'நமாஸின் நன்மைகளை' கூறியதற்காக கேலி செய்யப்பட்ட பெண் தொழிலதிபர் - இவரது பின்னணி என்ன?
பட மூலாதாரம், namitathapar
48 வயதான தொழிலதிபர் நமீதா தாப்பர் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளார்.
இவர் 'ஷார்க் டேங்க் இந்தியா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராகவும், 'எம்யூர்' மருந்து நிறுவனத்தின் இந்தியச் செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குநராகவும், 'இன்க்ரெடிபிள் வென்ச்சர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த நமீதா தாப்பர், சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். இன்ஸ்டாகிராமில் இவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
நமீதா பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதோடு, ரீல்ஸ் வீடியோக்களையும் உருவாக்குகிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு, இஸ்லாமிய பிரார்த்தனை முறையான தொழுகையின் (நமாஸ்) நன்மைகள் குறித்து ஒரு வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.
நமீதாவின் இந்த ரீல் வீடியோவிற்குப் பிறகு, பலரும் அவரை கிண்டல் செய்ததுடன் எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டனர்.
தற்போது இது குறித்து நமீதா மற்றொரு ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார், இது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நமீதா தாப்பர் மார்ச் 21, 1977 அன்று மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்தார். இவருடைய தந்தை சதீஷ் மேத்தா, ஐஐஎம் ஆமதாபாத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் எம்யூர் பார்மா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
21 வயதில் பட்டயக் கணக்காளரான நமீதா தாப்பர்
பட மூலாதாரம், namitathapar
தனது 21 வயதில் பட்டயக் கணக்காளர் பட்டத்தைப் பெற்ற நமீதா, தனது தந்தையின் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கைடன்ட் கார்ப்பரேஷனில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் டியூக் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். நமீதா 2007-ல் எம்யூர் பார்மா நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக சேர்ந்தார். பின்னர் அவர் நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் இயக்குநரானார்.
தனது தந்தையின் நிறுவனமான எம்யூர் பார்மா சுமார் 70 நாடுகளில் வணிகம் செய்வதாகவும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளதாகவும் ஒரு பேட்டியில் நமீதா தெரிவித்திருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேத்தன் பகத்திற்கு அளித்த பேட்டியில், "நிறுவனத்தின் இந்திய வணிகத்தை நான் கவனித்து வருகிறேன், இதன் ஆண்டு வருவாய் சுமார் 2,000 கோடி ரூபாய்" என்று நமீதா கூறியிருந்தார்.
தனது வாழ்நாளில் நான்கு ஆண்டுகளை சிஏ பட்டம் பெறுவதற்காகச் செலவிட்டதாகவும், இது ஆர்வத்தினால் மட்டுமே சாத்தியமானது என்றும் நமீதா தெரிவித்திருந்தார்.
நமீதாவின் கூற்றுப்படி, அவருக்கு கணக்குப்பதிவியல் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் அவரது தந்தை அவரை 'முனீம் ஜி' என்று அழைப்பாராம்.
இந்த நேர்காணலில், நமீதா தனது குடும்பத்தின் நிதி நிலை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை, ஆனால் எம்யூர் பார்மா ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வணிகம் செய்கிறது என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
எம்யூர் நிறுவனம் தற்போது 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்ட ஒரு பொது நிறுவனமாகும்.
பட மூலாதாரம், namitathapar
ஜூலை 2024-ல் எம்யூர் பார்மா தனது ஐபிஓ-வை வெளியிட்டபோது, நமீதா அந்த நிறுவனத்தில் தனக்கு இருந்த 12.68 லட்சம் பங்குகளை 127 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
நிறுவனப் பொறுப்புகளைத் தவிர, நமீதா ஒரு தீவிர முதலீட்டாளராகவும் உள்ளார். மேலும் 'ஷார்க் டேங்க் இந்தியா' என்ற வணிக ரீதியிலான ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருக்கிறார்.
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் நமீதா 25 நிறுவனங்களில் ₹10 கோடி முதலீடு செய்துள்ளார். அதன்பிறகு அவர் இன்னும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
தனது வணிக வாழ்க்கை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அப்பால், நமீதா சமூக வலைதளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அவர் "அன்கண்டிஷன் யுவர்செல்ஃப்" என்ற யூடியூப் கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இதுதவிர, நிதி ஆயோக்கின் டிஜிட்டல் ஹெல்த் டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்ட 'சேம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச்' திட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்.
நேர்காணல்களில் நமீதா தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதோடு, தனிநபர் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.
ஒரு நேர்காணலில் அவர், "உங்கள் வாழ்க்கையின் 80% உங்கள் வேலைதான், எனவே நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது மிகவும் முக்கியம், இல்லையென்றால் நீங்கள் மகிழ்ச்சியற்றவராக இருப்பீர்கள்" என்று கூறினார்.
பிசினஸ் டுடே இதழுக்கு 2021-ல் அளித்த பேட்டியில், வெறும் பட்டத்தைப் பெற்றிருப்பது மட்டும் ஒருவருக்கு மரியாதையைத் தேடித்தந்துவிடாது என்று தாப்பர் விளக்குகிறார்.
தமது நிறுவனத்தில் சிறந்த யோசனைகளை ஊக்குவிப்பதற்காக, மாற்றுக் கருத்துக்களைத் வெளிப்படுத்துவதன் அவசியத்தை தான் எப்போதும் வலியுறுத்துவதாக தாப்பர் கூறினார்.
பட மூலாதாரம், namitathapar
தாப்பர் பல விஷயங்களில் தனது கருத்து வேறுபாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில், யோகா குருவும் தொழிலதிபருமான ராம்தேவ் 'ரூ ஆஃப்சா' குளிர்பானம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார், இதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
ராம்தேவின் கருத்துக்களை 'வெறுப்புப் பிரச்சாரம் ' என்று நமீதா தாப்பர் குறிப்பிட்டார். "நமது குழந்தைகளுக்காக நாம் எத்தகைய இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதே சமயம், நமீதா மீது 'நெப்போ கிட்' என்றும், தனது தந்தையின் பணத்தில் வெற்றி பெற்றவராக இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தனது தந்தையின் மருந்து நிறுவனத்தை 500 கோடி ரூபாயிலிருந்து 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியதாக அவர் பல்வேறு நேர்காணல்களில் கூறி வருகிறார்.
ஒரு நேர்காணலில் அவர், "எனது வருமானத்தை நானே செலவிட விரும்பினேன், எனது சொந்த விருப்பப்படி வாழ விரும்பினேன்" என்று கூறியிருந்தார்.
குடும்பத் தொழில்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 87 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன என்று எகனாமிக் டைம்ஸ் நேர்காணலில் நமீதா தெரிவித்தார்.
முதல் தலைமுறை மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறையும் ஒரு குடும்பத் தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஷார்க் டேங்க் இந்தியாவின் பணக்கார நடுவர்களில் ஒருவராகவும் நமீதா கருதப்படுகிறார். சமூக வலைதளங்களில் அவர் சுறுசுறுப்பாக இருப்பதால், அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையும் செய்திகளில் இடம்பிடிக்கிறது.
அவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 , மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் ஆடி க்யூ7 போன்ற சொகுசு கார்கள் இருப்பதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் சக நடுவராக இருந்த அமித் ஜெயின், நமீதா 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகளை அணிகிறார் என்று ஒருமுறை நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை