You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நான் பார்த்த தெஹ்ரான் அல்ல' - இரான், சௌதி, துபையில் வசிக்கும் இலங்கை மக்கள் கண்டது என்ன?
- எழுதியவர், ஆர்.யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், அங்கு வாழ்வாதாரத்திற்காகச் சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டாலும், போர் இடம்பெறும் நாடுகளில் உள்ள இலங்கையர்கள் துயரத்தையும் தினசரி மரண அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
'நான் பார்த்த தெஹ்ரான் இதுவல்ல'
இரானின் தலைநகர் தெஹ்ரானில் வாகனச் சாரதியாகப் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் (பாதுகாப்பு கருதி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது), அங்குள்ள தற்போதைய கோரமான சூழலை பிபிசி தமிழுக்கு விவரித்தார்.
"நாங்கள் இவ்வளவு காலம் பார்த்த தெஹ்ரான் இப்போது இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டுத் தாக்குதல்களின் அழிவுகளையே காண முடிகிறது. குடியிருப்பு வீடுகள், வர்த்தக நிலையங்கள் என அனைத்துமே ஏவுகணைத் தாக்குதலில் சிதைந்து போயுள்ளன," என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை உணர முடிகிறது. இவ்வாறான அழிவுகளில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதே தெரியவில்லை. இறைவன் எம்மோடு இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.''
இஸ்ரேல் - 'வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்'
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, குடும்ப வாழ்வாதாரத்திற்காக இஸ்ரேல் சென்ற சமிந்த, அங்கிருந்து தனது இக்கட்டான சூழலை விவரித்தார்.
"இலங்கையில் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே கஷ்டப்பட்டு இங்கே வேலைக்கு வந்தேன். ஆனால் தற்போது இங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்த சூழலில் நிம்மதியாகச் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் பாதுகாப்பு பலமாக இருந்த போதிலும், தற்போது பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அண்மையிலேயே ஏவுகணைகள் விழுந்துள்ளன. எம்மை குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது," என்கிறார் சமிந்த.
தொடர்ந்து பேசிய அவர், "வடக்கு இஸ்ரேலில் இருந்து ஏனைய பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்களை அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தூதரகத்தின் ஊடாக எம்மைப் பாதுகாக்கும் முயற்சிகள் நடந்தாலும், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாத சூழல் உள்ளது. எனது குடும்பத்தினர் என்னை எப்படியாவது வரவழைக்க முயற்சி செய்கின்றனர். அவர்களின் வேதனையை என்னால் விளங்கிக்கொள்ள முடிகின்றது, ஆனால் இப்போதைக்கு இங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்," எனத் தெரிவித்தார்.
ஜோர்டான் - 'வானில் ஏவுகணைகள் மாறி மாறிப் பறக்கின்றன'
மத்திய மாகாணத்தின் கந்தப்பளையைச் சேர்ந்த மதுசான், ஜோர்டானில் இருந்து தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
"இங்கே நிலைமைகள் சாதரணமாகத் தெரிந்தாலும், எமது இருப்பிடங்களில் இருந்து பார்க்கையில் வானில் ஏவுகணைகள் செல்வதை தெளிவாகப் பார்க்க முடிகின்றது. இஸ்ரேல் - இரான் நாடுகளின் ஏவுகணைகள் மாறி மாறி வானில் பறப்பதைக் காண முடிகின்றது. இதனால் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கின்றது. யுத்தம் நிகழும் ஏனைய நாடுகளில் உள்ள எமது உறவுகளை நினைக்கையில் நிம்மதியை இழந்தவர்களாகவே நாமும் உள்ளோம்," என்கிறார் மதுசான்.
சௌதி அரேபியா மற்றும் துபையில் பரவும் பதற்றம்
ரியாத்தில் பணியாற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மத் ரிகாஸ் கூறுகையில், "பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே கடுமையாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் குதங்கள் மற்றும் தூதரகங்கள் மீதான தாக்குதல் முயற்சி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யுத்தம் முடியும் வரை நிம்மதியாக வாழ முடியாது என்பதை உணர முடிகிறது," எனத் தெரிவித்தார்.
இதேவேளை, துபையின் பால்ம் ஜுமேரா பகுதியில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர், "கடந்த ஒரு வாரமாகத் தூக்கத்தைத் தொலைத்து மிகுந்த அச்சத்துடன் விழித்திருக்கிறோம். நான் பணிபுரியும் பகுதியில் மிகப்பாரிய சத்தத்துடன் தீ பரவியது. அந்த அதிர்ச்சி எம்மை மனதளவிலும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது," எனத் தெரிவித்தார்.
தூதரகங்கள் சொல்வது என்ன?
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தற்போதைய கள நிலவரம் குறித்துக் கூறுகையில், "இங்கு போர்ச் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. குறிப்பாக வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்," எனத் தெரிவித்தார்.
மேலும், "இதுவரை ஓர் இலங்கையர் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளார். ஏனையோருக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்ற போதிலும், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கான விசா மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளையும் தூதரகம் செய்து கொடுத்துள்ளது," என அவர் உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இலங்கை தூதர் அருஷா குரே, இலங்கையர்களுக்குப் பாதிப்புகள் இல்லை என்றும், விமானச் சேவைகளின் மட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்த தூதரகம் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
லெபனானின் உள்ள 7,500 இலங்கையர்களில் 22 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தரவாதம்
மத்திய கிழக்கு நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, "வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிந்த மற்றும் பதியாத சுமார் 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தால், இராஜதந்திர உறவுகளின் ஊடாக அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன," எனக் குறிப்பிட்டார்.
நாடு வாரியாக இலங்கையர்களின் விவரங்கள்
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை விபரங்களை முன்வைத்தார்.
அதற்கமைய குவைத்தில் 3,22,437 பேரும், சௌதி அரேபியாவில் 2,43,593 பேரும், கத்தாரில் 2,03,182 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1,70,468 பேரும், ஓமனில் 36,812 பேரும், இஸ்ரேலில் 27,472 பேரும், ஜோர்டானில் 24,182 பேரும், பஹ்ரைனில் 14,374 பேரும், லெபனானில் 7,925 பேரும், இராக்கில் 641 பேரும், ஏமனில் 16 பேரும், இரானில் 10 பேரும், சிரியாவில் 7 பேரும் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
இதுவே அரசாங்கத்திடம் உள்ள உத்தியோகபூர்வ எண்ணிக்கையாகும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், "இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள சகல தரப்பினரும் மோதல்களைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு," என அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு