இந்தியாவுக்காக அண்ணன், பாகிஸ்தானுக்காக தம்பி என எதிரெதிரே நின்று சகோதரர்கள் போரிட்ட வரலாறு

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி இந்தி
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சர் அப்துஸ் சமத் கான் ராம்பூர் சமஸ்தானத்தின் முதலமைச்சராக இருந்தார். அவரது மூத்த மகன் யூனுஸ் கான், முதலில் டேராடூனில் உள்ள கர்னல் பிரவுன் பள்ளியில் பயின்றார்.

பின்னர் அவர் இந்திய ராணுவ அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கிருந்து கர்வால் ரைஃபிள்ஸில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரது இளைய மகன் சாஹிப்ஜாதா யாகூப் கான் 1920-இல் பிறந்தார். அவரும் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1940-ல் 18-வது கிங் எட்வர்ட் குதிரைப்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர்கள் இருவருமே இரண்டாம் உலகப் போரில் பணியாற்றி, இந்திய பொது சேவை பதக்கத்தைப் பெற்றனர்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்திற்காகப் போரிட யாகூப் ஆப்ரிக்கா சென்றார். அங்கு எகிப்து மற்றும் லிபியா எல்லைக்கு அருகில் நிகழ்ந்த டோப்ருக் போரின் போது இத்தாலியப் படைகளால் அவர் சிறைபிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பிற்காலத்தில் ஜெனரல்களான யாஹ்யா கான் மற்றும் பி.பி. குமாரமங்கலம் ஆகியோருடன் சேர்ந்து இத்தாலியில் சிறையிலிருந்து அவர் தப்பினார். ஆனால் மீண்டும் பிடிபட்டார். யாஹ்யா மற்றும் குமாரமங்கலம் தப்பிவிட்டனர்.

போர்க் கைதியாக இருந்தபோது, அவர் இத்தாலியன் மற்றும் ஜெர்மன் மொழிகளைக் கற்றுக்கொண்டார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் விடுவிக்கப்பட்டார். அவரது நண்பர்கள் அவரை "ஜேக்கப்" என்று அழைத்தனர். அப்போது, அவரது மூத்த சகோதரர் யூனுஸ் கான் பர்மாவில் இருந்தார்.

குடும்பத்தில் பிரிவு

1947-இல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, மூத்த சகோதரர் சாஹிப்ஜாதா யூனுஸ் கான் இந்திய ராணுவத்திலேயே இருக்க முடிவு செய்தார். அதேசமயம் அவரது இளைய சகோதரர் சாஹிப்ஜாதா யாகூப் கான் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.

டொமினிக் லாப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் ஆகியோர் தங்களின் புகழ்பெற்ற 'நள்ளிரவில் சுதந்திரம்' புத்தகத்தில் யாகூப் கான் பாகிஸ்தானுக்குச் சென்றது குறித்து விவரித்துள்ளார். அதில், "இரவு உணவின் போது யாகூப் கான் பாகிஸ்தான் செல்லப்போகும் தனது முடிவை தாயிடம் சொன்னபோது, அதைக் கேட்டு அவர் திகைத்துப் போனார். அவர் மிகுந்த கோபமும் அடைந்தார்." என்று எழுதியுள்ளார்கள்.

"நாம் இரண்டு நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். நம் குடும்பத்தினரின் கல்லறைகள் இங்குதான் உள்ளன. எனக்கு அரசியல் புரியவில்லை. ஆனால் ஒரு தாயாக, என் ஆசைகள் சுயநலமானவை. நாம் எப்போதும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிடுவோமோ என்று நான் அஞ்சுகிறேன்' என்று அவர் கூறியுள்ளார்."

ஆனால் யாகூப் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அடுத்த நாள் காலையிலேயே அவர் ராம்பூரை விட்டுப் புறப்பட்டார்.

"அவருக்கு விடை கொடுக்கும்போது அவரது தாய் துக்கத்தின் அடையாளமான வெள்ளை நிற சேலையை அணிந்திருந்தார். அவர் குர்ஆனில் இருந்து வசனங்களைப் படித்தார். 25 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்த ராம்லால் மற்றும் ஓட்டுநர் குந்தன் சிங் ஆகியோர் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்தனர்" என்று லாப்பியர் மற்றும் காலின்ஸ் பதிவு செய்துள்ளனர்.

"பாகிஸ்தானில் குடியேறிய பிறகு மீண்டும் வந்து தனது உடைமைகளை எடுத்துச் செல்வதாக அவர் தனது குடும்பத்தினருக்கு உறுதியளித்தார். ஆனால் யாகூப் தனது பூர்வீக வீட்டிற்கு ஒருபோதும் திரும்பவில்லை, அவர் மீண்டும் தனது தாயின் முகத்தைப் பார்க்கவே இல்லை."

காஷ்மீரில் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்தித்த சகோதரர்கள்

இந்தியாவை விட்டு வெளியேறிய சில மாதங்களிலேயே, சாஹிப்ஜாதா யாகூப் கான் காஷ்மீரின் பனி மூடிய மலைகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு படைப்பிரிவை வழிநடத்திக் கொண்டிருந்தார்.

லாப்பியர் மற்றும் காலின்ஸ் இதுகுறித்து விவரித்துள்ளனர்.

"பாகிஸ்தான் படைகளைத் தடுக்கும் முயற்சிகள் கர்வால் படைப்பிரிவின் ஒரு கம்பெனியால் மேற்கொள்ளப்பட்டன. அந்த கம்பெனியும், யாகூப் கானைப் போலவே ஒரு இஸ்லாமிய அதிகாரியால் வழிநடத்தப்பட்டது."

"ஜூலை 1947-இல், அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து இந்திய ராணுவத்திலேயே தங்கியிருந்தார். அந்த அதிகாரியும் ராம்பூரைச் சேர்ந்தவர். அவரது பெயர் யூனுஸ் கான். அவர் சாஹிப்ஜாதா யாகூப் கானின் மூத்த சகோதரர் ஆவார்."

இரு சகோதரர்களும் காஷ்மீர் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். இருவருமே மேஜர் பதவியில் இருந்து தத்தமது படைப்பிரிவுகளை வழிநடத்தினர்.

துப்பாக்கிச் சூடு பற்றிய மாறுபட்ட தகவல்கள்

பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஹமித் மிர் தனது 'இரு கான்களின் கதை (The story of two khans)' என்ற கட்டுரையில், "மேஜர் யூனுஸ் கானின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா அவரது தம்பி யாகூப் கானைக் காயப்படுத்தியது" என்று எழுதியுள்ளார்.

"காயமடைந்தவர் தனது தம்பி என்பதை அறிந்த யூனுஸ் கான், 'வருத்தப்படாதே தம்பி, நாம் வீரர்கள், நம் கடமையைச் செய்துள்ளோம்' என்று கத்தினார். பின்னர், அந்த நேரத்தில் கர்னலாகப் பணியாற்றிய சாம் மானெக்ஷா, யூனுஸ் கானின் வீரத்தைப் பாராட்டினார்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கர்னல் யூனுஸின் மருமகள் சமன் அலி கான், இந்தக் கதை முற்றிலும் உண்மை இல்லை என்று நம்புகிறார்.

"இரு சகோதரர்களும் காஷ்மீர் போரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது உண்மைதான், ஆனால் யூனுஸ் யாகூப்பைச் சுடவில்லை. இது குறித்து எனது மாமியார் மற்றும் கணவரிடம் கேட்டேன். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று அவர்கள் கூறினர். தாங்கள் ஒரே முனையில் போரிட்டுக் கொண்டிருந்தது பின்னர்தான் தங்களுக்குத் தெரியவந்தது என்று அவர் (யூனுஸ்) என் மாமியாரிடம் கூறினார்," என்று அவர் தெரிவித்தார்.

யூனுஸின் வாழ்த்துச் செய்தி

அதன்பிறகு, அடுத்த 12 ஆண்டுகளுக்கு அந்த இரு சகோதரர்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இருவரும் தத்தமது நாடுகளின் ராணுவத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

1960-ஆம் ஆண்டு சாஹிப்ஜாதா யாகூப் கான் கல்கத்தாவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான துபா கலீலியை மணந்தபோது, அவரது மூத்த சகோதரர் யூனுஸ் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

யாகூப் கானின் மருமகள் முனிசா ஷம்சி தனது 'இன் மெமோரியம் சாஹிப்ஜாதா யாகூப் கான் மை அங்கிள்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"திருமணத்தின் போது மாமா ஒரு பிரிகேடியராக இருந்தார். நவாப்பும் பேகம் ராம்புரும் அவரது திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து கராச்சிக்கு விசேஷமாக வந்திருந்தனர். அதிபர் அயூப் கான் அவர்களுக்கு அரசு விருந்தினர் அந்தஸ்தை வழங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் இளைய மேஜர் ஜெனரலாக ஆனார்."

1965-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரின்போது, சாஹிப்ஜாதா யாகூப் கான் பாகிஸ்தானின் ஒரு பிரிவை வழிநடத்திக் கொண்டிருந்தார்.

ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு மறுத்த யாகூப்

1971-ஆம் ஆண்டிற்குள், சாஹிப்ஜாதா யாகூப் கான் பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக உயர்ந்திருந்தார். அவர் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1971 மார்ச் மாதம், ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக்கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கையைத் தொடங்குமாறு அவருக்கு உத்தரவு வந்தபோது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகத் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் யாஹ்யா கானுக்கு யாகூப் கான் அறிவுறுத்தினார்.

பிரபல பாகிஸ்தானிய எழுத்தாளரும் யாகூப்பின் மருமகளுமான முனிசா ஷம்சி இதுகுறித்து எழுதியுள்ளார்.

"1971-ஆம் ஆண்டு வாக்கில், இரு தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, ஆளுநர் அட்மிரல் அஹ்சனும் எனது மாமாவும் இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வை மட்டுமே காண முடியும் என்று அறிவுறுத்தினர். ஆனால் யாஹ்யா கானும் அவரது ஆலோசகர்களும் ராணுவத் தீர்வு காண்பதிலேயே குறியாக இருந்தனர்."

"வரப்போகும் நெருக்கடியைப் பற்றி மாமா (யாகூப் கான்) முழுமையாக அறிந்திருந்தார். இந்த முடிவின் ஒரு பகுதியாக இருப்பதை விட, தனது பதவியிலிருந்து விலகுவதே சிறந்தது என்று அவர் கருதினார். 1971 மார்ச் 5 அன்று, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜெனரல் யாஹ்யா கானுக்கு அனுப்பினார். ஆரம்பத்தில் அவர் யாஹ்யாவின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவர் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்தன."

பூட்டோவை தூக்கிலிட வேண்டாம் என்று அறிவுரை

சாஹிப்ஜாதா யாகூப் கானுக்கு பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ரஷ்யன், பாரசீகம் மற்றும் அரபு உட்பட 10 மொழிகளில் புலமை இருந்தது பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கு தெரியும்.

டாக்காவில் இருந்தபோது, அவர் ஓரளவுக்கு வங்காள மொழியையும் கற்றுக்கொண்டார்.

அவர் 1972-இல் பிரான்சுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டார். 1977-இல் ஜெனரல் ஜியா-உல்-ஹக் பூட்டோவைப் பதவியிலிருந்து அகற்றியபோது , யாகூப் மாஸ்கோவில் பாகிஸ்தான் தூதராக இருந்தார்.

"அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், பூட்டோவைத் தூக்கிலிட வேண்டாம் என்று ஜெனரல் ஜியாவுக்கு சாஹிப்ஜாதா யாகூப் கான் அறிவுறுத்தினார், ஆனால் ஜியா அவரது ஆலோசனையைக் கவனிக்கவில்லை. அவருடன் மாறுபட்ட கருத்து இருந்தபோதிலும், ஜியா 1982-இல் சாஹிப்சாதா யாகூப் கானைப் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக நியமித்தார்." என்று ஹமீத் மிர் எழுதியுள்ளார்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சகோதரர்கள்

அதே ஆண்டில், யாகூப் கான் வெளியுறவு அமைச்சராக புது டெல்லிக்கு வந்தார்.

சாஹிப்ஜாதா யூனுஸின் மருமகள் சமன் கான் நினைவு கூறுகையில், "டெல்லியில் தான் யாகூப்பும் அவரது மூத்த சகோதரர் யூனுஸும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர். அந்த நேரத்தில் நானும் அங்கிருந்தேன். என் தந்தை அவர்கள் இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்கள் காரில் இருந்து இறங்கி உள்ளே வந்த காட்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இரு சகோதரர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு விம்மிவிம்மி அழுதனர்."

"அப்பாஜானி (யூனுஸ்) யாகூப்பை அவரது பழைய செல்லப் பெயரான 'நட்டா' என்று அழைத்தார். யாகூப் உயரமானவர், ஆனால் அவரது இரு சகோதரர்களும் அவரை விட உயரமானவர்கள் என்பதால் அவர்கள் அவரை நட்டா என்று அழைத்தனர். மிகவும் கடினமானவர்கள் எனக் கருதப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள், இப்படி வெளிப்படையாக அழுவதைக் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன்"என்று அவர் கூறுகிறார்.

"அவர்களுக்கு இடையிலான இரத்த உறவு அந்த நொடியில் பொங்கியெழுந்தது. அவர்கள் அமர்ந்தபோது, இருவரும் தங்கள் சிறுவயது நினைவுகளை அன்போடு நினைவு கூர்ந்தனர். அவர்கள் இருவருமே காஷ்மீர் போரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை."

ஓய்வுக்குப் பிறகு அலிகாரில் குடியேறிய யூனுஸ் கான்

இதற்கிடையில், யூனுஸ் கான் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் ஏடிசி-யாகப் பணியாற்றினார்.

யூனுஸ் பற்றி ஆராய்ச்சி செய்த நிவேதிதா சிங் கூறுகையில், "பின்னர், அவர் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஏடிசியாகவும் பணியாற்றினார். 1962 இந்திய-சீனப் போரின்போது காஷ்மீரிலும், 1965 இந்திய-பாகிஸ்தான் போரின்போது பரேலியிலும் அவர் பணியமர்த்தப்பட்டார். அவர் ஒரு தேசபக்தர், சுயமரியாதை மிக்கவர் மற்றும் எளிமையான வாழ்க்கையை பின்பற்றியவர்"என்று அவர் கூறுகிறார்.

"அவர் மிகக் குறைவாகவே பேசுவார். பின்னணியில் இருக்கவே அவர் விரும்பினார். 1969-இல் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன் நதீம் கான் என்னிடம் கூறுகையில், இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள், கர்னல் யூனுஸ் வழக்கம் போல் ராணுவ சீருடை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த போது, தான் ஓய்வு பெற்றுவிட்டது நினைவுக்கு வந்து அவர் கண்களில் கண்ணீர் மல்கியது," என்றார்.

யூனுஸ் கானின் மருமகள் சமன் அலி கான் கூறுகையில், "நான் அவருடைய மகனை மணந்தேன். அவர் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டவர். ஒவ்வொரு பணிக்கும் அவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருந்தது. மாலையில் நடைப்பயிற்சி செல்வார். நல்ல ஆடைகளை அணிவதில் அவருக்கு விருப்பம் அதிகம்"என்கிறார்.

"அவர் இந்திய ஆடைகளை அணியும்போது, அவரது குர்தா பைஜாமா மற்றும் ஷெர்வானி மிகவும் நேர்த்தியாகத் தைக்கப்பட்டிருக்கும். மேற்கத்திய ஆடைகளை அணியும்போது, அதை முற்றிலும் பிரிட்டிஷ் பாணியில் அணிவார். குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் அவரது உணவு முறை மாறுபட்டதாக இருந்தது."

"குளிர்காலத்தில் சூடான சூப் மற்றும் காரமான புட்டு வகைகளை விரும்பினார், கோடையில் குளிர்ந்த சூப் மற்றும் சாலட்டை விரும்பினார். ஒரு போர்வீரராக இருந்தபோதிலும், அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய மனிதராக இருந்தார். வசதி குறைவானவர்கள் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவர் மிக உயர்ந்த ஒழுக்க குணம் கொண்ட மனிதர்."

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, யூனுஸ் கான் அலிகாரில் உள்ள அப்தாப் மன்சிலைத் தனது இல்லமாக மாற்றிக்கொண்டார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் கௌரவ நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். ஜனவரி 30, 1984 அன்று காலமானான அவர், அலிகாரில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது தம்பி சாஹிப்ஜாதா யாகூப் கான் பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். யாகூப் உருது கவிதைகளை, குறிப்பாக காலிப்பின் கவிதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருக்கு ஓவியம் வரைவதிலும் ஈடுபாடு இருந்தது.

"அவரது ஆடைகள் மிகவும் நேர்தியானவை. அவரது சூட்கள் மற்றும் ஷெர்வானிகள் கூட லண்டனின் புகழ்பெற்ற சவிலே ரோவில் தைக்கப்பட்டவை. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்ப்பதற்கான பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கையில் அவர் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார்" என்று முனிசா ஷம்சி குறிப்பிட்டுள்ளார்.

"1986-இல், ஜெனரல் ஜியா கார்கிலை கைப்பற்றும் திட்டம் குறித்துத் தனது வெளியுறவு அமைச்சரிடம் சொன்னபோது, அவர் அதை முற்றிலும் நிராகரித்தார். ஜியா அவரது ஆலோசனையை மதித்தார், அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது" என்று ஹமீத் மிர் பதிவு செய்துள்ளார்.

"சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெனாசிர் பூட்டோவும் கார்கில் மலைகளைக் கைப்பற்றுவதற்கான தனது ராணுவத் தளபதிகளின் ஆலோசனையைத் தனது அமைச்சரவைக் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார். இந்த முறையும் சாஹிப்ஜாதா அதை எதிர்த்தார், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பெனாசிர் பூட்டோவைச் சம்மதிக்க வைத்தார்."

"1999-இல், மூன்றாவது முறையாக, பாகிஸ்தான் ராணுவம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றது, இது பாகிஸ்தானுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதுடன் பல சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது."

சாஹிப்சாதா யாகூப் கானின் மரணம்

சாஹிப்ஜாதா யாகூப் கான் பாகிஸ்தானின் மிக நீண்ட காலம் வெளியுறவு அமைச்சராக பணிபுரிந்தவர். அவர் ஜியா-உல்-ஹக், பெனாசிர் பூட்டோ மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோரின் கீழ் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேறுவது இறுதி செய்யப்பட்டது.

அவரது கடைசி நாட்களில், நவாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு முறைசாரா ஆலோசகராகப் பணியாற்றினார்.

"ஒருமுறை நான் அவரிடம் நீங்கள் சுயசரிதை எழுத வேண்டும் என்று சொன்னபோது, எனது சாதனைகளையும் துயரங்களையும் ஒரு காட்சியாக்க நான் விரும்பவில்லை. இந்தியாவுக்கு சேவை செய்த எனது சகோதரரைக் குறிப்பிடாமல் என்னால் எனது கதையைச் சொல்ல முடியாது. நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட்டோம். அவர் தனது பணியைச் செய்தார், நான் என்னுடையதைச் செய்தேன் என்று அவர் பதில் அளித்தார்" என்று ஹமீத் மிர் எழுதியுள்ளார்.

தனது மூத்த சகோதரர் இறந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு, இளைய சகோதரர் ஜனவரி 26, 2016 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு