இந்தியாவில் அதிக நன்கொடை வழங்குவது செல்வந்தரா, சாமானியரா? புதிய வெளிச்சம் தரும் ஆய்வு

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்திய செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவில் தானம், கொடை போன்றவை மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி செய்யப்படுகிறது என்றே கூறப்பட்டு வருகிறது.

இந்த அடுக்கில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) நிதிகள், செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் வருகின்றன. ஆனால் புதிய ஆய்வறிக்கை ஒன்று இந்த புரிதலை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்தியப் பெருந்தன்மையின் இயக்கு விசை என்பது மிகவும் சாதாரணமான, ஆனால் பரந்துபட்ட ஒன்றாக உள்ளது.

அசோகா பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக தாக்கம் மற்றும் தொண்டுக்கான மையம் தயாரித்துள்ள இந்தியாவில் தானம் - 2025 (How India gives 2025) என்ற அறிக்கை புதிய பார்வையை வழங்குகிறது. நன்கொடைகளில் நிறுவனங்களின் பங்கை விடவும் தனிநபர் மற்றும் குடும்பங்களின் பங்கே அதிகமாக உள்ளதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்த ஆய்வறிக்கையின்படி, இந்திய குடும்பங்கள் பங்களிப்பு மற்றும் தன்னார்வ தொண்டு மூலமாக வழங்கும் ஒட்டுமொத்த நன்கொடையின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 540 பில்லியன் ரூபாயாக (6 பில்லியன் டாலராக) உள்ளது.

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 68% பேர் ஏதாவது ஒரு விதத்தில் நன்கொடை வழங்கியதாக தெரிவிக்கின்றனர். இதில் 48% பேர் உணவு, ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கியுள்ளனர், 44% பேர் நிதியுதவி அளித்தும் 30% பேர் லாப நோக்கமற்ற நிறுவனங்கள், மத நிறுவனங்கள் அல்லது சமூக குழுக்களில் தன்னார்வ பணி செய்துள்ளனர்.

கொடையாக வழங்கப்படும் உணவு பெரும்பாலும் இலவச சமூக உணவகங்களுக்குச் செல்கின்றது. தன்னார்வ பணி என்பது பெரும்பாலும் பேரிடர் காலங்களில் மத நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் உட்பட மத நிறுவனங்களில் செய்யப்படும் சேவைகள் வழியாக நடக்கின்றது.

"குடும்பங்கள் பொதுவாக ஒத்துக்கொள்ளப்படுவதை விடவும் மிகப்பெரிய பங்காற்றுவதை எங்களுடைய ஆய்வு தெரிவிக்கிறது. தாராள மனப்பான்மை மிகவும் பரந்துபட்டதாகவும் கலாசார ரீதியாகப் பிணைந்ததாகவும் இருக்கிறது," என அசோகா பல்கலைக்கழகத்தில் சமூக தாக்கம் மற்றும் தொண்டுக்காக மையத்தின் தலைவர் ஜின்னி உப்பால் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தெரியவரும் சேதி என்பது இந்தியாவில் தொண்டு என்பது உயரடுக்கில் இருப்பவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, நம்பிக்கையால் வழிநடத்தப்படக்கூடிய, முகம் பார்த்து மேற்கொள்ளக்கூடிய, அனைத்து வருவாய் பிரிவினரும் உள்ள ஒரு பெருந்திரளான, உள்ளூர் மற்றும் தொடர்பு சார்ந்ததாக உள்ளது.

இந்த ஆய்வில் 20 மாநிலங்களில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் 7,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வு இந்தியாவின் தேசிய மாதிரி ஆய்வின் நுகர்வு தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தினசரி நன்கொடை அளிப்பவர்களின் வருமானம் அடிப்படையிலான சுயவிவரங்களை தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் குடும்பங்களின் செலவின ஆய்வு. இதில் கலந்துகொண்டவர்கள் ஆய்வுக்கு முந்தைய மூன்று மாத காலங்களில் எவ்வளவு நன்கொடை வழங்கினார்கள் மற்றும் அதனை எப்படி வழங்கினார்கள் என்பதைச் சுயமாக தெரிவித்தனர். இந்த மூன்று மாத தரவுகளை விரிவுபடுத்தி ஆண்டு கணக்கு தயாரிக்கப்பட்டது.

இந்த ஆய்வு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஒன்று யாசகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரடியாக, தனிப்பட்ட முறையில் வழங்கக்கூடிய "தினசரி உதவிகள்", இவை பெரும்பாலும் தொண்டாக கருதப்படுகிறது. இரண்டாவதாக, ஒருங்கிணைந்த மதம் அல்லாத நிறுவனங்களுக்கு வழங்கும் நன்கொடைகள், இவை வெளிப்படையாக தொண்டு எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த அறிக்கை, பதிவு செய்யப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கொண்டவர்கள் வழங்கும் நன்கொடைகளை அல்லாமல், சாதாரண தனி நபர்களால் வழங்கப்படும் நன்கொடைகளை ஆய்வு செய்கிறது. இது "சில்லறை கொடுத்தல்" எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆய்வு முறைசாரா, தனிநபர்களுக்கான நேரடி உதவி மற்றும் மத நிறுவனங்களுக்கான நன்கொடை ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான நன்கொடை அருகாமை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதை ஆய்வு கண்டறிந்துள்ளது.

நகர்ப்புற பகுதிகளில் 40-45% நன்கொடை மத நிறுவனங்களுக்கும் அதற்கும் ஒப்பான அளவில் யாசகர்கள் மற்றும் ஆதரவற்றவர்களும் வழங்கப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் மத நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.

"நாங்கள் ஊக்கமளிப்பது பற்றிய நடத்தை சார்ந்த கேள்விகளைக் கேட்டோம். 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு ஒரு விதமான மதக் கடமை என்பதே உந்துசக்தியாக உள்ளது. இது அவர்கள் நன்கொடை வழங்குவதை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் சமூக தாக்கம் மற்றும் தொண்டுக்கான மையத்தில் ஆய்வுப் பிரிவின் தலைவராக உள்ள கிருஷ்ணாணு சக்ரவர்த்தி.

நன்கொடைக்கான வாய்ப்புகளை தனிநபர் கோரிக்கைகள் அல்லது பிரசாரம் மூலமாகவே பெரும்பாலானவர்கள் எதிர்கொள்கின்றனர். இதன் பொருள் இணைய பிரசாரம் அல்லது நிதி சேகரிப்பு முயற்சிகளை விடவும் வீடு, மதத் தலங்கள் அல்லது பொது இடங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளின் மூலமே அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.

தாராள மனப்பான்மைக்கும் கல்விக்கும் தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளிடம் நன்கொடை வழங்குவது அதிகமாக உள்ளது.

எனினும், நன்கொடை என்பது செல்வந்தர்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குறைந்த வருவாய் கொண்ட பிரிவினரில் (மாதம் 4,000 - 5,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள்) 50% குடும்பங்கள் வருமானம் உயரும்போது நன்கொடை வழங்குவதாக கூறுகின்றனர். இந்தச் சூழலில் பங்களிப்பு என்பது 70-80% வரை உயர்கிறது.

இதில் பாலினம் சார்ந்த கூறுகளும் வெளிப்படுகின்றன. ஆண் தலைமை கொண்ட குடும்பங்கள் அதிகமாக மதம் சார்ந்த நன்கொடைகளை வழங்குகின்றன. அதே வேளையில், பெண் தலைமை கொண்ட குடும்பங்கள் ஆதரவற்ற தனிநபர்களுக்கு வழங்குவதை நோக்கி சாய்கின்றன.

"இந்தியாவில் தினசரி நன்கொடை என்பது ஆங்காங்கே நடக்காமல் ஓர் அமைப்பு போல நடக்கிறது என்பதே இந்த ஆய்வின் மிக முக்கியமான முடிவு," என்கிறார் உப்பால்.

இது வருமான குழுக்கள், வயது, பாலினம் மற்றும் கிராமப்புற/நகர்ப்புற பகுதிகள் ஆகியவற்றைக் கடந்து இருப்பதாகக் கூறும் அவர், மக்களின் தினசரி சமூக வாழ்வுடன் பிணைந்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின் இரண்டாவது முக்கியமான முடிவு, இந்தியாவில் வழங்கப்படும் நன்கொடைகளில் தினசரி கொடுக்கப்படும் நன்கொடைகளின் பங்கு 15% ஆக உள்ளது என்பதே. இவை ஒருங்கிணைந்த சமூக குழுக்களுக்கு வழங்கப்படும் தனிநபர் நன்கொடைகளில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.

"தினசரி நன்கொடை வழங்குபவர்களிடமிருந்து கிடைக்கும் சிறிய அளவிலான நன்கொடையாக எடுத்துக் கொண்டாலும் சமூக தாக்கத்துக்கான குடிமக்களின் கணிசமான பங்களிப்பாக உள்ளது," என்கிறார் உப்பால்.

இந்த ஆய்வின் இறுதி முடிவு என்பது முறைசார்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வில் கொடுக்கப்பட்ட பதில்கள் நுகர்வு தரவுகளுடன் இணைக்கப்பட்டன. செலவு செய்யும் விதம் நன்கொடை வழங்குவதுடன் எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்பதை ஆராய ஆய்வாளர்களுக்கு இது உதவியது. குடும்பங்களில் நுகர்வு அதிகரிக்கும்போது தானம் மற்றும் நன்கொடை வழங்குவதும் அதிகரிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

"உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதன்மை பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதன் உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வு ஒரு முக்கியமாக அம்சமாக உள்ளது. காலப்போக்கில் குடும்ப நுகர்வு விரிவடையும்போது, தினசரி வழங்கப்படும் நன்கொடைகளும் பரிணமித்து அதனுடன் வளர்கின்றன," என்கிறார் உப்பால்.

வளர்ந்த நாடுகளில், தினசரி கொடை என்பது முறையாக, கண்காணிக்கப்பட்ட மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசு சாரா நிறுவனங்களின் நிதி முதுகெலும்பாக உள்ளது.

2024-இல் அமெரிக்காவின் தனிநபர்கள் 392 பில்லியன் டாலர் கொடையாக வழங்கியுள்ளனர். நன்கொடை நோக்கில் வழங்கப்பட்ட மொத்த நிதியில் இது 66% பங்கு வகிக்கிறது.

பிரிட்டனில் பொது நன்கொடை என்பது 20.7 பில்லியன் டாலராக உள்ளது, இதில் மரபு சார்ந்த மற்றும் தனிநபர் கொடை என்பது 30% ஆக உள்ளது.

இது ஆச்சரியம் அளிக்கவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு அரைக்கோள நாடுகளில் பெரும்பாலும் முறைப்படுத்தப்பட்ட நன்கொடைகளை விட தனிநபர் சார்ந்த முறைசாரா கொடை அதிகமாக உள்ளது. ஆனால், முன்னேறிய பொருளாதாரங்களில் இதற்கு மாறாக கொடை என்பது பதிவு செய்யப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு வரிச் சலுகைகளும் மிகவும் பழமையான மற்றும் ஒருங்கிணைந்த தொண்டு துறைகள் உதவுகின்றன.

அமெரிக்க தாராள மனப்பான்மை ஆணையத்தின் (US Generosity Commission) 2024-ஆம் ஆண்டுக்கான அறிக்கை தினசரி கொடைகள் குறைந்துள்ளதைக் குறிப்பிடுகின்றன. ஆனால், இது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வரி முறைகளின் மூலம் வழங்கப்படும் தணிக்கை செய்யப்பட்ட நன்கொடைகளை மட்டுமே ஆய்வு செய்கின்றன.

கொடை வழங்குவது என்பது இணைய பணப்பரிமாற்றம், நிதி சேகரிப்பு முறைகள் மற்றும் இதர தணிக்கையற்ற் தளங்கள் போன்ற முறைசாரா வழிகளை நோக்கிச் செல்லும்போது இந்த நடத்தை பதிவு செய்யப்படாமல் போகின்றது. அமெரிக்காவிலும் மக்கள் நன்கொடை வழங்கும் விதம் மாறி வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் தலைப்புச் செய்தியாக வேண்டியது சதவிகிதம் அல்ல, பங்கேற்பின் அளவு தான் என்கிறார் உப்பால்.

இந்த ஆய்வு மத நிகழ்வுகள் அல்லது திருவிழாக்கள் குறைவாக இருக்கும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

"பெரும்பாலான மக்கள் மத நிறுவனங்களுக்கு வழங்கும் நிலையில் மத நிகழ்ச்சிகள் அதிகம் உள்ள மாதங்களில் அதிக அளவிலான மக்கள் கொடை வழங்குவார்கள்," என்றும் தெரிவித்தார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் கொடை என்பது மேலிருந்து கீழ் வழங்கப்படுவது அல்ல. மாறாக, கீழ் மட்டத்திலிருந்து சிறிய அளவில், தினசரி வழங்கப்படும் ஒரு பெருமளவு ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு