ரீல்ஸ் மூலம் முன்னாள் மனைவியை தேடி கொலை - வேறு திருமணம் செய்து வாழ்ந்தவரை பின் தொடர்ந்தது எப்படி?

    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி நிருபர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)

ஹைதராபாத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது முன்னாள் மனைவி சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரீல்ஸ்-ஐ வைத்து அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் பிப்ரவரி 18 -ஆம் தேதி மதியம் ஹைதராபாத்தின் வனஸ்தலிபுரத்தில் நடந்ததாக காவல்துறை பிபிசியிடம் தெரிவித்தது.

வனஸ்தலிபுரம் காவல்துறை அளித்த தகவலின்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தேவரகொண்ட மகேஷ், பெத்தபள்ளி மாவட்டம் மந்தானி அருகே உள்ள வில்லோசவரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது துர்காயன்ஜால் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர் சுனிதா, தெலங்கானா எல்லையை ஒட்டிய மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

'பழிவாங்கக் கொலை'

சுனிதாவின் பாட்டி வில்லோசவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதன் மூலமாக சுனிதா மற்றும் மகேஷ் பழகத் தொடங்கியுள்ளனர். நாளடைவில் அவர்களின் நட்பு காதலாக மாற, 2022-இல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு மகேஷ் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கிறார்.

ஆனால் சுனிதாவிற்கு விசா தாமதமானது. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் சுனிதாவும் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். இந்தச் சண்டைகள் சட்ட வழக்குகளாகவும் விவாகரத்திலும் முடிந்திருக்கிறது.

மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தினர் எனக் குற்றம் சுமத்தும் சுனிதா சந்திரபூரில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனால் தனது வேலை போனதாகவும், குடும்பத்தினர் மனரீதியான அவஸ்தைக்கு உள்ளானதாகவும் கூறி மகேஷ் மிகவும் கோபமடைந்திருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.

"மகேஷ் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்தார். இந்த வழக்குகளால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இந்த வழக்குகளும் அதனால் ஏற்பட்ட பிரச்னைகளும் தனக்கு சோர்வை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்" என காவல்துறை பிபிசியிடம் தெரிவித்தது.

மகேஷின் தாயார் இறந்துவிட்டார். அதற்கு சுனிதாவே காரணம் என்று கருதி, எப்படியாவது அவரைப் பழிவாங்க வேண்டும் என்று மகேஷ் திட்டமிட்டதாக வனஸ்தலிபுரம் காவல்துறை கூறியது.

"இது ஒரு பழிவாங்கும் கொலை" என வனஸ்தலிபுரம் ஆய்வாளர் மகேஷ் பிபிசியிடம் கூறினார்.

இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவிய சமூக வலைத்தளம்:

குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் சமூக வலைதளத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் சுனிதாவின் முகவரியை கண்டுபிடித்தார்.

மகேஷும் சுனிதாவும் 2024-இல் விவாகரத்து பெற்றனர். சுனிதா 2025-இல் வேறொருவரை திருமணம் செய்துகொண்டார்.

தாயாரின் மரணத்தால் ஆத்திரமடைந்த மகேஷ், சுனிதா எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முயன்றுள்ளார். அதற்காக ஹைதராபாத் சென்ற மகேஷ் அங்கு ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார். ஆனால் சுனிதா கணவனுடன் தங்கியிருக்கும் இருப்பிடம் குறித்து மகேஷுக்குத் தெரியவில்லை.

அப்போதுதான் சுனிதாவின் சமூக வலைதள கணக்குகள் மகேஷுக்கு உதவியாக அமைந்தன. சுனிதாவிற்கு தனது காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இருந்துள்ளது.

"சுனிதா கோவிலுக்குச் செல்வதை ரீலாக பதிவிட்டால், மகேஷ் அதை வைத்து அந்த பகுதியில் தேடுவார்" என காவல்துறை கூறியது.

"சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் சுனிதாவின் முகவரியை கண்டுபிடித்தார். பிறகு அந்த வீட்டின் அருகே ஒளிந்திருந்து சில நாட்கள் சுனிதாவின் நடமாட்டத்தையும் அங்குள்ள சூழ்நிலையையும் கவனித்த பிறகு, பிப்ரவரி 18 அன்று கொலை செய்திருக்கின்றனர்", எனத் காவல் ஆய்வாளர் மகேஷ் தெரிவித்தார்.

"பிப்ரவரி 18 அன்று மதியம் 12 மணிக்கு என் அம்மா என்னை அழைத்தார். நான் வீட்டிற்குச் சென்றபோது என் மனைவி குளியலறையில் இரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் கிடப்பதைப் பார்த்தேன். காலை 11:30 மணியளவில் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவை பூட்டிக்கொண்டு என் மனைவியை கொலை செய்துவிட்டான்," என சுனிதாவின் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

தீக்குளிக்க முயற்சி

சம்பவம் குறித்து விவரித்த ஆய்வாளர் மகேஷ், "காவல்துறையினர் வரும்வரை அங்கேயே இருந்த மகேஷ், யாராவது அணுகினால் தீ வைத்துக்கொள்வதாக கூறி தன்மேல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு மிரட்டியுள்ளார். அவரைப் பேசி சமாதானப்படுத்திய கால்துறை பின்னர் கைது செய்துள்ளது."

"குற்றவாளியின் பையில் கத்திகளுடன் மின்சார ரம்பமும் கண்டுபிடிக்கப்பட்டது. சுனிதா கதவை பூட்டியிருந்தால் அதை வெட்டி திறக்க ரம்பத்தை கொண்டு வந்திருந்தார்." எனத் தெரிவித்தார்.

அதிகப்படியான இரத்த இழப்பால் சுனிதா உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. குற்றவாளியிடமிருந்து ஒரு செல்போன், ஒரு ஸ்விஃப்ட் டிசையர் கார் மற்றும் ஆயுதங்கள் அடங்கிய பை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மகேஷின் குடும்பத்தினரையும் வழக்கறிஞரையும் தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது. ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் பதிலளித்தவுடன் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

முக்கிய குறிப்பு

நீங்கள் மன அழுத்தத்தை அனுபவித்தால், இந்திய அரசின் ஜீவன்சதி உதவி எண்ணை 18002333330 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் பேச வேண்டும்.

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு