You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ரூ.85 லட்சம் தங்க நகைகளை கொடுத்து மோமோஸ் சாப்பிட்ட சிறுவன்" - அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்
- எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் வீட்டில் இருந்த சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மோமோஸ் விற்பனையாளர்களுக்குக் கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்தச் சிறுவனின் அத்தை தனது அம்மா வீட்டிற்கு வந்திருந்தபோது நகைகள் காணாமல் போனதைக் கண்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குடும்பத்தினர் 7-ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவனிடம் விசாரித்தபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராம்பூர் ஃபேக்டரி காவல் நிலைய அதிகாரி தேவேந்திர குமார் சிங் இதுகுறித்துக் கூறுகையில், மூன்று இளைஞர்கள் அந்த 14 வயது சிறுவனுக்கு அடிக்கடி மோமோஸ் கொடுத்து நண்பர்களாகியுள்ளனர்.
பின்னர் மெல்ல மெல்ல அந்தச் சிறுவனை மூளைச்சலவை செய்து, வீட்டில் இருக்கும் நகைகளைக் கொண்டு வருமாறு வற்புறுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராகேஷ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு பெண்ணிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளில் ஒரு பகுதியை போலீசார் மீட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையை தியோரியா சதர் காவல் சர்கிள் ஆபிஸர் சுனில் ரெட்டி உறுதிப்படுத்தினார். மேலும், இச்சம்பவத்தோடு தொடர்புடைய மற்றவர்களை கண்டுபிடிக்க காவல் துறை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீதமுள்ள நகைகளும் விரைவில் மீட்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எப்படி தெரியவந்தது?
சிறுவனின் அத்தை தனது நகைகளை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
சந்தேகம் அடைந்த சிறுவனின் தந்தை தனது மகனிடம் விசாரித்தபோது, கடைக்காரர்களிடம் மோமோஸ் சாப்பிடுவதற்காக நகைகளைக் கொடுத்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தை வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார்.
"என் மகன் கிராமத்தில் தங்கிப் படித்து வருகிறான், அவனுக்கு மோமோஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு, மோமோஸ் கடை நடத்தும் மூன்று இளைஞர்கள் அவனுடன் பழகியுள்ளனர்" என்றுகூறினார்.
குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகள் என அனைவருடைய நகைகளும் அந்த வீட்டில்தான் வைக்கப்பட்டிருந்ததாக சிறுவனின் உறவினர் தெரிவித்தார். காணாமல் போன நகைகளின் மதிப்பு சுமார் 85 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்?
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் அந்தச் சிறுவனுக்கு இலவசமாக மோமோஸ் கொடுத்து நண்பர்களாகியுள்ளனர். பின்னர், வீட்டில் இருந்து நகைகளைக் கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த சிறுவன் தும்ரி சந்திப்பில் உள்ள கடைக்காரர்களிடம் மோமோஸ் வங்கிச்சாப்பிட்டுவிட்டு அதற்கு பதில் வீட்டிலிருந்து நகைகளை எடுத்து கொடுத்து வந்ததாக காவல்துறை அதிகாரி தேவேந்திர குமார் சிங் கூறினார்.
சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் இவ்வாறு தொடர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவனின் வயது மற்றும் போதிய புரிதல் இல்லாத காரணத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தீபக் குமார், ராகேஷ் மற்றும் பிந்து ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போன நகைகளின் முழுப் பட்டியலையும் சிறுவனின் குடும்பத்தினர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இருப்பினும், தாங்கள் நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ராகேஷின் குடும்பத்தினர், அவர் எடுத்துச் சென்ற நகைகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினர்.
குடும்பத்தினர் நான்கு வளையல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அவர் இரண்டு வளையல்களை மட்டுமே வாங்கியதாகவும் அவர்கள் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு