You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய தொழிலாளர்கள் மீது "இனவெறித் தாக்குதல்" - இஸ்ரேல் கூறுவது என்ன?
இஸ்ரேல் நகரமான அஷ்கெலோனில் இரண்டு இந்தியத் தொழிலாளர்களைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அஷ்கெலோன் நகரில் இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியத் தொழிலாளர்கள் மீதான இந்தத் தாக்குதலை ஒரு திட்டமிட்ட இனவெறித் தாக்குதல் என்று அந்த செய்தி விவரித்துள்ளது.
இஸ்ரேலின் தெற்கு நகரமான அஷ்கெலோன், டெல் அவிவ் நகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், காஸாவிற்கு அருகிலும் அமைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரேலிய ஒளிபரப்பு நிறுவனமான கேஏஎன், இதை ஒரு "வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட இனவெறித் தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளது.
ஒரு பொதுப் பூங்காவில் இரண்டு பேர் ஒரு கும்பலால் தாக்கப்படுவதை அந்த வீடியோ காட்டுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அடுத்த வாரம் இஸ்ரேலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோதி "அடுத்த வாரம்" இஸ்ரேலுக்கு வருகை தருவார் என்றும், இஸ்ரேல் இந்தியாவில் "மிகவும் பிரபலமாக" உள்ளது என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று தெரிவித்தார்.
துருக்கியின் டிஆர்டி வேர்ல்ட் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
வீடியோவுடன் இணைக்கப்பட்ட எபிரேயக் குறிப்பு, இந்தத் தாக்குதலை "இனவெறி மற்றும் தீய எண்ணத்தால்" தூண்டப்பட்ட, 'முன்கூட்டியே திட்டமிடப்பட்ட' தாக்குதல் என்று விவரித்தது. "தாக்குதல் நடத்தியவர்கள் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு, பின்னர் அப்பகுதியில் இருந்த இந்தியத் தொழிலாளர்களைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது"என்கிறது அச்செய்தி.
"அந்தக் குழு தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு, பட்டப்பகலில் இந்தத் தாக்குதலை" நடத்தியதாக அந்த ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ செய்தி பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்ட போதிலும், இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
இஸ்ரேலில் இந்திய தொழிலாளர்களுக்கு தேவை அதிகமாக இருப்பது ஏன்?
இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், காயமடைந்தவர்களின் நிலையை உடனடியாக உறுதிப்படுத்தி, இந்த பிரச்னையை இஸ்ரேல் அதிகாரிகளிடம் முன்வைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பயணத்தின் போது, இந்திய குடிமக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இனவெறித் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோதி பேசுவாரா என்ற கேள்வியையும் அந்த பதிவு எழுப்பியுள்ளது.
அக்டோபர் 2023-ல், ஆயிரக்கணக்கான பாலத்தீன தொழிலாளர்களின் பணி அனுமதியை இஸ்ரேல் ரத்து செய்தது, இது அங்கு தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர் அமைப்புகள், பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பணியமர்த்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இஸ்ரேலுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்பு விமர்சித்துள்ளன.
2024 ஆம் ஆண்டில், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசம் உட்பட குறைந்தது இரண்டு மாநிலங்களில் இஸ்ரேலுக்காக 10,000 கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதாக இந்திய அரசு விளம்பரம் செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையேயான உறவு
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் வரலாறு மிக வேகமாக மாறியுள்ளது.
1992-ல் முறையான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதில் இருந்து, பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது.
இருப்பினும், அரபு நாடுகள் மற்றும் பாலத்தீன அரசுக்கு இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டியிருந்ததால், நீண்ட காலமாக இந்தியா இஸ்ரேலுடனான தனது உறவை ஒப்பீட்டளவில் வெளிப்படையற்றதாகவே வைத்திருந்தது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட பயணம் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.
பிரதமர் மோதியின் பதவிக்காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமடைந்துள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பலமுறை இந்தியாவை இஸ்ரேலின் சிறந்த நண்பர் என்று விவரித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு