ஆர்டெமிஸ்-2: நிலவுக்கு செல்லும் நாடுகள் அதனை சொந்தம் கொண்டாட முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெபெக்கா மொரெல்
- பதவி, பிபிசி அறிவியல் ஆசிரியர்
- எழுதியவர், ஆலிசன் ஃபிரான்சிஸ்
- பதவி, பிபிசி மூத்த அறிவியல் செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது.
இந்த விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் நிலவைச் சுற்றி வந்து பூமிக்குத் திரும்புவார்கள். மனிதர்களை மீண்டும் நிலவில் தரையிறக்குவது, பிற்காலத்தில் அங்கு ஒரு தளத்தை அமைப்பது ஆகிய அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராவதற்கு, இந்தப் பயணம் விஞ்ஞானிகளுக்கு உதவும்.
இந்தப் பயணம், நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் எனப்படும் ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் பல ஆண்டுகால கடின உழைப்பின் விளைவாக இந்த நிலையை அடைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர், மேலும் இதற்காக இதுவரை சுமார் 93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதுவொன்றும் புதிய விஷயமல்ல என்று சிலர் கருதுகின்றனர். "நாம் ஏற்கெனவே அங்கு சென்றுவிட்டோம், அதைச் சாதித்துக் காட்டிவிட்டோம்" என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா தனது 'அப்பல்லோ திட்டம்' வாயிலாக ஏற்கெனவே விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது. அந்தக் காலகட்டத்தில், மனிதர்கள் ஆறு முறை நிலவில் தரையிறங்கினர்.
அந்தப் பயணங்களுக்குப் பிறகு, நிலா முழுமையாக ஆராயப்பட்டு விட்டதாகவும் அங்கு சாதிப்பதற்கு இனி பெரிதாக ஏதுமில்லை எனவும் பலர் நம்பினர்.
ஆகையால் தற்போது பலரும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றனர். அந்தக் கேள்வி: நிலவுக்கு மீண்டும் செல்வதற்காக, அமெரிக்கா ஏன் இவ்வளவு நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிடுகிறது?
மதிப்புமிக்க வளங்கள்
மேலோட்டமாகப் பார்க்கையில், நிலா ஒரு பாலைவனத்தைப் போலவே வறண்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், வெறுமையாகவும் காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் நிலா வெறுமையானதல்ல.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றும் பேராசிரியர் சாரா ரஸ்ஸல், இதைத் தெளிவாக விளக்குகிறார்.
"பூமியில் நம்மிடமுள்ள அதே தனிமங்கள் நிலவிலும் நிறைந்துள்ளன" என்கிறார் அவர்.
எடுத்துக்காட்டாக, நிலவில் 'அரிய மண் தனிமங்கள்' (rare earth elements) காணப்படுகின்றன. இவை பூமியில் கிடைப்பது மிகவும் அரிது, ஆனால் நிலவில், இவை அதிகளவில் கிடைக்கக்கூடிய இடங்கள் இருக்கலாம் என்றும், அங்கிருந்து இவற்றை வெட்டியெடுக்க முடியும் எனவும் கருதப்படுகிறது.
நிலவில் இரும்பு, டைட்டானியம் போன்ற உலோகங்களும் உள்ளன. அது மட்டுமின்றி, மேம்பட்ட தொழில்நுட்பங்களான சூப்பர் கண்டக்டர், மருத்துவ உபகரணங்கள் எனப் பலவற்றில் பயன்படும் 'ஹீலியமும்' அங்குள்ளது.
ஆனால் நிலவிலுள்ள வளங்களிலேயே மிகவும் முக்கியமானதும், ஆச்சரியம் தரக்கூடியதுமான வளம், 'தண்ணீர்'.
பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் ரஸ்ஸல், "நிலவிலுள்ள சில கனிமங்களுக்குள் தண்ணீர் சிக்கிக்கொண்ட நிலையில் உள்ளது. மேலும், நிலவின் துருவப் பகுதிகளில் கணிசமான அளவு நீர் இருப்பு உள்ளது," என்கிறார்.
நிலவில் சில ஆழமான பள்ளங்கள் இருப்பதாகவும், அவை எப்போதும் நிழலிலேயே மூழ்கியிருப்பதால் (அவற்றின்மீது ஒருபோதும் சூரிய ஒளி படுவதில்லை), அந்தப் பள்ளங்களில் பனிக்கட்டிகள் தேங்கி, நீண்ட காலத்திற்கு அப்படியே நிலைத்திருக்க முடியும் என்றும் அவர் விளக்குகிறார்.
மனிதர்கள் நிலவில் குடியேறி வாழ விரும்பினால், தண்ணீர் மிக மிக அவசியமான வளமாக இருக்கும். இந்த நிலையில், அந்த நீரை, குடிநீராகப் பயன்படுத்த, சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, விண்கலங்களுக்கு எரிபொருளாகப் பயன்படும் ஹைட்ரஜனை தயாரிக்க எனப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆகவே, நிலவு பார்ப்பதற்கு வெறுமையாகத் தோன்றினாலும், உண்மையில் அது எதிர்காலத்தில் மனித வாழ்வைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய பல பயனுள்ள வளங்களைக் கொண்டுள்ளது.
பட மூலாதாரம், POT
விண்வெளிப் போட்டி
கடந்த 1960கள் மற்றும் 1970களில், அமெரிக்காவின் அப்போலோ விண்வெளிப் பயணங்கள் நிகழ்ந்ததற்கு முக்கியக் காரணம், சோவியத் ஒன்றியத்துடனான போட்டியே ஆகும். இது 'விண்வெளிப் போட்டி' என்று அழைக்கப்பட்டது.
அதேபோன்ற ஒரு போட்டி இப்போது புதிதாக உருவாகியுள்ளது. இந்த முறை போட்டியாளராக இருப்பது சீனா.
விண்வெளி தொழில்நுட்பத் துறையில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. அது ஏற்கெனவே ரோபோக்களையும் சிறப்பு விண்கலங்களையும் நிலவில் தரையிறங்க அனுப்பியுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது.
முன்னர், நிலவில் முதன்முதலாகக் கொடியை நடும் நாடாகத் திகழ்வதே முதன்மையான இலக்காக இருந்தது. அது பெருமை மற்றும் கௌரவம் சார்ந்த விஷயமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது அந்தக் கொடி எங்கு நடப்படுகிறது என்பதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவும் சீனாவும், நிலவில் மிகவும் பயனுள்ள வளங்கள் செறிந்துள்ள பகுதிகளைச் சென்றடைய விரும்புகின்றன. எனவே, நிலவிலுள்ள மிகச் சிறந்த இடங்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளில் அவை ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 1967ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி ஒப்பந்தம்' என்ற முக்கியமான விதிமுறை ஒன்று நடைமுறையில் உள்ளது. நிலவின் மீது எந்தவொரு நாடும் உரிமை கொண்டாட முடியாது என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
ஆனால் நிலவிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவது என வரும்போது, விஷயங்கள் அவ்வளவு எளிமையானவையாக இருப்பதில்லை.
"நிலவிலுள்ள நிலப்பகுதியின் மீது எந்தவொரு நாடும் அதிகாரபூர்வமாக உரிமை கொண்டாட முடியாது என்றாலும், அந்த நாடுகள் அங்கு சென்று, பிறரின் குறுக்கீடு ஏதுமின்றி அங்குள்ள பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்று பிரிட்டனின் முதல் விண்வெளி வீரரான ஹெலன் ஷார்மன் விளக்குகிறார்.
"எனவே, நிலவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல்வதே, தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது என்றாலும், அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ஒருமுறை அங்கு சென்றுவிட்டால், நீங்கள் விரும்பும் காலம் வரை அந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், POT
செவ்வாய் கிரக பயணத்திற்கான அடித்தளம்
நாசா 2030களில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப விரும்புகிறது.
இதுவொரு மிகப்பெரிய மற்றும் கடினமான இலக்கு. ஏனெனில், பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒவ்வொரு பெரிய பயணத்திற்கும் ஒரு தொடக்கப் புள்ளி தேவை. எனவே, அமெரிக்கா நிலவில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளது.
லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் விண்வெளித் துறை இயக்குநர் லிப்பி ஜாக்சன் இதுகுறித்து விளக்கினார். "நிலவுக்குச் சென்று அங்கு நீண்ட காலம் தங்குவது, மற்றொரு கிரகத்தில் எப்படி வாழ்வது, வேலை செய்வது என்பதைக் கற்றுக் கொள்வதற்கான மிகவும் பாதுகாப்பான, மலிவான, எளிமையான ஒரு சோதனைக் களமாக இருக்கும்," என்கிறார் அவர்.
அதாவது, செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கு முன்பு நிலவு ஒரு பயிற்சிக் களமாகப் பயன்படுத்தப்படும். விண்வெளி வீரர்களுக்கு சுவாசிக்க காற்றை வழங்குவது எப்படி, தண்ணீரை வழங்குவது எப்படி, மின்சாரத்தை உற்பத்தி செய்வது எப்படி, பாதுகாப்பான வாழ்விடங்களை உருவாக்குவது எப்படி எனப் பல முக்கியமான விஷயங்களை நாசாவால் நிலவில் சோதித்து மேம்படுத்த முடியும்.
பட மூலாதாரம், Getty Images
விண்வெளி வீரர்களை மிக அதிகமான மற்றும் மிகக் குறைவான வெப்பநிலைகள், விண்வெளியில் இருந்து வரும் அபாயகரமான கதிர்வீச்சு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க இந்த வாழ்விடங்கள் தேவைப்படுகின்றன.
"இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் செவ்வாய் கோளில் முதல்முறையாகச் சோதிக்கப்பட்டு, அவை தவறாகிப் போனால், பேரழிவுகரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். அவற்றை நிலவில் சோதிப்பது மிகவும் பாதுகாப்பானது மற்றும் எளிதானது," என்கிறார் லிப்பி ஜாக்சன்.
சுருக்கமாகக் கூறுவதெனில், செவ்வாய் கோளில் ஏதேனும் தவறு நடந்தால், அது மிகவும் ஆபத்தானதாகவும் சரி செய்வதற்குக் கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால் அதே சிக்கல் நிலவில் ஏற்பட்டால், அது பூமிக்கு அருகில் இருப்பதால் பிரச்னையைக் கையாள்வது எளிது.
எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முயல்வதற்கு முன்பு, நிலா ஒரு பாதுகாப்பான சோதனைப் பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பட மூலாதாரம், POT
விளக்கப்பட வேண்டிய மர்மங்கள்
அப்போலோ பயணங்களின்போது விண்வெளி வீரர்கள் நிலவில் இருந்து கொண்டு வந்த பாறைகள், விஞ்ஞானிகள் நிலவைப் பற்றி இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவின.
பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய செவ்வாய் கிரகத்தின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய வான்பொருள் பூமியைத் தாக்கியது. இந்த மாபெரும் மோதலின் விளைவாக, பூமியின் துண்டுகள் உடைந்து சிதறி, பின்னர் ஒன்றிணைந்து நிலவை உருவாக்கின. நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறைகளை ஆய்வு செய்வதன் மூலமே விஞ்ஞானிகள் இதைக் கற்றுக் கொண்டனர்.
ஆனால், நமக்கு இன்னும் தெரியாத பல விஷயங்கள் இருப்பதாக பேராசிரியர் ரஸ்ஸல் கூறுகிறார்.
நிலா ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக இருந்ததால், அது பூமியின் வரலாற்றின் மிகப் பழமையான பதிவைக் கொண்டுள்ளது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
பூமியில், கண்டத்தட்டுகள் (டெக்டோனிக் தட்டுகள்), காற்று, மழை எனப் பலவும் பழைய வரலாற்றைத் தொடர்ந்து மாற்றி அழித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நிலவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதில்லை. எனவே, பழைய வரலாறு இன்னும் தெளிவாகப் பாதுகாக்கப்படுகிறது.
அதனால்தான் விஞ்ஞானிகள் நிலவை ஒரு காலப் பெட்டகம் என்று கூறுகிறார்கள். ஏனெனில், அது மிகவும் பழமையான தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கிறது.
"நிலவு என்பது பூமியின் ஓர் அற்புதமான ஆவணக் காப்பகம்" என்கிறார் பேராசிரியர் ரஸ்ஸல்.
மேலும் அவர், "நிலவின் வேறொரு பகுதியில் இருந்து கிடைக்கும் புதிய பாறைகளின் தொகுப்பு நம்ப முடியாததாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
விஞ்ஞானிகளால் நிலவின் புதிய இடங்களில் இருந்து மேலும் பாறைகளைக் கொண்டு வர முடிந்தால், அவர்களால் பூமியின் கடந்த காலத்தைப் பற்றியும் நிலா எவ்வாறு உருவானது என்பதைப் பற்றியும் இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதே இதன் பொருள்.
பட மூலாதாரம், CNSA HANDOUT via EPA
புதிய தலைமுறைக்கு ஊக்கமளித்தல்
அப்போலோ பயணங்களில் இருந்து அனுப்பப்பட்ட, கருப்பு-வெள்ளை நிறத்திலான மற்றும் குறைந்த தரத்திலான படங்கள், விண்வெளிப் பயணம் என்பது வெறும் கனவு மட்டுமல்ல, அதுவொரு நிதர்சனமான உண்மை என்பதை மக்கள் உணர்வதற்கு உதவின.
அந்தப் பயணங்களைக் கண்டவர்களில் மிகச் சிலரே பிற்காலத்தில் விண்வெளி வீரர்களாக மாறினர். ஆனால், அவர்கள் கண்ட காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களில் பலர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் தங்கள் தொழில் பாதையைத் தேர்வு செய்துகொண்டனர்.
தற்போது, புதிய ஆர்டெமிஸ் பயணங்கள் மிக உயர்ந்த தரத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன. இந்தப் பயணங்கள், ஒரு புதிய தலைமுறை மக்களுக்கு உத்வேகம் அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், POT
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தின் விண்வெளித் துறை இயக்குநரான லிப்பி ஜாக்சன், "நாம் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். நமக்கு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கணிதவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் துறைகளின் மீது மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் ஓர் அபாரமான ஆற்றல் விண்வெளிக்கு உண்டு," என்று கூறுகிறார்.
ஆர்டெமிஸ் திட்டம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன் விண்வெளிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும். ஆர்டெமிஸ் திட்டத்திற்காகத் தான் செலவிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களில் இருந்து, உரிய பலன்களைப் பெற முடியுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது. மேலும், இந்தப் பயணங்களுக்காக உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள் பூமியிலும் பயனுள்ளவையாக அமையக்கூடும்.
நிலவுக்கு மீண்டும் செல்வது, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளிக்குமென ஹெலன் ஷார்மன் குறிப்பிட்டார்.
"நாம் அனைவரும் உண்மையாகவே ஒன்றுபட்டால், மனித குலத்திற்குப் பயனளிக்கக் கூடிய பல அரிய சாதனைகளை நம்மால் நிகழ்த்திக் காட்ட முடியும்," என்றார் அவர்.
மேலும் அவர், "மனித இனத்தால் எத்தகைய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு," என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை