You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'2 அல்லது 3 வாரங்களில் இரானை விட்டு அமெரிக்கா வெளியேறும்' - டிரம்ப் திடீர் அறிவிப்பு
இரானை விட்டு 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்' அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் இரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பது மட்டுமே தனது "ஒரே குறிக்கோள்" என்றும், அந்த இலக்கு "இப்போது எட்டப்பட்டுவிட்டது" என்றும் அவர் கூறினார்.
"இரானில் எங்களது பணிகளை நாங்கள் இறுதி செய்து வருகிறோம்," என்று கூறிய அவர், அமெரிக்கா "அநேகமாக இரண்டு வாரங்களுக்குள் அல்லது பணிகளை முடிக்க இன்னும் சில நாட்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டு" இரானை விட்டு வெளியேறும் என்றும் கூறினார்.
மேலும், "அவர்களிடம் உள்ள அனைத்தையும் நாங்கள் முற்றிலும் ஒழிக்க விரும்புகிறோம், இருப்பினும் அதற்கு முன்பே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது," என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும், ஆனால் இரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும் "அதனால் எந்த வித்தியாசமும் ஏற்படப்போவதில்லை" என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிவாயு விலைகள் மற்றும் அவற்றைக் குறைப்பதற்கான அவரது திட்டம் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், "நான் செய்ய வேண்டியதெல்லாம் இரானில் இருந்து வெளியேறுவதுதான், அதை நாங்கள் மிக விரைவில் செய்யப்போகிறோம். நாங்கள் அங்கிருந்து மிக விரைவில் வெளியேறுவோம்" என்றார்.
'இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது'
இரானில் "ஆட்சி மாற்றம்" ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அவரைப் பொறுத்தவரை, இரானின் புதிய தலைவர்கள் முந்தைய தலைவர்களை விட "மிகக் குறைந்த தீவிரப்போக்குடையவர்கள்" மற்றும் "அதிக பகுத்தறிவுள்ளவர்கள்".
பிரான்ஸுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எண்ணெய் தேவைப்பட்டால், அவர்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்று அதைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்லலாம் என்றும், இதற்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், அமெரிக்கா 'எந்த தடையும் இன்றி' செயல்படுவதாகவும், 'அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன' என்றும் கூறினார்.
இரானிய ஆட்சியிடம் இப்போது எந்த விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அவர்கள் போரிடவில்லை. அவர்கள் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு கூட நடத்தவில்லை" என்று கூறிய டிரம்ப்,
இதற்குக் காரணம், "அவர்களின் ராணுவத் தளவாடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன" என்றும், அவர்களிடம் "பயன்படுத்த எதுவுமே மிஞ்சவில்லை" என்றும் விளக்கமளித்தார்.
இரானிடம் இனி கடற்படை அல்லது பயனுள்ள ராணுவ சக்தி இல்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.
"அவர்கள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தோற்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு சமரசத்திற்காகக் கெஞ்சுகிறார்கள்" என்று டிரம்ப் கூறினார்.
இரான் நிபந்தனை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இரானுக்கு "தேவையான மனவலிமை"உள்ளது. ஆனால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என, முன்னதாக இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறினார்.
இரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ- வின் படி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் பெசெஷ்கியன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பெசெஷ்கியனின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் இரான் மீது எந்தவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் இரானுக்கு வேண்டும்.
"நாங்கள் ஒருபோதும் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது போருக்குச் செல்லவோ முயன்றதில்லை," என்று கூறிய அவர், "சூழ்நிலையை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு, எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துவதே ஆகும்" என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல்
இதற்கிடையில், மத்திய கிழக்கில் இயங்கி வரும் 18 நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அவை குறிவைக்கப்படும் என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.
புரட்சிகர காவல்படையின் கூற்றுப்படி, அவர்களது எச்சரிக்கை புதன்கிழமை தெஹ்ரான் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்தது. இந்தத் தகவல் பல சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
இந்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு உதவுவதாகவும், இலக்குகளைக் கண்காணிக்க உதவுவதாகவும் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா மற்றும் என்விடியா போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர, சிஸ்கோ, இன்டெல், ஆரக்கிள், ஐபிஎம், ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
புரட்சிகர காவல்படை தனது அறிக்கையில், "ஊழியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக அலுவலகங்களை காலி செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்த 'பயங்கரவாத அமைப்புகளுக்கு' அருகில் வசிக்கும் மக்கள், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு அப்பால் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு