இரான் படைகளிடம் சிக்காமல் தடுத்து, 2-வது வீரரை அமெரிக்கா மீட்டது எப்படி? புதிய தகவல்கள்
பட மூலாதாரம், CHRIS RADBURN/AFP via Getty Images
இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடும் பணியில் இரானும் அமெரிக்காவும் போட்டிபோட்டு ஈடுபட்டிருந்தன.
இந்தச் சூழலில் தேடப்பட்டு வந்த விமானப்படையின் இரண்டாவது வீரர் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தகவலை தனது ட்ரூத் சோசியல் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.
அந்த அதிகாரி எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இந்த நடவடிக்கையை நெருக்கமாக கண்காணித்த ஒருவர், தெற்கு இரானில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணி நடத்தப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த மீட்பு பணியின்போது அமெரிக்க மற்றும் இரானிய படைகள் இடையே சண்டை நடைபெற்றதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது. விமானத்திலிருந்து வெளியேறிய போது விமானி காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேடுதல் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்
முன்னதாக காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இரான் ராணுவத்துடன் பொதுமக்களும் அமெரிக்க வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடித்து மீட்டு விட்டதாக டிரம்ப் உறுதி செய்வதற்கு முன்பாக இரானிய பொதுமக்களும் தேடுதல் பணியின் இணைந்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தென்மேற்கு இரானில் உள்ள மலைப்பகுதி நோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.
வான் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதாக இரான் தகவல்
காணாமல் போன அமெரிக்க வீரர் இருந்ததாக நம்பப்பட்ட பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உள்ளூர் ஆளுநர் ஒருவரை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, தென் மேற்கு இரானில் உள்ள போயர்-அஹமது மாகாணத்திலும் கோகிலுயேவின் மலைப்பகுதிகளிலும் நடந்த தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆளுநர் குற்றம் சுமத்தியிருந்தார்.
அதன் பிறகு மாகாணத்தின் துணை ஆளுநரான ஃபட்டா முகமது உள்ளூர் இரானிய ஊடகங்களிடம் பேசுகையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தாக்குதல்கள் அமெரிக்க வீரர் மீட்புப் பணிகளுடன் தொடர்புடையதா என்பதில் தெளிவில்லை.
அமெரிக்க டிரோன் வீழ்த்தப்பட்டதா?
பட மூலாதாரம், Getty Images
இரானிய ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தேடுதல் பணியின்போது அமெரிக்க டிரோன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஃபார்ஸ் செய்தி முகமை மற்றும் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை ஆகியவற்றை மேற்கோள்காட்டி அதன் செய்தித் தொடர்பு அலுவலகம் கொடுக்கும் தகவல்களின்படி, அந்த டிரோன் இரானின் தெற்கு இஸ்ஃபஹான் மாகாணத்தில் விழுந்தது.
ஆனால் இந்த தகவல் அமெரிக்க தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை.
டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?
இந்த தகவலை உறுதிபடுத்திய டொனால்ட் டிரம்ப், தனது பதிவில் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
"அமெரிக்க ராணுவம் வரலாற்றில் மிகவும் சவாலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டது. இது மிகவும் மதிக்கத்தக்கவரும் மிகச் சிறந்த அதிகாரியுமான கர்னல் ஒருவருக்காக நடத்தப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது." எனத் தெரிவித்திருந்தார்.
தனது பதிவில், "இந்த தைரியமிக்க அதிகாரி இரானின் ஆபத்தான மலைகளில் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் இரானிய ராணுவம் தன்னை நெருங்கி வருவதை அவர் பார்த்து வந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தனியாக இருக்கவில்லை. முப்படைகளின் தளபதியான நான் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர், கூட்டு படை தளபதிகள் மற்றும் சக வீரர்கள் அவரது இருப்பிடத்தை 24 மணி நேரமும் கண்காணித்து மீட்புப் பணி திட்டமிடப்பட்டது." என்றார்.
பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images
எனது உத்தரவின்பேரில் அவரை மீட்க, உலகின் மிகவும் நவீன ஆயுதங்களைக் கொண்ட விமானத்தை அமெரிக்க ராணுவம் அனுப்பி வைத்திருந்தது எனக் கூறுகிறார் டிரம்ப்.
அந்த வீரர் காயமடைந்துள்ளதாகக் கூறிய டிரம்ப் அவர் மீண்டு வருவார் என்றும் தெரிவித்தார்.
"நேற்று நாம் நடத்திய வெற்றிகரமான ஆபரேஷனைத் தொடர்ந்து இந்த மீட்புப் பணி நடைபெற்றது. ஆனால் மற்ற அதிகாரிகள் ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக நாம் பொதுவெளியில் அதனை தெரிவிக்கவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிரியின் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் குறிப்பிடும் டிரம்ப், "எந்த அமெரிக்க வீரரையும் விட்டுவிட்டு நாங்கள் செல்ல மாட்டோம். இந்த இரண்டு மீட்புப் பணிகளிலும் எந்த அமெரிக்க வீரரும் கொல்லப்படவுமில்லை காயமடையவுமில்லை. இது இரானிய வான்பரப்பு மீது முழுமையான கட்டுப்பாட்டை நாம் அடைந்துவிட்டோம் என்பதை நிருபிக்கிறது." என்றார்.
அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன?
வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்னட் டெபுஸ்மேன் ஜூனியர் வழங்கும் தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் மீட்புப் பணி வெற்றியடைந்ததைக் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
"எவரையும் கைவிடுவதில்லை என்பதே அமெரிக்க ராணுவத்தின் கொள்கையாக உள்ளது," என்றார் மத்திய கிழக்கிற்கான பாதுகாப்பு துணை உதவி செயலாளர் மிக் முல்ராய். "இன்றைய தினம் அந்த முக்கிய அர்ப்பணிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு." என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அமெரிக்க ராணுவம், உளவு அமைப்புகள் மற்றும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் அமெரிக்க மக்களின் நன்றிக்கு உரித்தானவர்கள்." என்றார்.
இரானில் 2வது அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? புதிய தகவல்கள்
கிறிஸ் பேட்ரிஜ்
பிபிசி நியூஸ்
இந்த மீட்புப் பணி கணிசமான அமெரிக்க ராணுவ வளங்கள், நூற்றுக்கணக்கான சிறப்பு படை வீரர்கள், பல போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நடைபெற்ற மிகவும் சிக்கலான பணி என்பது தெளிவாகியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ போர் விமானத்தின் இரண்டாவது இருக்கையில் இருந்த ஆயுதங்களை கையாளும் அதிகாரி விமானத்தில் இருந்து வெளியேறும் போது எவ்வாறு காயமடைந்தார் என்பதை சிபிஎஸ் நியூஸ் விவரித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் சண்டையின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் விமானமாக இது உள்ளது.
"விஸ்ஸோ" என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத அந்த கர்னல் காயமடைந்திருந்தாலும் அவரால் நடந்து செல்ல முடிந்தது. இரான் நிலப்பரப்பில் விழுந்தாலும் ஒரு நாளுக்கும் மேலாக பிடிபடாமல் தப்பியுள்ளார். அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளது.
அந்த அதிகாரி இருந்த இடத்தை இரானிய படைகள் நெருங்காமல் தடுக்க அமெரிக்கா குண்டுகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியின் இரானிய படைகளுடன் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட ஐந்து அமெரிக்க போக்குவரத்து விமானங்களில் இரண்டு விமானங்களால் இரானுக்குள் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரான் படைகளால் கைப்பற்றப்படாமல் தடுக்கும் வகையில் அந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டன.
திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்ட சிஐஏ
இந்த மீட்புப் பணியில் சிஐஏவும் முக்கியப் பங்கு வகித்ததாக சிபிஎஸ் தெரிவிக்கிறது.
மலை இடுக்கில் இருந்த அமெரிக்க வீரரை கண்டறிந்த சிஐஏ அவரின் துல்லியமான இருப்பிடத்தை பென்டகனுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இரானுக்குள் திசைதிருப்பும் வேலையிலும் சிஐஏ ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தபோது அந்த வீரர் ஏற்கெனவே மீட்கப்பட்டு இரானிலிருந்து வெளியேற்றப்படுவதாக செய்தியைப் பரப்பியது.
அவரை உடனடியாக மீட்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த கால மீட்பு நடவடிக்கைகள்
2009-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் போவி பெர்க்டால் என்கிற அமெரிக்க வீரர் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.
- அவரை விடுவிக்க 2014-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாகம் குவாண்டநாமோ விரிகுடா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 5 தாலிபன் சிறைவாசிகளை விடுவித்தது.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- 1979-இல் அமெரிக்க ராஜதந்திரிகள் இரானால் 444 நாட்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீட்கும் ராணுவ முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரான் மீதான சில பொருளாதார தடைகளை நீக்கியும் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான இரானின் சொத்துகளை விடுவித்ததன் மூலமும் தனது ராஜதந்திரிகளின் விடுதலையை அமெரிக்கா உறுதி செய்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை