கார்க் தீவு: இரானின் இந்த தீவை அமெரிக்கா குறிவைப்பது ஏன்?

பட மூலாதாரம், Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2024/Getty

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் கார்க் தீவு (Kharg Island) மீது மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சிறிய தீவு இரான் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது, அங்கு மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்கள் உள்ளன.

பொருளாதார ரீதியாக கார்க் தீவு இரானின் வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது.

மார்ச் 13 அன்று, அமெரிக்கப் படைகள் கார்க் தீவு மீது குண்டுவீச்சு நடத்தியதாகச் செய்திகள் வந்தன. அந்த நேரத்தில், அங்கிருந்த இராணுவத் தளங்கள் "முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன" என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார், இருப்பினும் அமெரிக்கப் படைகள் கார்க் தீவின் எண்ணெய் தளங்களை இலக்கு வைப்பதைத் தவிர்த்தன.

இந்த விவகாரம் குறித்து அறிந்த நான்கு நபர்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி நிறுவனமான 'ஆக்ஸ்யோஸ்' வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரான் மீது அழுத்தம் கொடுப்பதற்காக கார்க் தீவைக் கைப்பற்ற அல்லது அதை முற்றுகையிட டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. ஹோர்மூஸ் நீரிணையை இரான் மீண்டும் திறக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

ஹோர்மூஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழிகளில் ஒன்றாகும், இது இரான் கடற்கரையின் தெற்கே அமைந்துள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், "அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் கார்க் தீவைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க முடியும்" என்றார்.

டொனால்ட் டிரம்ப் எங்கும் வீரர்களை அனுப்பும் எண்ணத்தில் இல்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார், ஆனால் "முப்படைகளின் தளபதி (Commander-in-Chief) என்ற முறையில் அவரிடம் அனைத்து தேர்வுகளும் திறந்தே உள்ளன."

இரான் அல்லது வேறு ஏதேனும் தரப்பு ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதில் குறுக்கிட்டால், கார்க் தீவின் எண்ணெய் தளங்களை இலக்கு வைக்க வேண்டாம் என்ற தனது முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாக டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

இதற்குப் பிறகு, ஹோர்மூஸ் வழியாகச் செல்ல முயற்சிக்கும் சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.

'ஸ்கூல் ஆஃப் வார்' பாட்காஸ்ட் தொகுப்பாளரும், சிபிஎஸ்-ன் தேசிய பாதுகாப்பு ஆய்வாளருமான ஆரோன் மெக்லீன் கூறுகையில், கார்க் தீவைக் கைப்பற்றி, ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்காக இரான் மீது "அழுத்தம் கொடுக்க" அமெரிக்கா இதைப் பயன்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார்.

கார்க் தீவின் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் "உடனடியாக அழிக்கப்படும்" என்று இரானின் படை கூறியுள்ளது.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

அமெரிக்கா கார்க் தீவைக் கைப்பற்ற முயற்சிக்குமா?

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty

சில காலமாக, அமெரிக்க இராணுவம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் கார்க் தீவைக் கைப்பற்ற முயற்சிக்குமா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

கார்க் தீவைக் கைப்பற்றுவது இரானின் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவது மட்டுமல்லாமல், அதன் முக்கிய நிலப்பரப்பில் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு தளமாகவும் அமையலாம்.

இரானில் தரைப்படையை நிலைநிறுத்த பென்டகன் அதிகாரிகள் விரிவான தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க ஊடகப் பங்காளியான சிபிஎஸ் நியூஸ் நிறுவனத்திற்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஊகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், சுமார் 2,500 மரைன் வீரர்கள் மற்றும் போர்க்கப்பல்களை அந்தப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகிய இரண்டும் வீரர்களின் குறிப்பிட்ட நிலைநிறுத்தல் அல்லது அத்தகைய சாத்தியமான திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. இருப்பினும், இந்த வாய்ப்புகள் திறந்தே உள்ளன என்பது மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கார்க் தீவைக் கைப்பற்றுவது இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பொருளாதார வாழ்வாதாரத்தைத் துண்டிக்கும், இது அவர்களின் போர் புரியும் திறனைப் பாதிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் மிக்கி கே கூறுகிறார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

மெக்லீனின் கூற்றுப்படி, தீவைக் கைப்பற்றும் அமெரிக்க நடவடிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும், ஆனால் சவாலானதாக இருக்கும். கடற்படைக் கப்பல்கள் மூலமாகவோ அல்லது வான்வழி நடவடிக்கை மூலமாகவோ அமெரிக்க தரைப்படையினர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

புதன்கிழமை அன்று, இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், எந்தவொரு தாக்குதலுக்கும் "தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத தாக்குதல்கள்" மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். அமெரிக்க நடவடிக்கைக்கு உதவும் மத்திய கிழக்கு நாடுகளின் "முக்கிய தளங்கள்" இந்தத் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்படும்.

முன்னதாக, தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டால் செங்கடலில் உள்ள கப்பல்கள் இலக்கு வைக்கப்படும் என்று இரான் இராணுவ அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சிஎன்என் செய்தியின்படி, சமீபத்திய வாரங்களில் இரான் கார்க் தீவில் தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது, இதில் கூடுதல் இராணுவப் படைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இரான் கார்க் தீவுக்குத் தோளில் வைத்து ஏவக்கூடிய மற்றும் தரையிலிருந்து வான்நோக்கிப் பாயும் ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என்றும், அதன் அருகிலுள்ள கடல் பகுதிகளில் மனித எதிர்ப்பு மற்றும் கவச எதிர்ப்பு கண்ணிவெடிகளை வைத்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரானுக்குக் கார்க் தீவு ஏன் முக்கியமானது?

கார்க் தீவு இரான் கடற்கரையிலிருந்து வெறும் 15 கடல் மைல் (24 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஒரு சிறிய பாறைத் தீவாகும்.

சிறிய அளவில் இருந்தாலும், இது இரானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மிக முக்கியமான பகுதியாகும்.

வளைகுடாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய ஆனால் முக்கியமான தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இரானிய பொருளாதாரத்தின் முக்கிய நரம்பைத் தாக்குவது போன்றதாகும்.

இரானின் கச்சா எண்ணெயில் 90 சதவீதம் இந்தத் தீவில் உள்ள முனையத்திலிருந்தே (Terminal) வருகிறது. இந்த எண்ணெய் முக்கிய நிலப்பகுதியிலிருந்து குழாய்கள் (Pipelines) மூலம் கொண்டு வரப்படுகிறது.

இந்தக் குழாய்களை இலக்கு வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை டொனால்ட் டிரம்ப் குறிப்பாகக் குறிப்பிட்டுள்ளார், ஆனால் இரானின் பொருளாதாரத்திற்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக இதுவரை அதைத் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

மார்ச் 16 அன்று டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "ஐந்து நிமிட அவகாசத்தில் எங்களால் இதைச் செய்ய முடியும், அது அழிந்துவிடும்" என்றார்.

அவர் மேலும் "நான் சொன்னால் போதும், குழாய்களும் முடிந்துவிடும். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்க நீண்ட காலம் எடுக்கும்," என்று கூறினார்.

கார்க் தீவின் இறங்குதுறைகளில் 85 மில்லியன் கேலன் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய டாங்கர் கப்பல்கள் வந்து எண்ணெய் ஏற்ற முடியும். இதன் கடற்கரை ஆழமான நீர்நிலைக்கு அருகில் உள்ளது, இது முக்கிய நிலப்பரப்பின் ஆழமற்ற கடற்கரையிலிருந்து மாறுபட்டது.

இங்கு எண்ணெய் ஏற்றப்பட்ட பிறகு, அந்த டாங்கர்கள் வளைகுடா வழியாகத் திரும்பி ஹோர்மூஸ் நீரிணை வழியாக வெளியேறுகின்றன. அங்கிருந்து அவை இரானிய எண்ணெயின் முக்கிய வாடிக்கையாளரான சீனாவுக்குச் செல்கின்றன.

இரானிய எண்ணெய் ஏற்றுமதியின் மையமாக இருப்பதால், இந்தத் தீவு இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாகும்.

மார்ச் 13 தாக்குதல் பற்றி அமெரிக்கா மற்றும் இரான் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Ali Mohammadi/Bloomberg via Getty

மார்ச் 13 அன்று டொனால்ட் டிரம்ப் கூறுகையில், அமெரிக்க மத்திய தலைமை "மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சுகளில் ஒன்றை நடத்தியது மற்றும் இரானின் மிக முக்கியமான இடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு இராணுவ இலக்கையும் முற்றிலும் அழித்தது" என்றார்.

தீவின் எண்ணெய் தளங்களை அழிக்காமல் இருப்பதைக் "கண்ணியம்" காரணமாகத் தான் தேர்ந்தெடுத்ததாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.

கார்க் தீவில் உள்ள 90-க்கும் மேற்பட்ட இரானிய இராணுவத் தளங்களை அமெரிக்க இராணுவம் இலக்கு வைத்ததாகவும், அதே நேரத்தில் எண்ணெய் தொடர்பான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் சென்காம் தெரிவித்தது.

கடற்படை கண்ணிவெடி சேமிப்பு, ஏவுகணை சேமிப்பு பதுங்கு குழிகள் மற்றும் பல இராணுவத் தளங்களை அழித்ததாகச் சென்காம் கூறியது.

தீவின் எண்ணெய் கட்டமைப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்கத் தாக்குதல்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு கடற்படைத் தளம், ஒரு விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஹெலிகாப்டர் நிறுத்துமிடம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டதாக இரானின் அரசு செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு இரான் புஷெஹ்ர் மாகாண ஆளுநரின் அரசியல் துணைத் தலைவர் எஹ்சான் ஜஹானியன் கூறுகையில், கார்க்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் செயல்முறை "முழுமையாகத் தொடர்கிறது" என்றும் "எந்தத் தடையும் இன்றி நடந்து வருகிறது" என்றும் கூறினார்.

தாக்குதல்களுக்குப் பிறகு, தனது எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் "உடனடியாக அழிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும்" என்று அந்த நாட்டு அரசுப் படை எச்சரித்தது.

அமெரிக்கா கார்க் தீவின் எண்ணெய் தளங்களை ஏன் இலக்கு வைக்கவில்லை?

கார்க் தீவின் உள்கட்டமைப்பை அழிக்கும் இராணுவ நடவடிக்கை இரான் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

இது மோதலைப் பெருமளவில் அதிகரிக்கும்.

இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகள் இன்னும் வேகமாக உயரக்கூடும் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்க இரானைத் தூண்டக்கூடும்.

போர் தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பிறகும், இரான் குறைந்த செலவில் பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் ஏவும் திறனைக் கொண்டுள்ளது. இவற்றை வளைகுடா அரபு நாடுகள் மற்றும் கடல் கப்பல்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.

இரான் தனது தாக்குதல்களின் எல்லையை விரிவுபடுத்தக்கூடும் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்குக் குடிநீர் வழங்கும் உப்புநீரை நன்னீராக்கும் ஆலைகளுடன் தொடர்புடைய முக்கியமான உள்கட்டமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு