து இந்த முறை உருவானது.
இதன் விளைவாக, ஜப்பானியப் பெண் கலைஞர்கள் தங்கள் சருமத்தை வெண்மையாக்கவும், அடர்த்தியான ஒப்பனையை அகற்றவும் அந்தக் கழிவுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
இன்று, சருமத்தைப் பொலிவாக்கும் ஒரு வழியாக உலகின் பல்வேறு கிளினிக்குகளில் இது பிரபலமாக உள்ளது. மேலும் இதற்குப் பின்னால் சில வலுவான அறிவியல் உண்மைகளும் இருக்கலாம்.
செய்க்னரின் கூற்றுப்படி, நைட்டிங்கேல் பறவைகள் தங்கள் எச்சத்தில் குறிப்பாக அதிக செறிவூட்டப்பட்ட யூரியாவை விட்டுச் செல்கின்றன. இது சருமத்தை மென்மையாக்கும் ஆற்றல் கொண்ட ஒரு வேதிப்பொருள் என்பதால், பொதுவாக ஈரப்பதமூட்டும் கிரீம்களில் சேர்க்கப்படுகிறது.
இதில் குவானைன் என்ற அமினோ அமிலமும் அதிக செறிவில் உள்ளது.
"அமினோ அமிலங்கள் ஈரப்பதமூட்டும் மற்றும் பொலிவூட்டும் நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது" என்கிறார் செய்க்னர்.
"ஆனால், இந்தச் சிகிச்சைகளில் சுத்திகரிக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட நைட்டிங்கேல் எச்சங்களே பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். நீங்கள் வீதியில் கிடக்கும் பறவை எச்சத்தை அப்படியே அள்ளி முகத்தில் தேய்த்துக்கொள்ளக் கூடாது"என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் , கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தச் சிகிச்சைகள் குறித்த பல ஆய்வுகளுக்கு அழகு சாதனத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளன. அல்லது அந்த நிறுவனங்களில் நேரடியாகப் பணியாற்றும் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டவை.
இருப்பினும், டிக்டாக் தளத்தில் வலம் வரும், சுயமாக செய்துகொள்ள கூடிய மற்றொரு தோல் பராமரிப்பு முறையான 'மாதவிடாய் ரத்தத்தால் செய்யப்பட்ட முகமூடி' குறித்து ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
மாதவிடாய் திரவத்திலிருந்து பெறப்படும் பிளாஸ்மா, சாதாரண ரத்த பிளாஸ்மாவை விடக் காயங்களைச் குணப்படுத்துவதை மேம்படுத்தும் திறன் கொண்டதாக 2022-ஆம் ஆண்டின் ஓர் ஆய்வு பரிந்துரைத்தாலும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தோல் மருத்துவ ஆராய்ச்சியாளர் பெய் பெய் டு-ஹார்பர் இதில் உடன்படவில்லை.
"எந்த ஒரு மருத்துவரும் இதை ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டார்கள்," என்கிறார் டு-ஹார்பர்.
மேலும், "அதிர்ச்சியை ஏற்படுத்தி மக்கள் அதிக பார்வைகளைப் பெற வேண்டும் என்பதற்காக உருவான டிக்டாக் ட்ரெண்ட்களில் இதுவும் ஒன்று என்றே நான் நினைக்கிறேன்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
'வாம்பயர் ஃபேஷியல்'
சில நேரங்களில் "வாம்பயர் ஃபேஷியல்"என்று அழைக்கப்படும், பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா ஊசிகள் மூலம் சருமத்தைப் புத்துயிர் பெறச் செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து டு-ஹார்பர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்த நடைமுறையில் நோயாளியின் சொந்த ரத்தம் எடுக்கப்பட்டு, ஒரு மையவிலக்கு இயந்திரத்தைப் (centrifuge) பயன்படுத்தி அது பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
இந்தச் செயல்முறை பிளாஸ்மாவில் உள்ள 'வளர்ச்சி காரணிகளின்' எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இவை செல்களை வளரவும், பிரியவும் மற்றும் சீரமைக்கவும் கட்டளையிடும் ஒரு சிறப்பு புரதக் குழுவாகும். பின்னர் இந்த ரத்தம் நுண் ஊசிகள் மூலம் மீண்டும் முகத்தின் சருமத்திற்குள் செலுத்தப்படுகிறது.
உடலின் சொந்த வளர்ச்சி காரணிகளை மீளுருவாக்கம் செய்யும் முறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், மூட்டுத்தேய்மானம் மற்றும் பிற மூட்டு பிரச்னைகள் முதல் அலோபீசியா மற்றும் காயங்களை குணப்படுத்துதல் வரை மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் தீவிர ஆர்வத்தை உருவாக்கி வருகின்றன.
சரும ஆரோக்கியத்திற்கான ஆதாரங்கள் இன்னும் கலவையான முடிவுகளையே தந்தாலும், 50 மற்றும் 60 வயதிற்குட்பட்டவர்களின் சரும நெகிழ்ச்சித்தன்மையை இது அதிகரிப்பதோடு, சுருக்கங்கள் மற்றும் நிறமிகளைக் குறைப்பதாகவும் சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
"மக்களுக்கு பிஆர்பி எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமைகிறது என்பதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன," என்கிறார் டு-ஹார்பர்.
மையவிலக்கு செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் உள்ள மாற்றங்கள் மற்றும் சிலரின் ரத்தத்தில் இயற்கையாகவே வளர்ச்சி காரணிகளின் செறிவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் அல்லது வெவ்வேறு வகையான வளர்ச்சி காரணிகள் இருக்கலாம் என்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறுகிறார்.
"எனவே சில நேரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், சில நேரங்களில் குறைவாகவே பலன் தரும்," என்கிறார் டு-ஹார்பர்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
சருமப் பராமரிப்பின் எதிர்காலம்
மிகவும் வினோதமான தோல் பராமரிப்பு நடைமுறைகள் கூட சில அறிவியல் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அடுத்த தலைமுறை தோல் பராமரிப்பு சிகிச்சைகளுக்கான வழிமுறைகளில், மற்றவற்றுடன் கொலாஜன் சப்ளிமென்ட் கொண்ட உணவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிவதும் அடங்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், கொலாஜன் மாற்றத்திற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அமினோ அமிலங்களைக் கொண்ட சப்ளிமென்ட் உணவுகள் பயன்படுத்தப்பட்டன.
ஆறு மாத காலப்பகுதியில் இது சருமத்தின் அமைப்பு, ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நோயாளிகளின் உமிழ்நீரில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளின்படி, உயிரியல் வயதை சராசரியாக 1.4 ஆண்டுகள் குறைக்கவும் செய்தது.
இந்த குறிப்பிட்ட சமச்சீர் அமினோ அமிலங்களைக் கொண்ட கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் சரும ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தின் பிற அம்சங்களையும் மேம்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
அழற்சி போன்ற செயல்முறைகளின் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சருமத்திற்கு இதுவரை அங்கீகரிக்கப்படாத ஒரு பங்கு இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வுகளுடன் இந்த முடிவுகள் ஒத்துப்போகின்றன.
இருப்பினும், இதில் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவை என்று அந்த ஆய்வு முடிவு செய்துள்ளது.
மற்ற புதிய சிகிச்சைகள், நமது முகத்தில் வாழும் மற்றும் சருமத்தில் ஏற்படும் வீக்கத்திற்குப் பெரிதும் பங்களிக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளின் தொகுப்பான 'ஸ்கின் மைக்ரோபயோம்' என்பதை மாற்றியமைக்கும் புதுமையான வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
சாத்தியமான சிகிச்சைகளில் நமது சரும நுண்ணுயிரிகளுக்குள் இருக்கும் பயனுள்ள பாக்டீரியாக்களை ஊட்டம் செய்ய வடிவமைக்கப்பட்ட 'ப்ரீபயாடிக்குகள்' மற்றும் பாக்டீரியாக்களால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருட்களான 'போஸ்ட்பயாடிக்குகளும்' அடங்கும் என்று செய்க்னர் கூறுகிறார்.
கடந்த ஆண்டு, தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் ரத்தத்தில் காணப்படும் ஒரு பாக்டீரியாவைக் கண்டறிந்ததாக வெளியிட்டனர். இது சரும செல்களில் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் கொலாஜன் சேதத்தைக் குறைக்கக்கூடிய பயனுள்ள போஸ்ட்பயாடிக்குகளை உற்பத்தி செய்கிறது, இருப்பினும் இது சோதனைக் குழாய்களில் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எந்தவொரு புதிய சருமப் பராமரிப்பு முறையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக நிலைபெற வேண்டுமானால், பல ஆண்டுகாலங்களாக வணிகரீதியாகக் கிடைக்கக்கூடிய, சோதிக்கப்பட்ட தீர்வுகளை விட அது அதிக செயல்திறன் மிக்கது என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும் என்கிறார் ஸெய்க்னர்.
"சந்தையில் உள்ள பாரம்பரிய சருமப் பராமரிப்புப் பொருட்களை விட, இந்த தற்காலிக சிகிச்சை முறைகள் உண்மையிலேயே சிறந்த பலன்களை அளிக்கின்றனவா என்பது தான் இப்போதும் உள்ள கேள்வி" என்று கூறும் ஸெய்க்னர்,
"அது இன்னும் ஒரு விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது" என்கிறார்.
ஒருமுறை மட்டும் சருமத்திற்கு ஈரப்பதத்தையும் பொலிவையும் பெறுவதற்காக ஒரு ஃபேஷியலுக்கு 500 டாலர்கள் செலவழிப்பதை விட, சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க காலையில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது போன்ற நிலையான வழக்கத்தை ஒரு நபர் பின்பற்றுவதையே தான் விரும்புவதாக செய்க்னர் கூறுகிறார்.
மேலும் மாலையில் ஒரு நைட் மாய்ஸ்சரைசர் மற்றும் ரெட்டினோல் போன்ற கொலாஜனைத் தூண்டும் பொருளைப் பயன்படுத்தி ஈரப்பதம் மற்றும் சீரமைப்பைப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு