இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய பேட்டர்கள் பயன்படுத்தும் பேட் பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு நேர்காணலின் போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டைகளை விட சிறந்த தரம் வாய்ந்தது, அவற்றின் மீது ரப்பர் அடுக்கு இருப்பது போல் தெரிகிறது," என்று பானுகா ராஜபக்ச கூறியதாக நியூஸ்வயர் ஊடகம் ​​கூறியிருந்தது.

"எனது சமீபத்திய நேர்காணல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பிழை காரணமாக திரிக்கப்பட்டிருக்கலாம். இந்திய பேட்டர்களைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது," என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜபக்சவின் தெளிவுபடுத்தல் குறித்து நியூஸ்வயர் ஊடகம் ​விரிவாக எழுதியுள்ளது.

இலங்கை பேட்டர் பானுக ராஜபக்ச, இந்திய அணியை 'மிகவும் முன்னேறிய' அணி என்று வர்ணித்து, அதன் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் தரத்தைப் பற்றி குறிப்பிட்டதாக நியூஸ்வயர் ​​குறிப்பிட்டுள்ளது.

இந்திய பேட்டர்களின் பவர்-ஹிட்டிங் திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மட்டைகளைப் பற்றி அவர் பேசிய முந்தைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரிடம் இருந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

ராஜபக்ச கூறியது என்ன?

ஹரி டிவி பத்திரிகையாளர் லஹிரு முதலிகேவிடம் பேசிய ராஜபக்ச, "இந்திய பேட்டர்கள் அதிக சக்தியை உருவாக்கும் பேட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேட் மீது கூடுதல் ரப்பர் அடுக்கு இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள்." என்று கூறியிருந்தார்.

தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், "இவை சில சிறப்பு வகை வில்லோ மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

"இந்திய வீரர்களின் மட்டை நம்மிடம் உள்ள சிறந்த மட்டைகளை விட மிகச் சிறந்தவை. இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. மற்றவர்களால் இந்த மட்டைகளை வாங்கக்கூட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் இது தெரியும்," என்று அவர் கூறியிருந்தார்.

"இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் நேர்மையாகச் சொன்னால், நான் அப்படித்தான் உணர்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

அதே நேர்காணலில் பேசிய ஐபிஎல் முன்னாள் வீரர் ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டின் வலுவான பேட்டிங் கலாசாரத்தையும், உலகின் சிறந்த டி20 லீக் என்று அவர் வர்ணித்த இந்தியன் பிரீமியர் லீக்கையும் பாராட்டினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.

பானுகா ராஜபக்ச யார்?

  • பானுகா ராஜபக்ச ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
  • 2022-ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 17.80 சராசரியுடன் 89 ரன் எடுத்துள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் 45 டி20 போட்டிகளில் 744 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 22.54 ரன்னாகவும் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது.