You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பா. ரஞ்சித், சேரன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை விமர்சிப்பது ஏன்?
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த அதிமுக ஆட்சியிலும் பல ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையிலும் விருதுகள் குறித்த அறிவிப்பு வராமல் இருந்தது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு, அதாவது 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரைக்குமான விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதேபோல், சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
திரைப்படம், சின்னத்திரை சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டன
பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தமிழ்நாடு அரசின் விருது பெற உள்ளவர்கள், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
அதேசமயம், இயக்குநர்-தயாரிப்பாளர் பா.ரஞ்சித் விருது அறிவிப்பு வந்த மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், தான் இயக்கிய 'மிக மிக அவசரம்' படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்தார்.
சேரன் கூறியது என்ன?
இயக்குநரும், நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பதிவில், ''பெண்களுக்கு இலவச பாஸ், திருமணத்திற்கு அரசு உதவி இதெல்லாம் செய்கிறது அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்ககைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த திருமணம் திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.
நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
"அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது'' என சேரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகை லட்சுமிப்ரியா, "'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்', 'மண்டேலா' திரைப்படங்கள் தேசிய விருதுகளை வென்றன. ஆனால் மாநில விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள் '' என தெரிவித்துள்ளார்.
இந்த படத்துக்கு விருதா?
நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டக்காரி' என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர், நடிகர், நடிகைகள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அதற்கு காரணம், சண்டக்காரி படம் மலையாளத்தில் உருவான, 'மை பாஸ்' என்கிற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.
சண்டக்காரி இன்னும் திரையரங்குகளிலோ, ஓடிடியிலோ வெளியாகவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி அந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரங்கள் ஆதங்கம்
அதுமட்டுமல்லாமல், கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்
"ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன." என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அங்கீகாரத்தை அளிக்கும் அளவுக்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எழுவதாக மோனிகா தெரிவித்துள்ளார்.
மற்றொரு குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த், "இந்த விருதில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காவது கிடைக்கும் என்று நம்பினேன். அது கிடைக்கவில்லை. மை டியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. தேர்வுக்குழுவினர் இம்மாதிரி படங்களை பார்க்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே?" எனக் கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி பிபிசியிடம் கூறுகையில், "திரைப்பட விருது குழுவின் நடுவர் தேர்வில் தவறு இருப்பதாக கருதுகிறேன். இனிமேல் விருது வழங்கும் போது இப்படி மொத்தமாக பல ஆண்டுகள் சேர்த்து வழங்காமல் ஒவ்வொரு ஆண்டுக்கும் உடனே வழங்க வேண்டும்" என்றார்.
"விருது பெறுபவர்களை உரிய முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். விருதுகள் விஷயத்தில் வெளிப்பட தன்மை தேவை. பெண் போலீசாரின் உடல் மன வலியை சொல்லும் 'மிக மிக அவசரம்' படத்துக்கு தமிழக அரசு விருது கிடைக்காதது வருத்தமே" என்கிறார் அவர்.
விருது அறிவிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகரிடம் பிபிசி சார்பில் பேசினோம்.
"விருது கிடைத்தவர்கள் சந்தோசப்படுவதும். விருது கிடைக்காதவர்கள் வருத்தப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். இனி விருது கமிட்டியில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். எனக்கு சாதனையாளர் விருது கிடைத்து இருக்கிறது." என்றார்.
தேர்வு குழு கூறுவது என்ன?
சின்னத்திரை விருதுகள் தேர்வு குழு கமிட்டியில் இருந்த இயக்குநர் மங்கை அரிராஜன் பிபிசியிடம் கூறுகையில், " சினிமா சின்னத்திரை விருதுகளை தேர்ந்தெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஏழு பேர் உறுப்பினர்கள். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் வெளியான படங்களில் சிறந்த படங்களை முதல் சுற்றில் தேர்வு செய்யும். பின்னர் அடுத்தகட்ட தேர்வுக்கு பின் எது சிறந்த படம், சிறந்த நடிகர் என்பதை தலைவரான நீதிபதி முடிவு செய்வார். இதில் எந்த பாகுபாடும் கிடையாது எந்த சிபாரிசும் கிடையாது தேர்வுக்குழு செயல்பாடுகள் நம்பிக்கையானவை." என்றார்.
சில காரணங்கள், சில ஓட்டுகள் வித்தியாசத்தில் சில படங்கள் தேர்வாகியிருக்கலாம் என்றும் சில நல்ல படங்கள் விருதை தவறவிட்டு இருக்கலாம் என்றும் இது எல்லா போட்டிகளிலும் எல்லா விருது நிகழ்வுகளிலும் நடப்பது தான் என்றார் மங்கை அரிராஜன்.
விருது கமிட்டியில் இருந்த இளையபாரதி பிபிசி தமிழிடம், " விண்ணப்பித்தால் மட்டுமே விருது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். பலர் விண்ணப்பிக்காமல் விருது ஏன் வரவில்லை என்கிறார்கள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மேற்கு தொடர்ச்சி மலை படங்கள் அப்படித்தான். நூற்றுக்கணக்கான படங்கள் வந்தன. இவ்வளவு படம் பார்த்து அரசியல் பாகுபாடுகள் இன்றி விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சில படங்கள் நன்றாக இருந்தன. அதனால் சில முக்கியமான படங்கள் தவறிவிட்டன. இது அனைத்து விருது நிகழ்விலும் நடப்பதே. இதில் பாகுபாடு இல்லை" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு