You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் - சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீர் அறிவிப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.என் ரவி 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக ஆளுநராக இருந்த காலகட்டத்தில் அவருக்கும் தமிழக அரசுக்கு இடையே பதற்றமான உறவுகள் நிலவியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என் ரவி நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது தேசிய அளவில் விவாதமானது.
விரைவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இரு மாநில ஆளுநர்கள் மாற்றம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மமதா பானர்ஜி ஆச்சரியம்
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் ராஜிநாமா குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
"அவரது ராஜிநாமாவுக்கான காரணம் எனக்கு இன்னும் தெரியவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பு, அரசியல் ஆதாயத்திற்காக மத்திய உள்துறை அமைச்சரால் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்." என மமதா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ''ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். நிறுவப்பட்ட நடைமுறையின்படி அவர் இந்த விஷயத்தில் என்னிடம் ஒருபோதும் கலந்தாலோசிக்கவில்லை. ஜனநாயக மரபுகளையும் மாநிலங்கள் மீதான மரியாதையையும் அழிக்கும் இத்தகைய முடிவுகளை மத்திய அரசு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்'' எனவும் மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட பிற ஆளுநர்கள் யார்?
- டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா லடாக் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டெல்லி துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
- இமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த ஷிவ்பிரதாப் சுக்லா தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம்
- சையத் அடா ஹஸ்னன் பிகார் ஆளுநராக நியமனம்.
- லடாக் துணை நிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தா இமாச்சல் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு