வளைகுடா நாடுகள் பிளவுகளை மறந்து இரானுக்கு எதிராக ஒன்றிணையுமா?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லூயிஸ் பருச்சோ
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நீண்ட காலமாக வளைகுடா நாடுகள் அமைதி மற்றும் லட்சியங்களின் சோலைகளாகக் கருதப்படுகின்றன. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் முதலீட்டாளர்களையும், முன்னணி நிறுவனங்களையும், திறமையான தொழிலாளர்களையும் பெருமளவில் ஈர்த்துள்ளன. அங்குள்ள விமான நிலையங்கள் உலகளாவிய மையங்களாகவும், நகரங்கள் நிதி மற்றும் சுற்றுலா மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் இந்தப் பிம்பத்தை உலுக்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்கியுள்ளன.
இந்த நாடுகள் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க முயன்று வருகின்றன. உதாரணமாக, கத்தார் அரசாங்கம் 'வீட்டிலிருந்து பணி' முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, பல்கலைக்கழக வகுப்பறைகளை மீண்டும் திறந்துள்ளது. ஆனால், வளைகுடா நாடுகள் அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் கொண்டவை என்றாலும், இந்தப் போர் ஒரு மூலோபாய மாற்றத்தை கட்டாயமாக்கியுள்ளதாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாஷிங்டனைச் சேர்ந்த 'மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிடியூட்' ஆய்வுக் குழுவின் அலெக்ஸ் வதன்கா, "இரானிடமிருந்து வரும் தாக்குதல்களை உங்களால் நிறுத்த முடியாது, ஏனெனில் அது புவியியல் ரீதியாக மிக அருகில் உள்ளது. இந்த நாடுகள் ஒரு போரின் இடுக்கில் சிக்கிக்கொண்டன. தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு போரில் அவை முன்வரிசை நாடுகளாக மாறிவிட்டன, அதற்காக அவை மிகப்பெரிய பொருளாதார விலையைக் கொடுத்து வருகின்றன" என்கிறார்.
"அவர்கள் தங்கள் பணம் முழுவதையும் பாதுகாப்பிற்காகச் செலவழித்தாலும், நாம் பார்ப்பது என்னவென்றால், இரானுக்கு இந்த நாடுகள் மிகவும் எளிதான இலக்குகள் - இவர்களின் பில்லியன் டாலர் முதலீடுகள், சில ஆயிரம் டாலர் மதிப்புள்ள இரானிய ட்ரோன்களால் ஆபத்தில் உள்ளன" என்கிறார் அவர்.
இந்தச் சமநிலையின்மை, காப்பீட்டுச் செலவுகளை உயர்த்துகிறது, தளவாடங்களை சிக்கலாக்குகிறது மற்றும் நிறுவனங்கள் வளைகுடா பகுதியில் தங்கள் முதலீடுகளை வைத்திருப்பதைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தூண்டும் என்றும் வதன்கா கூறுகிறார்.
சுயாட்சியைப் பாதுகாத்தல்
வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஒரு கடினமான பாதையில் பயணிக்கும் நிலையில், அதன் உடனடி விளைவு அமெரிக்காவுடன் மீண்டும் பாதுகாப்பு ரீதியாக இணைவதாகும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 'எமிரேட்ஸ் பாலிசி சென்டர்' தலைவர் டாக்டர் எப்தேசம் அல் கடாஃபி தெரிவிக்கிறார்.
"உடனடி பாதுகாப்புத் தேவைகள் காரணமாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமாகவும் - மறைமுகமாக, செயல்பாட்டு ரீதியாக இஸ்ரேலுடனும் நெருக்கமாகவும் - தள்ளப்படுகின்றன" என்கிறார். ஆனால், இந்த ஒத்துழைப்பு நடைமுறைச் சார்ந்தது , கொள்கை சார்ந்தது அல்ல என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
"போருக்குள் ஆழமாக இழுக்கப்படுவது, முதன்மை இலக்குகளாக மாறுவது மற்றும் தங்களின் மூலோபாய சுயாட்சியை இழப்பது குறித்து அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
பாதுகாப்பு உறவுகள் நெருக்கமாவதற்குச் சில எல்லைகள் உண்டு என்று வதன்கா எச்சரிக்கிறார் - குறிப்பாக வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா காட்டும் விருப்பத்தைப் பொறுத்தவரை. மோதல் ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே வளைகுடா அரசாங்கங்கள் போர் தீவிரமடைவதைப் பற்றி வாஷிங்டனை எச்சரித்தன, ஆனால் அவை ஏமாற்றத்தையே உணர்ந்தன.
"டிரம்ப், நெதன்யாகுவுக்காகவே அதிகப் போர்களைச் செய்தார் மற்றும் வளைகுடா நாடுகளைப் புறக்கணித்தார்," என்று அவர் கூறுகிறார். "இஸ்ரேல் நடத்தப்படும் விதத்தில் தாங்கள் ஒருபோதும் நடத்தப்பட மாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியும்."
நீண்ட கால அடிப்படையில் வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க வாஷிங்டன் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலும் கட்டுப்படுத்துகிறது என்று அவர் வாதிடுகிறார்.
"வளைகுடா பிராந்தியத்தில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கப் பொது மக்கள் மீண்டும் அதிக நிதியை ஒதுக்க விரும்புவார்களா? அதை மக்களிடம் எப்படிச் சொல்வீர்கள்?" என கேள்வி எழுப்பும் அவர், "இது 'அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்' (MAGA- Make America Great Again) இயக்கத்தின் முக்கிய வாதத்திற்கு எதிரானது. உலகம் முழுவதிலும் இது போன்ற தலையீடுகள் அமெரிக்காவை உள்ளிருந்து சீரழிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்" என்கிறார்.
தற்காப்புத் தடுப்பு மற்றும் ராஜதந்திரம்
பட மூலாதாரம், Getty Images
இரான் தனது பங்கிற்கு, வளைகுடா நாடுகள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க அழுத்தம் கொடுத்து வருவதாக வதன்கா கூறுகிறார்.
"இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை வளைகுடா நாடுகள் எதுவும் கண்டிக்கவில்லை என்று இரானிய வெளியுறவு அமைச்சர் புகார் தெரிவித்தார்.' இந்தச் சண்டையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்று இரான் அவர்களுக்குச் சொல்கிறது."
"வளைகுடா அரசாங்கங்கள் 'இரான் மீது கடும் கோபத்தில்' இருந்தாலும், அவை முதன்மை இலக்குகளாக மாறுவதைத் தவிர்க்க விரும்புகின்றன. அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய நடவடிக்கைகளில் வெளிப்படையாகப் பங்கேற்பதைத் தவிர்த்து, அதே நேரத்தில் ஒரு தற்காப்புத் தடுப்பை உருவாக்குவதே அவர்களின் உத்தி" என்று அவர் கூறுகிறார்.
"இரான், இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதையே கடினமாக்கிவிட முடியும். மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதால், உங்கள் தலைமுறை முழுவதுமே ஆபத்தில் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
இதற்கான நீண்ட கால தீர்வு ராஜதந்திரத்தில் தான் உள்ளது என்கிறார் குவைத் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும், பிரிட்டனின் 'சாத்தம் ஹவுஸ்' ஆய்வுக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் பாதர் மூசா அல் சைஃப்.
"நாம் நமது அண்டை நாடுகளுடன் உடன்பாட்டிற்கு வர வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "நாம் இரானுடன் நேரடியாகப் பேச வேண்டும். இந்தப் பகுதியை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து ஒரு தெளிவான திட்டத்தை நாம் கொண்டு வர வேண்டும்."
பொருளாதார மீட்சி தொடர்பான சோதனை
பட மூலாதாரம், Getty Images
கடந்த தசாப்தத்தில் எண்ணெய் சார்ந்த பொருளாதாரங்களில் இருந்து உலகளாவிய சேவை மையங்களாக வளைகுடா நாடுகள் மாறியது ஒரு வியக்கத்தக்க கதையாகும். போர் இந்த வளர்ச்சியைத் தலைகீழாக மாற்றவில்லை என்றாலும், அதன் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அல் கடாஃபி, "வளைகுடா நாடுகள் முக்கிய மையங்களாகத் தொடரும் - ஆனால் அதிக செலவுகள், காப்பீடு மற்றும் ஆபத்து போன்ற நிபந்தனைகளுடன்" என்று எதிர்பார்க்கிறார்.
இந்த மாற்றமானது தனியார் நிறுவனங்களை விட அரசாங்கங்களையே அதிகம் சார்ந்திருக்கும் என்றும், வணிகங்கள் பல இடங்களில் இருந்து செயல்படுவது போன்ற மாற்று உத்திகளைக் கையாளும் என்றும் அவர் வாதிடுகிறார்.
காலப்போக்கில், இந்த நாடுகள் அமெரிக்காவையே அதிகம் சார்ந்திருப்பதைத் தவிர்க்க, சீனா மற்றும் பிராந்திய கூட்டாளர்களுடன் மீண்டும் தொடர்புகொண்டு தங்கள் வணிகத்தை விரிவாக்கும் என்று அல் கடாஃபி நம்புகிறார்.
பிராந்தியத்தின் நிதி வலிமை இந்த பாதிப்பைத் தாங்கும் என்று அல் சைஃப் ஒப்புக்கொள்கிறார், இருப்பினும் இதற்காகச் சில விலைகளைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
"இது எங்களது தேசிய மாற்றத் திட்டத்தின் முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். கத்தாரில் உள்ள 'ராஸ் லஃபான்' எரிவாயு ஆலை மீதான ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய "சில ஆண்டுகள்" ஆகும் என்றும், அதுவரை ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் விளக்குகிறார்.
"இது ஒரு சிறிய உதாரணம். ஆனால் இதைத் தாங்கும் நிதித் திறன் எங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களது சில திட்டங்களைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது முதலீடுகளை முன்னுரிமைப்படுத்தவோ இது தேவைப்படலாம்." என்கிறார் கடாஃபி.
இருப்பினும், "அரசியல் அமைப்பு, நிதி பலம், குறைவான மக்கள் தொகை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக, எங்களால் மீண்டும் எழ முடியும்" என்று அவர் நம்புகிறார்.
"போரிடும் தரப்புகளுக்கு இடையில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதியதல்ல" என்று கூறும் அல் சைஃப், 1990-களின் தொடக்கத்தில் குவைத் மீது இராக் படையெடுத்ததையும், அதன் விளைவாக ஏற்பட்ட வளைகுடாப் போரையும் நினைவு கூர்கிறார். "2000-களின் தொடக்கத்தில் நாங்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டோம். அந்தச் சவாலையும் நாங்கள் கையாண்டோம்."
"2010, 2011-களில் அரபுப் போராட்டங்களை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், அவையும் வளைகுடா பிராந்தியத்தில் நடந்தன, அதிலிருந்தும் நாங்கள் சிறப்பாக வெளியே வந்தோம்," என்று அவர் கூறுகிறார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
ஒருங்கிணைந்த பாதுகாப்பை நோக்கிய பயணம்
இந்த மோதலின் ஒரு நீடித்த விளைவாக, வளைகுடா நாடுகள் மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பாதுகாப்பு நிலையை எடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்கூட்டியே எச்சரிக்கும் நெட்வொர்க்குகள், ட்ரோன்கள் மற்றும் சைபர் திறன்களைப் பயன்படுத்தி அடுக்கு ஏவுகணைப் பாதுகாப்பில் பெரும் முதலீடுகள் செய்யப்படும் என்று அல் கடாஃபி எதிர்பார்க்கிறார்.
ஒருங்கிணைப்பு இன்னும் ஆழமாக இருக்க வேண்டும் என்று அல் சைஃப் வாதிடுகிறார். "நாங்கள் எங்கள் கொள்முதல்களை ஒருங்கிணைக்க வேண்டும், வளைகுடாவில் ஒரு மையப்படுத்தப்பட்ட கொள்முதல் அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், உள்ளூர் பாதுகாப்பு உற்பத்தியில் கவனம் செலுத்துவது நமது அதிகாரத்தை அதிகரிக்கும்," என்கிறார்.
இருந்தபோதிலும், நாடுகளுக்கு இடையேயான போட்டி இந்த லட்சியத்தைச் சிக்கலாக்குகிறது.
வளைகுடா நாடுகள் "இரானுடன் எந்த அளவுக்குப் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு தங்களுக்குள்ளும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள்" என்று வதன்கா குறிப்பிடுகிறார். இது பாதுகாப்பு ஒருங்கிணைப்பை அரசியல் ரீதியாக ஒரு நுட்பமான விஷயமாக மாற்றுகிறது.
'இரான் மட்டுமே தடை அல்ல'
பட மூலாதாரம், EPA
வளைகுடாவின் எதிர்காலம் இரானைச் சார்ந்து மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளுக்கு இடையிலான பதற்றங்கள் உள்ளிட்ட பரந்த பிராந்திய மாற்றங்களையும் சார்ந்து இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
"பிராந்திய ஒழுங்கிற்கு இரான் மட்டுமே தடையாக இருக்கிறது என்று கருதுவது தவறு," என்று வதன்கா எச்சரிக்கிறார். "இந்த நாடுகளுக்கு ஒற்றுமையை விட பிளவுகளின் வரலாறே அதிகம் உள்ளது."
இருப்பினும், வளைகுடா தொடர்ந்து ஒரு முக்கிய உலகளாவிய மையமாக இருக்கும், ஆனால் அது அதிக ராணுவ மயமாக்கப்பட்ட மற்றும் ஆபத்துகள் நிறைந்த சூழலில் இயங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"அவர்கள் பாதையை விட்டு விலக மாட்டார்கள், ஆனால் தங்களை மாற்றிக் கொள்வார்கள்" என்கிறார் அல் கடாஃபி. "வளைகுடா அதிக மீள்திறன் கொண்டதாக மாறும் - ஆனால் காலப்போக்கில் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாவதோடு ராணுவ மயமாக்கப்பட்டும் இருக்கும்," என்று அவர் முடிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை