அமெரிக்காவுடன் 2-வது கட்ட பேச்சு நடத்த இரான் நிபந்தனை - பாகிஸ்தான் என்ன செய்கிறது?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் போர் முடிவுக்கு வருவது தொடர்பாக விரைவில் ஏதேனும் நற்செய்தி வரக்கூடும் என்ற நம்பிக்கையை, திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சில கருத்துகள் ஏற்படுத்தின.

ஆனால் இந்த நம்பிக்கை சில மணிநேரம் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு, அமெரிக்கா மற்றும் இரானிடமிருந்து வந்த தொடர் அறிக்கைகள், அமைதி இன்னும் வெகு தொலைவில் இருப்பதாகவே உணர்த்துகின்றன.

அமெரிக்காவுடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரான் தற்போது திட்டமிடவில்லை என்று, திங்கள்கிழமை நள்ளிரவு இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.

பாகிஸ்தான் முன்னெடுக்கும் அமெரிக்கா-இரான் இடையேயான சாத்தியமான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்கக் குழு இஸ்லாமாபாத் செல்லத் தயாராகி வரும் வேளையில் அவர் இவ்வாறு கூறினார்.

"அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து எங்களிடம் இன்னும் எந்தத் திட்டங்களும் இல்லை; அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை," என்று ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பாகாய் தெரிவித்ததாக, இரானின் ஐஆர்என்ஏ செய்தி முகமையை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் செய்தி வெளியிட்டுள்ளது.

திங்களன்று டொனால்ட் டிரம்ப் தன் ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இரானின் புதிய தலைவர்கள் விவேகமிக்கவர்களாக அமைந்தால், இரானின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவும் செழிப்பாகவும் அமையக்கூடும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏப்ரல் 8-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம், ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

முன்னதாக, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; ஆனால், நீண்ட விவாதங்களுக்குப் பிறகும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

ஏப்ரல் 19 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோசியலில், தனது தூதுக்குழு ஏப்ரல் 20 அன்று மாலை இஸ்லாமாபாத்தை அடையும் என்று அறிவித்தார். எனினும், அமெரிக்க தூதுக்குழு இஸ்லாமாபாத்தை அடைந்துவிட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், இரானில் உள்ள "ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும்" அமெரிக்கா அழித்துவிடும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

டிரம்பின் எச்சரிக்கை குறித்து இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாய் கூறுகையில், இரான் எந்தவிதமான காலக்கெடு, இறுதி எச்சரிக்கை அல்லது அழுத்தத்தையும் நிராகரிக்கிறது என்றும், அதன் முடிவுகள் போர் நிறுத்தக் காலக்கெடுவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாக தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்கக் குழுவின் இருப்பு என்பது அமெரிக்கா சார்ந்த விஷயம் என்றும், இரானைச் சார்ந்ததல்ல என்றும் அவர் கூறினார்.

'தற்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் ஏதுமில்லை'

பட மூலாதாரம், Press TV

படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்கா தீவிரமாக இல்லை என்று கூறினார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் குறித்துத் தீவிரமாக உள்ளது" என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாததால், தற்போதைக்கு மேலதிகப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இரான் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு 'பகுத்தறிவற்ற மற்றும் கற்பனையான விஷயங்களை' அடிப்படையாகக் கொண்டது என்றும் இஸ்மாயில் பாகாய் கூறினார்.

இரானிய பழமொழி ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே சோதிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் சோதிப்பது தவறு என்று கூறினார்; அமெரிக்கா கடுமையான அணுகுமுறையைக் கடைபிடித்தால், முன்பைப் போன்றே அதே பதிலடியைச் சந்திக்கும் என்றும் எச்சரித்தார்.

பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கடந்தகால நடத்தையும் தொடர்ச்சியான தாக்குதல்களும் இரு தரப்பினருக்கும் இடையே 'ஆழ்ந்த அவநம்பிக்கையை' உருவாக்கியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு ஒப்பந்தமும் அமெரிக்காவின் உறுதிமொழிகளைச் சார்ந்திராமல், இரானின் சொந்த பலம் மற்றும் உத்தரவாதங்களின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகளில் எகிப்தின் பங்கு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​தற்போது அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான ஒரே மத்தியஸ்தராக பாகிஸ்தான் மட்டுமே உள்ளது என்றும், இருப்பினும் இச்செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல மற்ற நாடுகளும் தொடர்பில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது, ​​இரானியக் குழுவினரை அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாகக் கடுமையாக சாடியதாக கூறும் அமெரிக்க ஊடகச் செய்திகளையும் அவர் நிராகரித்தார்.

பாகாய் அவற்றை "அமெரிக்க ஊடகக் கதை" என்று விவரித்தார்.

இரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், பேச்சுவார்த்தையின் எந்தச் சுற்றிலும் இவ்விவகாரம் எழுப்பப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

"இரான் மண் எங்களுக்கு எவ்வளவு புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் உள்ளதோ, அதேபோல செறிவூட்டப்பட்ட யுரேனியமும் எங்களுக்கு முக்கியமானது," என்று அவர் கூறினார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

பாகிஸ்தான் என்ன செய்கிறது?

பிபிசி பாரசீக செய்தியாளர் கோஞ்சே ஹபிபிஸாதேவின் கூற்றுப்படி, திங்களன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசியில் உரையாடிய இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரான் "அமெரிக்காவுடனான தனது உறவுகளின் அனைத்து அம்சங்களையும் மறுஆய்வு செய்து, தனது எதிர்கால உத்தி குறித்து முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் "தூண்டுதல் நடவடிக்கைகள் மற்றும் தொடர் போர்நிறுத்த மீறல்கள்" ராஜீய ரீதியிலான செயல்முறைக்குத் தடையாக இருப்பதாக அராக்சி கூறினார்.

இரானிய வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான "மிரட்டல்களும் தலையீடுகளும்", இரான் குறித்த "முரண்பாடான அறிக்கைகளும் மிரட்டும் மொழியும்" பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இஷாக் தார் மற்றும் அப்பாஸ் அராக்சி இடையிலான இந்தக் கலந்துரையாடல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அறிக்கையின்படி, இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில், அனைத்துப் பிரச்னைகளையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்குத் தொடர் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இஷாக் தார் வலியுறுத்தினார்.

"இரு வெளியுறவு அமைச்சர்களும் பரஸ்பரத் தொடர்புகளைத் தொடர்ந்து பராமரிக்க ஒப்புக்கொண்டனர்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், திங்களன்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், "இரான் அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, தனது நலன்களையும் தேசியப் பாதுகாப்பையும் காக்க சரியான முடிவுகளை எடுக்கும்," என்று அராக்சி தெரிவித்தார்.

இரண்டு உரையாடல்களிலும், இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரான் பங்கேற்குமா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Leigh Vogel/Getty Images for About Face: Veterans Against The War

படக்குறிப்பு, திங்களன்று, முன்னாள் படைவீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் வாஷிங்டனில் இரான் போருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

"ஊடகங்கள் வெனிசுவேலாவின் விளைவைப் பற்றிப் பேச விரும்பாததைப் போலவே, இரானுக்கும் ஒரு சிறந்த விளைவு ஏற்படும். இரானின் புதிய தலைவர்கள் விவேகத்துடன் செயல்பட்டால், இரானுக்கு மிகச் சிறந்த மற்றும் செழிப்பான எதிர்காலம் அமையக்கூடும்," என்று டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், பின்னர் அவரது தொனி மீண்டும் மாறியது; இரானுடன் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் வரை, இரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா விலக்காது என்று அவர் கூறினார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பது தெளிவாக இல்லாத ஒரு சூழலில், டிரம்பின் இந்த கருத்து வெளியானது.

டொனால்ட் டிரம்ப் தன் ட்ரூத் சோஷியல் பதிவில், "இந்த முற்றுகை இரானை முழுமையாக அழித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தினமும் 500 மில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர்; இதை நீண்ட காலத்துக்குத் தொடர்வது சாத்தியமற்றது," என்று பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், இரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கத் தடையானது நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறாது என்று இரான் கூறியுள்ளது.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு