சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்த நீதிபதி கூறிய காரணம் என்ன?
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தவிர, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார்.
மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவர்கள் பத்துப் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
'மனித கண்ணியத்தை மீறும் செயல்'
இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது.
மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனையை அறிவிக்கும் முன்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
"இருவரையும் கொல்லும் நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எதுபோன்ற தண்டனை அளிக்கலாம் எனக் கேட்டபோது, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மத்திய அரசு கூறியது. அதேபோல, தமிழக அரசும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கூறியது.'' என நீதிபதி கூறினார்
இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றார் நீதிபதி.
''இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்துசொல்ல முடியாது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் திருந்தவில்லை. கொரோனா காலகட்டத்தில் கடையைத் திறந்து வைத்தார்கள் என்பதற்காக இப்படித் தாக்கியிருக்கிறார்கள். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக விசாரித்திருக்காவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.''
''நிராயுதபாணியாக நின்றவர்களை இவர்கள் தாக்கியுள்ளனர். இவர்களை மன்னிக்க வேண்டியதில்லை. வயது, குடும்ப சூழலை காரணம் காட்டி இவர்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் நல்ல மன நிலையில் இதனைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை அவர்களைத் தாக்கியுள்ளது.'' என நீதிபதி கூறினார்
இந்தச் செயலைப் பார்க்கும்போது மனம் வெந்து போகிறது என கூறிய அவர், ''பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது.'' என்றார்
இது அரிதினும் அரிதான வழக்கு என நீதிபதி கூறினார்
''இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என எதிரிகள் நினைக்கலாம். ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை" என்று தெரிவித்த நீதிபதி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார்.
பட மூலாதாரம், Handout
தண்டனை விவரங்கள் என்ன?
அதன்படி முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, பல சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, 3 ஏழாண்டு சிறை, மூன்றாண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 24,10,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே ஒராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை மரண தண்டனையும் 16,80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை தூக்கு தண்டனையும் 5,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான தலைமைக் காவலர் முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 10,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 5,60,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை தண்டனை, மூன்று ஏழாண்டு சிறை தண்டனை, ஒரு மூன்றாண்டு சிறை தண்டனை, இரட்டை மரண தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 3,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 14,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒன்பதாவது குற்றவாளி வெயில் முத்துவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
பென்னிக்சின் சகோதரி கூறியது என்ன?
''2020-ஆம் ஆண்டு விசாரனை என்ற பெயரில் என் தந்தை மற்றும் சகோதரனை அழைத்து சென்று கொடூரமாக படுகொலை செய்தனர். இவை நடந்து 6 வருடம் ஆகியுள்ளது இருந்தாலும் நீதிமன்றம் எங்களுக்கான நீதியை வழங்குவார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம், இன்று அதற்கான நீதியை வழங்கியுள்ளனர்.'' என பென்னிக்சின் சகோதரி செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று கிடைத்த நீதி அனைத்து பாமர மக்களுக்கும் கிடைத்த நீதி என்று அவர் குறிப்பிட்டார்.
''இனி இதுபோல எந்த குடும்பமும் பாதிக்கப்படக்கூடாது என நாங்கள் நினைத்தோம் இன்று வந்த தீர்ப்பு அப்படிப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. குற்றவாளிகள் மேல் முறையீடு சென்றாலும் நாங்களும் நீதிமன்றம் செல்வோம், கடைசி மூச்சு வரை நாங்கள் இதற்காக போராடுவோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கான நீதியை எங்கு சென்றாலும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்''
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்ககூடாது என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இது போல மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம் என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை