You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓசூரில் அரசு ஊழியர் 'கார் ஏற்றி கொலை' - திமுக நிர்வாகி மகன் கைது குறித்து காவல்துறையின் விளக்கம்
ஓசூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அரசு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் திமுக மீது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சி நடப்பதாகவும் அரசியல் தலைவர்களால் புகார்கள் கூறப்பட்டன.
ஆனால் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் நீதிமன்றத்தில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று ஓசூர் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
'திமுக நிர்வாகியின் மகன் என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை' என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பிபிசியிடம் கூறினார்.
வீட்டுக்கு முன்பாக நிறுத்தியிருந்த டூ வீலரை எடுப்பதில் மோதல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலாளர் நலத்துறையில் உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சிவமூர்த்தி. இவருடைய வீடு, ஓசூர் ராயக்கோட்டை அன்னை அரவிந்த் நகரில் உள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதியன்று மாலையில் இவருடைய வீட்டின் முன்பாக உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக இவருடைய குடும்பத்தினருக்கும், காரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது காரில் வந்தவர்கள், வேகமாக இவர்கள் மீது காரை மோதியதில் சிவமூர்த்தி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, அன்று மாலை 6 மணியளவில் சிவமூர்த்தி வீடு அமைந்துள்ள வீதியில் ஆதித்யா (வயது 20), ரித்திக் குமார் (வயது 20) ஹரீஷ் (வயது 19) ஆகிய மூன்று பேரும் ஒரு காரில் வந்துள்ளனர். அப்போது சிவமூர்த்தியின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சிவமூர்த்தி, அவருடைய மகன் கிருபாகரன், மருமகள் அம்சவல்லி மற்றும் பேத்தி நிலானி ஆகியோர் வெளியே வந்துள்ளனர். வண்டியை எடுப்பதில் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. மோதல் முற்றிய நிலையில் ஆதித்யா காரை எடுத்து சிவமூர்த்தியின் குடும்பத்தினர் மீது வேகமாக மோதியுள்ளார்.
இதில் சிவமூர்த்தி, கிருபாகரன், அம்சவல்லி மற்றும் சிவமூர்த்தியின் பேத்தி நிலானி ஆகியோர் காயமடைந்துள்ளனர். சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே சிவமூர்த்தி உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆதித்யா, ரித்திக் குமார், ஹரீஷ் ஆகிய 3 பேர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிவமூர்த்தி, தொழிலாளர் துறையில் உதவி தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர். காரை மோதி அவர் உயிரிழக்கக் காரணமான ஆதித்யா, திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான சீனிவாசனின் மகன்.
இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் காரில் வந்து, சிவமூர்த்தியின் குடும்பத்தினரை தாக்கி, கைதாகியுள்ள மற்றவர்களும் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது ஓசூர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்டவற்றை குறிக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஓசூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, ''சம்பவத்தின்போது குற்றம் சாட்டப்பட்ட3 பேரும் மது போதையில் இருந்துள்ளனர். வண்டியை எடுப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போதே, சிவமூர்த்தியை அங்கிருந்த ஒரு கம்பை எடுத்து 3 பேரும் தாக்கியுள்ளனர். அதற்குப் பின்னும் கோபம் தணியாமல் காரை எடுத்த ஆதித்யா, அவர்கள் மீது காரை வேகமாக மோதியிருக்கிறார். அதில் சிவமூர்த்தி கீழே விழுந்து கால் முறிந்துள்ளது. கார் மோதியதில் அவர்கள் எல்லோருமே காயமடைந்துவிட்டனர்.'' என்றார்.
காவல்துறையினர் அங்கே வரும் வரை, வேறு யாரும் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறும் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், ஒரு வேளை 'கோல்டன் ஹவர்ஸ்' எனப்படும் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
திமுக நிர்வாகியின் மகன் காரை ஏற்றியதில் அரசு ஊழியர் ஒருவர் இறந்ததாக ஊடகங்களில் வேகமாகத் தகவல் பரவியது. இது சமூக ஊடகங்களில் மிகக்கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிப்பதிவு!
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடந்த இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த சம்பவத்தைக் கண்டித்து வெளியிட்ட பதிவில், ''ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் திமுகவினர் வெறியாட்டம்'' என்று கூறியிருந்தார்.
இதேபோன்று பல்வேறு பகுதிகளில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்த அவர், சில வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுமக்கள் மீது திமுகவினர் நடத்தும் இந்த தாக்குதல் நிகழ்வுகள், அரசின் தோல்வியைக் காட்டுகின்றன என்றும் கூறியிருந்தார். டிடிவி தினகரனும் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, ''குற்றவாளிகளின் புகைப்படம் எதையும் மறைக்கவில்லை. அதேபோன்று சம்பவம் நடந்தபோது அப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிப்பதிவு முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. யாரையும் காப்பாற்ற வேண்டுமென்று எங்கிருந்தும் எந்த அரசியல் அழுத்தமும் எங்களுக்கு வரவில்லை.'' என்றார்.
திமுக நிர்வாகி மகனால் காரை ஏற்றி கொல்லப்பட்டுள்ள சிவமூர்த்தியின் குடும்பத்தினரும் திமுகவைச் சேர்ந்தவர்களே என்று பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரகாஷ், இந்தச் சம்பவம் பெரும் வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார்.
இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி, திமுக நிர்வாகி மகன் என்பதற்காக அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூவர் மீதும் கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இனிமேல் சட்டம் தன் கடமையைச் செய்யும். தேர்தல் நேரம் என்பதால் இந்த விஷயத்தை ஊதிப்பெரிதாக்குவதற்கு அதிமுக முயற்சி எடுக்கிறது.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு